Monday, June 19, 2017

கவிநுகர்பொழுது-15

கவிநுகர்பொழுது-15
----------------------------------------------------------------------------------------------------
                               --தமிழ்மணவாளன்
(கவிஞர் கடங்கநேரியானின்,’யாவும் சமீபத்திருக்கிறது’, கவிதைத் தொகுப்பை முன்வைத்து)
ஒருகவிதையைவாசிக்கிறபோதுஎழும்உணர்வும்அனுபவமும்அக்கவிதைநம்மிடத்தில்கடத்தும்விஷயம்,கடத்தும்விதம்,அதற்குமுன்னரோஅப்பொழுதோஅக்கவிதையின்பொருளோடுநமக்கிருக்கும்தனித்ததொடர்புஆகியவையின்பாற்பட்டது. இதில்எழுதியவர்குறித்தஎவ்விதஅறிதலும்அவசியமில்லைதான்.பிரதிமட்டுமேபோதுமானது.பொட்டலம்மடித்துவந்ததாளின்மூளையில்எழுதியவரின்பெயரில்லாதஇரண்டுவரிகள்தூங்கவிடாமல்செய்துவிடுவதுண்டு.நம்காலத்திற்குமுந்தையபடைப்பாளிகளின்படைப்புகளைவாசிக்கிறபோதுஅவர்கள்குறித்தசெய்திகளும்உடன்வருமாறுஇலக்கியவரலாறுநம்முள்பதிந்திருக்கிறது.ஆனால்எல்லாப்புலவர்களின்குறிப்புகளும்கிட்டியதில்லை.இன்னும்சொல்லப்போனால்பெயரேஅறிந்திராமல்பாடல்மட்டுமேகிடைக்கப்பெற்றுஅப்பாடலின்ஈர்க்கும்சொல்லொன்றின்பெயராய்மாறியவர்களையும்நாமறிவோம்.
சமகாலக்கவிதைகளைவாசிக்கிறபோதும்குறிப்பாகவாசிப்புக்குப்பின்அக்கவிதைகுறித்துபதிவுசெய்கிறபோதும்அம்மாதிரியேதனித்தபடைப்பினூடாக மட்டும்இயங்குவதுதான்சரியாகும். எனினும்சகபடைப்பாளியாகஉடன்இயங்குபவரின்படைப்புபற்றிஅவ்வாறுகருத்துமுன்வைப்பதுமுற்றிலும்சாத்தியமாஎனும்கேள்வியும்இயல்பாகவேஇருக்கிறது.
சமூகத்தின்கரடுமுரடானவெளியில்எவ்விதசுயசாதுர்யங்களையும்திட்டமிடாமல்யாவர்க்கும்புலப்படும்இடமொன்றில்நின்றபடிகண்ணில்படுமெதனையும்கேள்விக்குள்ளாகும்மனநிலையும்மனத்திற்குதவறெனெப்பட்டால், எவ்விதஇலாபநஷ்டக்கணக்குகளுக்கும்இடமின்றிஎதன்பொருட்டேனும்எளியசமரசங்களுக்குஆட்படுத்திக்கொள்ளாமல்இலக்கியத்திற்கிணையாகஅரசியல்,சமூகக்கருத்துகளைதொடர்செயல்பாடாககொண்டிருக்கும்கடங்கநேரியான்போன்றோரின்கவிதையைப்படிக்கிறபோதுஇவ்வுணர்வைத்தவிர்ப்பதென்பதுஅத்தனைஇலகுவானதில்லை.
கடங்கநேரியானின் ,’யாவும்சமீபத்திருக்கிறது’, தொகுப்பைப்பலமாதங்களுக்குமுன்பேவாசித்துவிட்டேன். எழுதுவதற்கானஅவகாசம்இப்போது தான்வாய்த்திருக்கிறது.
கவிதைகளைவாசிக்கத்தொடங்கும்போதுமுதற்கவிதையிலேயே
                இவர்கள்அனைவரும்
                புருவம்உயர்த்தும்படியான
                புன்னகைஒன்றுகைவசமிருக்கிறது
என்னும் வரிகள் கண்ணில் படுகின்றன.
இந்தவரிகள்மேலேதொடர்வதற்குஇலகுமனத்தினையும்இணக்கமனோநிலையையும்வழங்குகின்றன.அதனாலே,அவர்கைக்கொண்டிருக்கும்புன்னகைஅனைவரும்புருவம்உயர்த்தும்படியானதுஎனச்சொல்லத்தோன்றுகிறது.
’மனப் பிறழ்வின்நிழலில்’, என்ற கவிதையிலிருந்து தொடங்கலாம்.
                மனப் பிறழ்வின் நிழலில்
                கண்ணயர்ந்து கிடக்கிறது
                மரணம்.
                தயை கூர்ந்து
                கல்லெறியாமல்
                செல்லுங்கள்.
                ஒற்றை இலை
                உதிர்ந்ததைத் தாங்க வியலாமல்
                தான்
                இப்படி கிளை பரப்பி
                வளர்ந்து நிற்கிறது.
முதல் கவிதையாக இதனைப் பேசத் தொடங்கியதற்குக் காரணம், சில சொற்களைக் கொண்டு கட்டமைக்கப் பட்டிருக்கிற இக்கவிதை வாசிப்பில் ஆகப் பெரும் சாத்தியங்களை மனத்தில் உருவாக்குகிறது என்பதால் தான்.இடையில் வரும் வரியை முதலில் கவனித்து விட்டால் மூலத்தின் ஆழம் செல்வது எளிதாகும்.
                தயை கூர்ந்து
                கல்லெறியாமல்
                செல்லுங்கள்.
கல்லெறியாமல் செல்லச்சொல்வதன் காரணம் கல்லெறிந்து விடுவதற்கான எல்லாவித முனைப்போடும் ஆட்கள் இருக்கிறார்கள் என்பது தானே?.சரி.எப்படி அந்த ஆட்களைக் கண்டுபிடித்தது கவி மனம்.ஏற்கனவே எறிந்தவர்களா?ஆம்.
இப்படிக் கிளை பரப்பி வளர்ந்து நிற்கிற மனப்பிறழ்வின் நிழலில் தான் மரணம் கண்ணயர்ந்து கிடக்கிறது.மனம் என்பது மரமானால் பிறழ்வு என்பது நிழலா? அல்லது மனப்பிறழ்வு என்பது மரமானால் மரணம் என்பது நிழலா?மரணம் கண்ணயர்ந்து கிடக்கிறதென்றால் விழிக்காத மரணம் எப்போது வேண்டுமானாலும் விழிக்கும் சாத்தியம் கொண்டதா? அதனால் தான், யாரோ முன்னர் எறிந்த கல்லால் ஒற்றை இலை உதிர்ந்ததைத் தாங்கவியலாமல் கிளை பரப்பி நிற்கிறதா மரம்?. மரம் என்னும் சொல்லோ விருட்சம் என்னும் சொல்லோ
கவிதையில் இல்லை.ஆனால், வாசக மனத்தில் அரூப மரமொன்றை கிளைபரப்பிட முடியும் ஒரு நல்ல கவிதையால்.

                இறுதித்துளி மதுவுக்கும்
                முதற் துளி நஞ்சுக்கும்
இடையே சிக்கித்தவிக்கும்
வாழ்வு
என்றொரு கவிதை.பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே சிக்கித்தவிக்கும் வாழ்க்கை என்பது இயல்பானது.அதற்கு மாறாக வாழ்க்கை குறித்து வரையறை செய்ய வாழ்வின் தருணங்களில் இருந்து பலவும் கூறவியலும்.இவர்,மதுவுக்கும் நஞ்சுக்கும் இடையே என்கிறார். மது என்பதும் நஞ்சு தானே.எப்போது?நஞ்சு முதற் துளியிலேயே நஞ்சு.மது குடித்துக் குடித்துத் தீரும் பொழுதின் கடைசித் துளியில் நஞ்சு.இப்போது மதுவுக்கும் நஞ்சுக்கும் இடையில்சிக்கி மட்டையாகும் வாழ்க்கை விரிகிறதா?
அதனாலே தான்,
                மீனும் உண்ணும்
                கரையில் துள்ளும் சமுத்திரத்தை எனும்
                சூட்சுமம் அறியாமலே
                விளையாடிக் கொண்டிருக்கிறோம்
                இவ்வாழ்வென்னும் விளையாட்டை
என்று பிறிதொரு கவிதையில் கேள்வி எழுகிறது.

இன்றைக்கு விவசாயிகள் படும் துயரம் சொல்லி மாளாதது.விதைத்து விளைவித்து அறுத்து பத்தாயத்தில் குவித்து ஆண்டு முழுதும் உண்ணவும் ஊருக்கெல்லாம் வழங்கவும் வேண்டிய விவசாயியின் துயரம் சொல்லி மாளாது.
விதை நெல்லையே விற்று விட்டால் விளைவு?
                விற்ற விதை நெல்
                திரும்பக் கிடைத்தது
                வாய்க்கரிசியாக
வேறெப்படி அவன் துயர் பேசிவிட முடியும்.

பிரணவ் குட்டிக்கு எல்லாம் தெரிகிறது.குழந்தை.தாய் கிளம்பும் போது துப்பட்டா எடுத்துக் கொடுக்கவும் தந்தை கிளம்பும் போது காலைக் கட்டிகொண்டு பைக்கில் சுற்றிவரச் சொல்லவும் தெரிகிறது.ஒன்றரை வயதே ஆகும் பிரணவ்குட்டிக்கு டாட்டா காட்டவும் ஏன் சாமி கும்பிடக்கூடத் தெரிகிறது.
ஆனால்,
                அப்பா அம்மா சண்டையின் போது மட்டும்
                என்ன செய்ய வேண்டுமெனத் தெரியாமல்
                சுவரை உற்றுப் பார்த்து அழத் தொடங்குகிறது
குழந்தை.அதற்குப் பிடிக்காது.தாய் தந்தையின் சண்டை பிரணவ் குட்டிகளுக்கு ஒரு போதும் பிடிப்பதில்லை.எனவே தான் அழத்தொடங்கும் போது கூட சுவரைப் பார்த்து அழத் தொங்குகிறது, பார்க்கப் பிடிக்காமல்.

‘நதியின் மரணம்’, கவிதை ஒரு முழுமை பெற்ற கவிதை.நதி வறண்டு போய்க்கிடக்கும் காட்சியை சொற்களில் கட்டமைத்திருக்கிற விதம் கவனிக்கத்தக்கது.
                பச்சையம் தீர்ந்த கோரைகளையும்
                பாசிகளையும் கொண்டு
                நெருப்பை உருவாக்குகின்றன
                கூழாங்கற்கள்
                உயிரற்ற மீன்களிலிருந்தெழும்
                துர்வாடையை சகிக்காமல்
                நாசியை மூடிக் கொண்டது காற்று.
                உடைந்து கிடக்கும் மதகுகள்
                நதிக்கு சிதை விறகுகளாகின்றன.
மரணமடைந்த நதியின் உடலத்தினை தீ வைத்தெரிக்கும் சிதைக்கு, பயனற்ற மதகுகள் விறகாகின்றன.உச்சமான சோகச் சித்திரம். அதையும் விஞ்சும் அடுத்தவரி,
                மீன்முள் நெஞ்சுகீற
                ரத்தம் கசியக் கிடக்கிறதென் நதி.
                வான் பறக்கும் கொக்கு
                மேகத்தைக் கொத்திப் போடுமென்று
                சிறிதளவு நம்பிக்கையும் லாரியோடு போயிற்று
                மண்ணோடு மண்ணாக
என் நதி எண்று இயல்பாய் இழையோடும் உரிமைக்குரல் தான் முழுக்கவிதைக்கான சாட்சியம்.நதியின் மரணத்தை அதிகபட்சமான படிம உத்திகளோடு கூடிய துயர் வெளியாய் வறண்டு விரிகிறது.

மனம் சமநிலை குலைகிற தருணம் மனப்பிறழ்வு உருவாகிறது.எவ்விதமான அதீத உணர்வு நிலையுமே மனப்பிறழ்வின் ஒரு வடிவம் தான். தான் என்கிற சுயத்துக்கும் புற உலகுக்குமான தொடர்பு, உறவு புரிதலற்றுப் போகும் சமயம் அது.மனச்சமன் பிறழ்வுறுவதற்கான கால இடைவெளி அநேகாய் மிகக்குறைவானதே.மனப்பிறழ்வு கொண்டவர்களின் நடவடிக்கைகள் அவர்களின் தோற்றங்கள்ஆகியன அவர்களின் பிறழ்வு மனத்துக்கு மிக நெருக்கமானவை.
                சிகையலங்காரத்தில் சிலுவையில் அறையப்பட்ட
                தேவகுமாரனைப் போலிருக்கிறான்
                ஒருசாயலில் கங்கையைத் தன் சிகையில் முடிந்திருக்கும்
                சிவனைப் போலிருக்கிறான்
                உடையலங்காரத்தில் சமணத்துறவிகளை
                நினைவு படுத்துகிறான்
என்னும் மனப்பிறழ்வாளனின் தோற்றம்
                ப்ளாஸ்டிக் குவளையில் தேநீர் அருந்தியபடி
                எதிர்புற கழிவு நீர் ஓடையில்
                தேங்காய் சிரட்டையில் நீரள்ளிப் பருகுகிறவனைக்
                கவனிக்கிறேன்
தோற்றம் செயல் இரண்டும் மனப் பிறழ்வாளனுக்குரிய எல்லா அம்சங்களும் அல்லது அம்சமின்மைகளும் பொருந்தியுள்ளதை உணர்ந்து
மனப் பிறழ்வு
மிகச் சமீபத்திருக்கிறது…

என்று முடியும் கவிதை.இது ஏதோ மனப்பிறழ்வுக்கு உள்ளாகப் போகிற ஒருவனின் முன்பொழுதுச் சித்திரமல்ல. கவிதை காட்டுவது அது போலத்தான் எனினும் தோற்றங்கள் கவிதையில் சொல்வது தானா? மாறாக டிப்டாப் உடையணிந்த மனங்களில் பிறழ்வு நெருக்கமாக இல்லையா.அவன் என்பதற்குள் அவள் இல்லையா?எல்லாம் தான்.எல்லோரும் தான்.சமீபத்திருக்கிற மனப்பிறழ்வின் தூரத்தை மேலும் குறைந்து, அண்ட விடாது எச்சரிக்கையாக இருக்க வேண்டியது எத்தனை முக்கியமானது.       
’ப்ளாஸ்டிக் குவளை’, என்ற சொல் அதன் பயன்பாட்டைப் பொருத்தமட்டில் அங்கீகரிக்கப்பட்ட மனப்பிறழ்வின் சாட்சி தானே?

                சாட்சிக் கூண்டின்
                பிடிகம்பிகளுக்கிடையில்
                மாட்டி இறந்து போன எலியொன்றின்
                துர்வாடையால்
                நீதி வெளியேறி வெகு காலமாயிற்று
என்று நீதியற்ற, நீதி மறுக்கப் படுகிற, நீதி மறைக்கப் படுகிற, நீதி காலதாமதப் படுத்தப் படுகிற, நாற்றமெடுத்த மன்றங்களின் துர்வாசனையை கடங்குவால் இத்தனை அறுதியாய்ச் சொல்லமுடிகிறது.

கடங்கநேரியான் காதல் கவிதை எழுதியிருக்கிறார்.
                சமீபமாக
                யாதொரு இதழிலும்
                என் கவிதை பிரசுரமாகவில்லை
                கொஞ்சம்
                உன் இதழ்களைக் கொடேன்
கேட்பதற்கான காரணம் இதழ்கிடைக்கும் சாத்தியத்தையே குலைத்து விடுமோவெனும் அச்சம் இருக்கிறது.

                மதுக் குவளைக்குள் மிதக்கும்
                பனிக்கட்டிகள்
                பனிப்பிரதேசங்களிலிருந்து
                தருவிக்கப்பட்டவையல்ல.
                ஐஸ்ஹவுஸ் போராட்டம்
                வெள்ளையானை
                என நீட்டி முழக்கிவியர்வை குடிக்கும்
கானல் சொற்கள்
என்னிடமில்லை
இது போதாதா?மிச்சம் வெளியே தொடராதா?
                கன்னக் கதுப்புகளில் வழிந்தோடும்
                அவள் நினைவுகள்  தான்
                அத்துண்டங்கள்
அழகான இப்படிமத்தை வெள்ளையானையும் கானல் சொற்களும் தொல்லை செய்கின்றன.அவற்றை வேறு வீட்டில் வைத்து வாழ்ந்திருக்கலாமோ வெனத்தோன்றுகிறது.
                கன்னக் கதுப்புகளில் வழிந்தோடும்
                அவள் நினைவுகள்  தான்
                பனிக்கட்டிகள்
எனக்கு மிக மகிழ்வாய் முடித்துக்கொள்கிறேன் அரசியல் உரசல் ஏதுமின்றி.

                நீந்தத் தெரியாமல்
                மதுக்குடுவைக்குள் தத்தளிக்கிறான்
கடவுள்
ரொம்பச்சரி.
                சூரியப்பறவை
                கடலுக்கடியில் கூடுகட்டும்.

****************
                நினைவுத் தாழ்வாரத்தில்
                பற்றிப்படர்ந்தோடுகிறது
                பதின் பருவத்து மலரொன்று
என்கிறார்.

மிக முக்கியமான கவிதை ஒன்று இத்தொகுப்பில் உண்டு.
                சாவுக் கொட்டுச்
                சத்தமில்லை
                சாராயமருந்தி யாரும்
                சலம்பவுமில்லை
                முன்னும்
                பின்னும்
                யாரும் வரவும் இல்லை
அழவுமில்லை.
தனியே
தூக்கிச் செல்கிறது நதி
மயானம் வரை
பிணம் சுமந்து வந்த மாலையை
மரணத்திற்குப் பின் நாம் என்னவாக மதிக்கப் படப்போகிறோம்.நம்மைச் சுமக்க எத்தனை பேர் இருப்பார்கள். நாம் சம்பாதிப்பது என்பது மனிதர்களை இல்லையா?நம் வாழ்க்கை மரணத்திற்குப் பின்னும் அனாதையென்பது எவ்வளவு வக்கிரமான மனக் கேடு. அழுகிக் கெட்டுவிடும் என்பதற்கான அப்புறப்படுத்தலுக்குரிய பொருளாய் உடலம் மாறிப் போவது எத்தனை துயரம்.பிணம் சுமந்த மாலையைப் பிணமாய்ச் சுமந்து செல்கிறது நதி.அனேகமாய் கவிதை தோன்றிய கதையைச் சொல்ல வேண்டிய கட்டாயம் இக்கவிதைக்கு நேர்ந்ததை நானறிவேன்.யாரையும் ஒரு கணம் நிறுத்தி பின் கடக்கச் செய்யும் கவிதை இது. உள்ளுணர்வில் உரசக் கூடியது.பலராலும் பரவலாய்க் கொண்டு சேர்க்கப்பட்ட கவிதையென்னும் சிறப்பும் இதற்கு உண்டு.

கடங்கநேரியான் கவிதைகளை வாழ்க்கைக்குள்ளிருந்து கண்டுபிடிக்கிறார்.ஆனால் வாசகனைக் கவிதைக்கு வெளியே நிரம்பப் பயணப்பட வைக்கிறார். உண்மை நிறைந்த, பாசங்குகளற்ற  வாழ்வின் தரிசனங்களை அழகிய படிமங்களோடும் சொற்சிக்கனத்தோடும் கவிதையாக்கியிருக்கிறார்.

கடங்கநேரியான் எனக்குப் பிடித்த கவிஞர் என்று சொல்வதற்கு அவர் மட்டுமல்ல அவரின் கவிதைகளும் பெருமளவில் காரணமாக இருக்கின்றன என்பது மகிழ்ச்சி தானே.


கடங்கநேரியானுக்கு எப்போதும் என் அன் வாழ்த்துகளும்.

Thursday, June 15, 2017

தமிழ்மணவாளன் நூல் அறிமுகக் கூட்டம்

தமிழ்மணவாளனின் ,’உயிர்த்தெழுதலின் கடவுச்சொல்’, கவிதை நூல் குறித்த அறிமுகக்கூட்டம் , சென்னை தி.நகர் தக்கர் பாபா அரங்கில் 24-06-2017 மாலை 0530 மணிக்கு நிகழ்கிறது..விழாவில் பாரதி கிருஷ்ண குமார் சிறப்புரையாற்றுகிறார்.
ஜெயந்தனின் சிந்தனைக் கூடல் மற்றும் the Roots சார்பாக நடைபெறும் கூட்டத்திற்கு கல்வியாளர் சௌமா இராஜரெத்தினம் தலைமையேற்கிறார்.
கவிஞர் இளம்பிறை, வே .எழிலரசு, நா.வே.அருள், ஜீவகரிகாலன் ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர்.
சீராளன் ஜெயந்தன் வரவேற்புரையாற்ற கவிஞர் நவமணி சுந்தர ராஜன் நன்றியுரையாற்றுகிறார்.
அனைவரும் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பிக்குமாறு அன்புடன்
 

Sunday, February 5, 2017

பிகே என்கிற பேச்சுக்காரன்

                  பிகே என்கிற பேச்சுக்காரன்
                 ------------------------------------------------------

(09-08-2016 அன்று ’இலக்கிய வீதி’, நிகழ்வில் பாரதிகிருஷ்ணகுமார் ஆற்றிய உரையைச் செவிமடுத்தவனாய்)
                                         
                                                      --தமிழ்மணவாளன்                                    
டந்த 09-08-2016 அன்று இலக்கிய வீதி சார்பாக சென்னை பாரதியவித்யாபவனில் தொ.மு.சி. ரகுநாதன்- மறுவாசிப்பு என்னும் இலக்கியச் சொற்பொழிவு நடந்தது. நிகழ்வில் கலந்து கொண்டு தமிழின் மிகச்சிறந்த சொற்பொழிவாளர்களில் ஒருவரான பாரதிகிருஷ்ணகுமார் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அரங்கம் நிரம்பியிருந்தது. நிரம்பியிருப்பது முக்கியமல்ல. இருந்தவர்கள் அனைவரும் செவிகளைத்தவிர எல்லாவற்றையும் ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்திருந்தனர் என்பது தான் சிறப்பு. திறந்து வைத்த செவிகளோடும் தீவிரமான ஈடுபாட்டோடும் பெற்றுக் கொள்ளும் பேரவாவோடும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் எதிரில் இருக்க, திருவிழாக் கூட்டத்தையே பேசத்தொடங்கும் கணத்தில் கட்டுக்குள் கொண்டு வரக் கற்றிருக்கும் பாரதிகிருஷ்ணகுமார் போன்றோர்க்குச் சொல்லவும் தேவையில்லை.வேறு சில இடங்களில், கேட்போரைத் தன்வசம் கொண்டுவருவதற்காய்ச் செய்ய வேண்டிய பிரயத்தனங்களின் தேவையின்மை மேலும் அவருக்கு உற்சாகம் ஊட்டியிருக்குமென நம்புகிறேன்.தெளிந்த நீரோடையென சிறு சிறு சுளிவுகளுடன் கண நேர நுரைமுட்டைகள் தோன்றித்தோன்றி மறைய சிலுசிலுவென பாய்ந்தது உரை.

எழுதுவதற்கும் பேசுவதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது.எழுதுவதற்கு அவகாசம் இருக்கிறது.அவசியமான சூழல்களை உருவாக்கிக் கொள்ள முடியும்.இல்லையெனில் எழுதாமல் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்கிற முடிவுக்கு வரலாம். நாம் படும் பாடுகளை வாசிப்பவர் அறியச் சாத்தியமில்லை. மேடைப்பேச்சு அவ்விதமன்று.நிறுத்தவோ பிறகு பார்த்துக் கொள்ளலாமென நினைக்கவோ முடியாது.
அடித்து எழுதமுடியாது.ஆனால் எழுத்துக்கு நிகராக கருத்தைக் கொண்டு சேர்க்க வேண்டிய காரியம் மட்டும் நிகழவேண்டும்.அப்படி, சுவையாகவும் பயனாகவும் இருக்கும் உரையே மிகச் சிறந்ததாக அமையமுடியும்.அப்படியொரு உரை அன்றைக்கு அமைந்தது.

நான் இங்கு அவர் பேச்சின் கருத்துகளை இயன்றவரை அவரின் சொற்களைக் கொண்டு எழுத முயற்சிக்கிறேன். ஏனெனில், எழுதவேண்டுமென்பதற்காக குறிப்புகளோ ஒலிப்பதிவோ செய்யவில்லை. நினைவில் இருந்தே எழுதுகிறேன்.

      ”இன்றைய வாசிப்புச் சூழலில், முதல் வாசிப்பே அருகிப்போயிருப்பதை அறிய முடிகிறது.முன்பெல்லாம் 2500 நூல்கள் அச்சடித்தது போலில்லை. தொழில் நுட்பத்தின் உதவியால் வெறும் 25 நூல்களை மட்டும் தயாரிக்கிற நிலையிருக்கிறோம்.இந்தச் சூழலில் ஒரு படைப்பாளியின் படைப்புகளை மறுவாசிப்புக்கு உட்படுத்துவதும் அது குறித்து உரையாடுவதும் முக்கியமானது”,என்று குறிப்பிட்டார்.
      ”மறு வாசிப்பு என்பது ஒரு படைப்பை மறுபடியும் வாசிப்பது மட்டுமன்று.அவ்விதமாயின், மறுவாசிப்பு என்பது படைப்பு தன்னளவில் மாறது இருந்தபடியே முதல் வாசிப்புக்கும் மறுவாசிப்புக்கும் இடையிலான காலத்தில் அவனுக்குக் கிட்டியிருக்கும் அறிவின் தெளிவு அல்லது அறிவின் போதாமை இவற்றின் வாயிலாக புதிய பரிமாணங்களைக்கண்டடைவது”,என்றார்.
தொ.மு.சி யின் அணுகுமுறை அவரை மிகுந்த கோபக்காரராக அடையாளம் காட்டினாலும், அவருக்குள் இருந்த ஈரமான- ஈரமனப் பதிவுகளைச் சுட்டி அவரின் மறுபக்கத்தின் தரிசனத்தினைக் காட்டினார்.
தொ.மு.சி எழுதிய நாவல்கள்,கவிதை நூல்கள், சிறுகதைத்தொகுப்புகள், விமர்சனம் மற்றும் ஒப்பிலக்கிய நூல்கள், மொழி பெயர்ப்புகள் ஆகியவை குறித்த மெல்லிய அறிமுகம் கொடுத்தார்.
தொ மு சியின் ஒப்பிலக்கிய நூல்களான ,’பாரதியும் ஷெல்லியும்,’கங்கையும் காவிரியும்’, போன்றவற்றின் சிறப்புகளை முன் வைத்துப் பேசிய பிகே , ’பஞ்சும் பசியும்’, நாவல் நெசவாளர் வாழ்வின் இன்னல்களையும் முக்கியத்துவத்தையும் பேசிய முதல் தமிழ் புதினமாகக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டார்.
மறுவாசிப்புக்காக அவர் மார்க்சிம் கார்க்கியின் ‘தாய்’ நாவல் மொழிபெயர்ப்பையும் பாரதி காலமும் கருத்தும் நூலினையும் எடுத்துக்கொண்டார்.
’தாய்’, நாவல் பலராலும் ஆங்கிலம் வழி தமிழில் மொழிபெயர்க்கப் பட்டிருந்தாலும் ரகுநாதனின் மொழிபெயர்ப்பின் சிறப்பை அடையாளப்படுதினார். தொ.மு.சி தமிழாக்கம் செய்யும் போது தான் ஒரு சிறந்த படைப்பாளியாகவும் அதில் வெளிப்படுவதைச் சுட்டிகாட்டி நம் பண்பாடு கலாச்சாரத்திற்கேற்ப சில சொல்லாடல்களைப் பயன்படுத்தியிருப்பதன் நுட்பத்தைக் குறிப்பிட்டார் பாரதிகிருஷ்ணகுமார்.
பாரதி: காலமும் கருத்தும் நூலின் தனித்துவம் பற்றியும் பாரதி குறித்து தொ.மு.சி வெளிப்படுத்தியிருக்கும் புதிய பார்வை மீதும் விளக்கமான தன் கருத்துகளை முன்வைத்தார்.குறிப்பாக, பாரதிக்கு தேசப்பற்று உருவானதற்கான அடிப்படைக் காரணம், காலம்,சூழல் மற்றும் பாரதி நிவேதிதாவைச் சந்தித்ததன் காலம் போன்றவற்றை தொ.மு.சி நிறுவியிருக்கும் பாங்கு மிக முக்கியமானது என கவனப்படுத்தினார் பிகே. காரணம், பிற ஆய்வுகளைப் போல் புறச் சான்றுகளைக் கொள்ளாமல் பாரதியிடமிருந்தே, அகச்சான்றுகள் வாயிலாக தொ.மு.சி ரகுநாதன் முடிவுகொள்வதன் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டினார்.
தொ.மு.சி குறித்த பறந்த வாசிப்பனுபத்தின் சாரமாக அமைந்திருந்த பாரதிகிருஷ்ணகுமாரின் பேச்சு, தொ.மு.சி யைப் படித்தவர்களை மறுவாசிப்புக்கும் வாசிக்காதவர்களை முதல் வாசிப்புக்கும் தூண்டுவதாக இருந்தது. நல்ல உரையின் நோக்கம் அதுவாகத்தானே இருக்க முடியும். பல பொழிவுகளைத் தொடர்ந்து வழங்கி வரும் பாரதிகிருஷ்ணகுமாருக்கு இந்தப் பொழிவுக்கான என் பாராட்டுகள்;பயன் பெற்றேன்.

நிகழ்வினை ஏற்பாடு செய்த இலக்கிய வீதி இனியவனுக்கு என் அன்பும் மரியாதையும் நன்றியும்.

கவி நுகர் பொழுது-5 நூல் விமர்சனம்

                           கவி நுகர் பொழுது

                                                                
                             (ஈழவாணியின்,' மூக்குத்திப்பூ', கவிதை நூலினை முன்வைத்து)

மகாலக் கவிதைகளைத் தொடர்ந்து வாசிக்கிறபோது, வடிவம் சார்ந்தும் உள்ளீடு சார்ந்தும் பல்வேறு விதமான கவிதைகள் எழுதப்படுவதை அறியமுடியும் . ஒவ்வொருவருக்கும் வாய்க்கும் வாழ்க்கைச் சூழல் அவருக்கான படைப்பின் கருவைத் தீர்மானிக்கிறது; அல்லது தீர்மானிக்கும் உந்துதலைத் தருகிறது.ஈழவாணியின் , 'மூக்குத்திப் பூ ',தொகுப்பை வாசிக்கக் கிடைத்த வாய்ப்பின் பின் , அதன் மீதான எனது கருத்துகளைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.
முதலில், இதில் உள்ள கவிதைகளில் கணிசமானவை ஏற்கனவே, இதற்கு முன்னர் வந்த இவரின் தொகுப்புகளில் இடம்பெற்றவை.அவற்றிலிருந்து, ‘மூக்குத்திப்பூ’, என்னும் இத்தொகுப்பில் எடுத்தாளப்பட்டுள்ளன.இதைக் குறிப்பிடுவதற்கான காரணம், இக்கவிதைகள் எழுதப்பட்ட காலம் பல ஆண்டுகளைக் கொண்டது என்பதைச் சொல்வதற்காகவே.
இந்நூலுக்கு முன்னரை வழங்கியிருக்கும், மு. பொன்னம்பலம் கீழ்க்காணுமாறுக் குறிப்பிடுகிறார்.
'மரபு வழி வந்த கவிதைகளில் ஏற்பட்ட சலிப்பும் அலுப்புமே பலரை புதுக்கவிதைகள் அல்லது வசனக் கவிதைகளுக்கென சில விதிகள் ஏற்பட்ட அவை  ஸ்தாபிதமாக்கப்பட்ட பின் அவற்றையும் உடைத்தெறிந்து கவிதைகளை புதுப்பாதையில் எடுத்துச் செல்லும் முனைப்பே இப்போது மேலெழுந்து உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது';.
என்பதைச்சுட்டி,
                                                            இது எனக்கான கவிதை
                                                             இதைச் சரி செய்யத் தோன்றவில்லை
                                                             என்னூடான பிழைகளோடே
                                                            சுவாசிக்க முனைகிறேன்
                                                             எதற்கு இத்தனை ஆணவமுனக்கு
                                                            முடிந்தால்
                                                             பிழைகளோடே வாசித்துச் செல்
என்னும் கவிதையை மேற்கோளிட்டு,
'இக்கவிதை ஈழவாணியின் மன நிலையை உரித்துக் காட்டுவது போல் உள்ளது', என்கிறார் மு.பொன்னம்பலம்.
இந்த வரிகளைத் தொடரும் வரிகளில் அதற்கான காரணத்தைச் சொல்கிறார்.ஏன் சரி செய்யத்தோன்றவில்லை. பிழைகளோடே இருக்க நினைப்பதன் காரணம் யாது?
                                                        போலி மதிப்புகளில்
                                                         செம்மைப் படுத்த விரும்பவில்லை                                                       
                                                         மறுத்தால் கூட
                                                        மறுபரிசீலனைக்கு இங்கே இடமில்லை
                                                         இவை இப்படியே தான்
                                                         தவறுகளோடானவையாகத்தான்
                                                         பிழைத்துச் செல்லும் ஏனெனில்
                                                          இது எனக்கான கவிதை.
என்கிறார்.
போலிமைகளோடு உடன்படாத மனத்தின் வெளிப்பாடு. யாரும் தவறை ஒப்புக்கொள்வதில்லை.இங்கே மதிப்பீடு என்பது வெறும் போலித்தன்மைகளால் ஆனதாக இருப்பதன் காரணத்தால் தானும் அப்படி ஒரு போலி மதிப்பீட்டில் அல்லது போலி செம்மைத் தன்மையில்  மாற வேண்டுமா? அவசியமில்லை என்பதே இவரின் நிலைப்பாடு. ஏனெனில் இது இவருக்கான கவிதை.

தொடர்ந்து பிறிதொரு கவிதையில்,
                                                                ஒப்பனைகள் எதற்கு
                                                                உரித்துப் போட்ட வார்த்தைகளைத்தான்
                                                               நேசிக்கிறேன் வா
                                                              எனை நிர்வாணமாய் நேசித்துப் பார்
    ஒப்பனைகள் அற்ற வார்த்தைகள் மட்டுமல்ல, உரித்துப் போட்ட வார்த்தைகள். அவற்றை நேசிப்பது மட்டுமல்ல
                                                             எனை நிர்வாணமாய் நேசித்துப்பார்
என்பதில் இருக்கும் அழுத்தம் தொடர்ந்து போலிகளின் மீதிருக்கும் மனவெளிப்பாடு உறுதியாகிறதெனலாம்.
'தேவன்', என்ற தலைப்பிட்ட கவிதையொன்றுஉள்ளே தேவன்களுக்கான பன்மையில் பேசுகிறது.
                                                    இவர்கள் கனவுகளின்
                                                     தேவதையை வெறுப்பதில்லை
என்று தொடங்குகிறது. 'கனவுகளின்  தேவதையை வெறுப்பதில்லை', எனில் இயல்பு வாழ்வில் என்னவாக இருக்கிறார்கள்.இயல்பு வாழ்வில் தேவதையை வெறுக்கிறார்களா? அவ்விதம் தேவதையை வெறுத்தால்- தேவதையையே வெறுத்தால்.....
                                                    இதன் நிமித்தம்
                                                    வெறுப்புகள் உமிழவும்
                                                    உதாசீனங்களை விதைக்கவும்
                                                    நேசங்களை அறுக்கவும் கூட
                                                    வினாடிகளிலும் நிதானிப்பதில்லை
என்கிறார்.'கனவுகளின்  தேவதையை வெறுப்பதில்லை', என்றால் இயல்பு வாழ்வில் வேறாக இருக்கிறதா என்னும் கேள்விக்குப் பதிலாகத் தான்  மேற்கண்டவரிகளைக் கொள்ளமுடியும்.
அதை முற்றிலும் உறுதிப் படுத்தும் விதமாக,
                                                      ஏனெனில்
                                                      நிஜங்களின் பிரசன்னத்தை
                                                      சாத்தான்களாகப் பிரகடனப்படுத்தி
                                                      மனிதப் பெண்மையைச் சபித்து
                                                      இடப்பக்கச் சிலுவைகளாக்குகின்றன
                                                      முட்களிலான முடிகளை மட்டும் சாற்ற...
என்று நிஜ வாழ்வில், தேவன்கள் பெண்மையைச் சபிக்கும் சூழலை எழுதுகிறார்
தேவன்களின் மீதான கோபம் பல கவிதைகளிலும் தொடர்கிறதென்றே தோன்றுகிறது. தொகுப்பு முழுவதும் பல கவிதைகள் இந்த மனோ நிலையை வெளிப்படுத்துபவையாகவே இருக்கின்றன. மேலும் சில கவிதைகளில் காணக்கிடைக்கும் வரிகளை வாசிக்கும் போது அது புலப்படும்.
                                                       உடைந்த மட்பானையாய்
                                                       வெளிஉணரும் காற்றாய்
                                                       எதுவும் அர்த்தப்படாமல்
                                                       பரந்து வெளிகளாய்......
                                                       வார்த்தை இழந்த ஒலிகள் மட்டுமாய்
                                                       அபத்த நகர்வில் தோற்றுப் போகும்
                                                       இருப்புக்கான நிகழ்வுகள்.
வார்த்தை இழந்த ஒலிகள் அர்த்தமற்றவை. அவை வெறும் சப்தங்களே. சிற்சில வேளைகளில் உணர்வெழுச்சியின் வெளிப்பாடாகவும் அச்சப்தங்கள் அமையக்கூடும். அழுகையாய், விசும்பலாய், முனகலாய் , சிரிப்பாய்… இன்னபிறவாய். எதுவும் அர்த்தப்படாத ஒலிகளாய் நகரும் வாழ்க்கையின் இருப்பு எத்தனை சலிப்பானதாக இருக்கும். அந்த இருப்பை அறிந்து கொள்ளத்தான் இப்படி செய்கிறாயா என்கிறார் இன்னொரு கவிதையில். ஒரு கவிதையில் எழும் ஐயத்திற்கு, பிறிதொரு கவிதையில் விடை கண்டடையும் போது தொகுப்பின் ஆழத்தில் ஓடும் மைய இழையை ஊகிக்க முடியும்.சரி.அர்த்தமற்ற ஒலிகளாலான இவ்விருப்பை நிரூபிப்பதற்காகவே உன் அழைப்பு என்கிறது அக்கவிதை.கவிதையின் தலைப்பு, ’என் இருப்பு’.
                  மரத்துக் கிடக்குமெனை
                  நினைக்கப்பேசி ஞாபகிக்கிறாய்
                  விஞ்ஞாபமற்ற விசனங்களின் நடுவில்
                  நிலைப்படுத்தும் உன் அழைப்புகள்
                  ஆத்மார்த்தத்தை நிரூபிக்கிறது
                  சலன சந்தங்களைப் பாடியோ
                  விசனப்படுத்தும் வார்த்தைகளைத் தூவியோ
                   களிப்புற நீளும் பட்டியலில்
                  நீயின்றி நிறைந்து…
                  சுவாச நாளங்களின் வழி..
                  இன்னும் என் இருப்பை
                  நிரூபிப்பதற்காகவே உன் அழைப்பு.
                 
அழைப்பென்பது நிராகரிப்பின் எதிர்மறையான சூழல். ஆனால் அவ்வழைப்பும் நம்பிக்கைத்தர வியலாததாகவே இருக்கிறது.காரணத்தை மற்றொரு கவிதையில் கண்டுபிடிக்கலாம். உன் அழைப்பை எதிகொள்ளும் ’நான்’ என்னவாகச் சித்தரிக்கப்படுகிறது என்று கவனித்தால், அச்சித்தரிப்புக்கான சூழலின் வலியைப் புரிந்துகொண்டால், விளங்கிக்கொள்வது ஏதுவாகும்
                  பழக்கப்பட்ட வார்த்தைகளை
                  பயன்படுத்துவதால் என்னை நானாய்
                  அறிந்துவிட முடியுமா…
என்னும் கேள்வி
                  எப்படி அறியப்பட்டுக் கொண்டிருக்கிறேன்
                  புனையப்படும் பெயரெச்சத்திலா
மச்சங்களாய் உறையும்
பெண்ணெச்சத்திலா

என்னும் போது எழும் கவிமனத்தின் வாதை ஏனென்பதற்கான பதிலாக,
                  அங்கப்பதிவுகளூடான
                  வளைவுப் பொந்துகளில்
                  விளைந்து கிடக்கும்
                  பெண்மை எனத்தேடும்
ஆண் அழைப்புகளில்
என்பதில் உச்சம் கொள்கிறது.இதனூடாக எழும் கவிமனத்தின் பேரவஸ்தையை புரிந்துகொள்ளமுடியும்.அந்த புரிதலினூடாக கீழ்க்காணும் கவிதை வாசிக்க அச்சமூட்டுகிறது.
                  நான் தனியாக வாழ
                  கற்றுக் கொண்டிருக்கிறேன்
                  யாருக்காவும் யாரும் இல்லை
                  எனக்கானதும் இதுவாகவேயிருக்க….
                  அன்பும் அக்கறையும்
                  ஊசி வழியேற்றும் சுயநலப்பிரயோகங்கள்
                  நடிப்பும் சுகிப்புமாகி
                  குருதியெதிர்த்து நரம்புவழி
                  கண்களில் வடிகையில்   
                  தனியாக வாழக் கற்றுக்கொண்டிருக்கிறேன்.
தனியாக வாழக்கற்றுக் கொண்டிருப்பதாக வெளிப்படுத்துவதில் உள்ள உள்ளார்ந்த வேதனை, வார்த்தைகள் வெளிப்படுத்துவதைவிடக் கொடுமையானது. தனியாக வாழ்வதற்கான நிர்பந்தம் ஏன் எழ வேண்டும்.அதை உருவாக்கும் சமூகத்தின் மீதான மதிப்பீட்டை    எவ்விதம் உருவாக்குவது.வெறும் சக மனித சிக்கல் மாத்திரமா? அல்லது ஒட்டு மொத்த சுற்றுச்சூழலின் தாக்கமா? எதுவாயினும் அதிலிருந்து மீள்வதற்கான சாத்தியத்தை உருவாக்க வேண்டும். கவிதைகளினூடாக ஓடும் சரடினைப் பற்றிக்கொண்டு பயணிக்கக் கிடைக்குமிடம் யாதெனப் பார்க்கின்,
                  தற்கொலைக்குத் துணியும்
                  எல்லாச் சந்தர்ப்பங்களிலும்
                  ஏதோ ஒரு மரணம் நிகழ்ந்துவிடுகிறது
நெருக்கமான குடும்ப நண்பரை இழக்கும்போது,எழுபதில் முதிந்த அன்பரை இழக்கும்போது,முப்பது வயது சகாவை இழக்கும் போது,மூன்று வயது மழலையை இழக்கும்போது தற்கொலைக்கான காரணங்கள் அமிழ்ந்துபோகிறது.தற்கொலைக்கான காரணங்கள் அமிழ்ந்து போவது நம்மை ஆசுவாசப்படுத்தினாலும் அதற்கான காரணங்கள் பிற மரணங்களின் பொருட்டு என்பது கவனிக்கத்தக்கது. அதனினும், நோக்கத்தக்க ஒன்றுண்டு.இறுதி வரியாய்,
                  இன்னொரு சந்தர்ப்பத்திற்காய்
                  தொக்கி நிற்கிறது
எழுதப்படுவது.இன்னொரு சந்தர்ப்பதிற்கு என்றால்,தற்கொலைக்கான அமிழ்ந்து போன காரணங்கள் மீண்டும் மீண்டும் துளிர்க்க யாது காரணம். மீளவேண்டியதை, அதன் அவசியத்தை உடன் உணர்த்தும் மன நிலையை உருவாக்குகிறது.கவிமனத்தின் அழுத்தம் முற்றிலுமாக வெளிப்படும் இடமாக அறிய முடியும்.

இத்தொகுப்பில், ஈழம் சார்ந்த நாட்டுப்புற பாடல் வடிவத்தில் எழுதப்பட்டிருக்கும் சில கவிதைகள். அரிய சொல்லாட்சிகள் அக்கவிதைகளில் கிடைக்கின்றன.

                  முடைச்சி முடைச்சி யெண்டு
                  புடைச்சிருந்த முலைக்காம்பில் உம்
                  உசிரக்கட்டி தேன வடிச்செடுத்தீர்-தேன்
                  பூச்சி ஒண்டு கடிச்சுப் போட்டா  தூ….…எண்டு துப்புவீரா…
                  ******     ******     *******
                  கொத்தாக இருந்தவரே என்னைக்
                  கொத்தி யெடுத்துப் போனதுவும் பின்
                  நெத்தாகும் காலமொண்டக் காட்டி
                  நெஞ்சு ரெண்டும் நோக விட்டு
                  பத்தாத நெருப்புண்டு என்ர பொண்வண்டே
                  பார்க்காம ஒதுக்காதீர்
                  *********    *****     ******8
                  வேரில பழுத்த சுளைய மச்சமெண்டு பிடிச்சு நீர்
                  காட்டுத் தேனில ஊற வைச்ச
                  கதையொண்ணு கேக்கணுமா….
                  *********      ********     *****
                  முல வெடிச்சு ஒழுகுதையா பாரும்
                  ஒரு எட்டு வந்து போங்க
                  ஓலை வச்ச வேலிக்கால
என்பன போன்ற மண் மணமிக்க,உணர்வெழுச்சி வற்றாத நாட்டுப்புறப்பாடல் வடிவத்திலான கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன.

‘கம்பரே பொய் புகன்றதுமேனோ?’, ‘சீதைக்கும் சிறந்திருப்பான் ராமன்’,போன்ற அரசியல் கவிதைகள் கவனத்திற்குரியன.

ஒட்டு மொத்த தொகுப்பை வாசித்து முடிக்கிற போது கவிமனத்தின் விரக்தியும் எதிர்மறைச் சூழலும் சலிப்பும் வருத்தமும் வேதனையும் அதிகம் உணர்வின் வெளிகளாய் வியாபித்திருக்கிறது.அதிலிருந்து உடன் மீளலின் அவசியத்தை உணர்கிறேன்.மீள வேண்டும்.
மற்றபடி கவிதை எழுதியதில் இருக்கிற விமர்சனப்பார்வை ,மொழிதலில் இருக்கிற பிரச்சனை, கவித்துமாக வேண்டிய இடத்தைக் கண்டடையும் தருணத்தை தவறவிடுதல் போன்ற எல்லாவற்றுக்கும் சொல்வதற்கு தொகுப்பில் கவிதைகள் உண்டு.

ஆயினும், பாடு பொருள் என்னை இழுத்துச் சென்ற இடமும் அதிலிருந்து வெளியேறவும் வெளியேறச் சொல்வதன் அவசியமும் முக்கியமானது.

ஈழவாணி பலவிதமான சூழல் சார்ந்த, சமூகம் சார்ந்த புதிய பார்வையோடு கவிதைகளைப் படைக்க வேண்டும். சுய அழுத்தத்திலிருந்து வெளிவர வேண்டும். அதற்கான சூழலும் வாழ்வும் அமையவும் தொடர்ந்து படைப்புகளை வழங்கவும் வாழ்த்துகிறேன்.