Posts

Showing posts from 2010

கதவு

குரல் கொடுத்துக் காத்திருந்ததுண்டா இறுகப் பூட்டிய கதவின் வெளிநின்று....? உள்ளிருத்தலை நிச்சயப்படுத்த வியலாது திறந்த கதவு தள்ளி நுழைய, எத்தனிக்கும் வன்மம் தரும் அச்சுறுத்தல் தாழ்ப்பாளாய் அடைத்த பொழுதுகளில் நின்று திரும்பிவிடும் திறந்துவைத்துஎதிர்நோக்குக் குரியவையும் பௌதீக வடிவமற்றுத் தவிர்க்கும் பிறிதுணரச் சாத்தியமற்று இட்டுச் செல்லும் இடர்பயணம் அசோகவனம் வரை நீளும் உடைத்த கதவிடை உருவான பெருவழியில்.

தெளிவுறுதல்

மீனொன்று காற்றில் பறந்து போனது வியப்பாயிருக்கிறது. காற்றுப்பரப்பில் சுவாசிக்கவியலாது மீனுக்கு.அவ்வாறெனில் காற்று எப்போது நீராய் மாறியது. மீன் பறவையானதா செதில்கள் சிறகுகளாய். மீனென்றால் அது காற்றாக இருக்க முடியாது. காற்றென்றால் அது மீனாக இருக்க முடியாது. காற்றாக மீனாக நீராக பறவையாக காற்று நீர் மீன் பறவை மீன் பறவை காற்று நீர் நீர் மீன் பறவை காற்று வியப்பாயிருக்கிறது என்றாலும் கூட மீனொன்று காற்றில் பறந்து போனது. (’புறவழிச் சாலை’  நூலிலிருந்து..)

வருகை

உன் வருகை குறித்த எவ்வித ஆட்சேபனையு மில்லையெனக்கு. எனது கதவுகள் ஒருபோதும் சாத்திவைக்கப் படுவதில்லை என்பதையும் அறிவாய் நீ. உனக்கான சூழல் தான் உனதிவ் வருகையை சாத்தியப்படுத்துகிறது. எண்ணங்கள் என்னுள் சிதறிக் கிடக்கின்றன. ஒன்றையொன்று விஞ்சி நிகழ் காலத்தின் மீதான ஆக்ரமிப்பை நிறுத்தவில்லையின்னும் கழுவியும் கழுவாமலுமாய் மனச்சுவரில் ஞாபகப் பிரதிகளாய் ஒட்டப்பட்டிருக்கின்றன. பக்குவமாய் அவற்றை பரணில் கட்டி போடும் காலத்தின் உதவிக்காகவே காத்திருக்கிறேன். அதற்குள் அகோரமாய் பல் முளைத்த  உன் முகத்தை நீ பார்த்துவிடக் கூடாதெனும் சிறு கவலை உண்டெனினும் இப்போதும் கூட உன் வருகை  குறித்த எவ்வித ஆட்சேபனையும் இல்லையெனக்கு.

பெயர்ச்சொல்.

எது எதை எது எதுவாய்ச் சொல்கிறோம் அது அது அது அதுவாய் இருக்கிறது மாட்டை ஆடென்றும் ஆட்டை மாடென்றும் சொல்லியிருந்தால்... ஒரு வேளை மாடு ஆடாகியிருக்கலாம் ஆடு மாடாகியிருக்கலாம் இடுகுறிப் பெயர்கள் இப்படித்தான். நாலு கால் நாற்காலி மூணுகால் முக்காலி ஆமையிடம் திறமையிருந்தும் சோம்பித் தோற்றதால் ‘முயல்’... காரணம் காட்டும் பெயர்ச்சொல். நல்லதைச் செய்தால் நல்லவன் கெட்டதைச் செய்தால் கெட்டவன் செய்யும் வினையாலணையும் பெயர் கெட்டதைச் செய்தாலும் நல்லவனெனச் சொல்லச் சொல்லி கெடுபிடி செய்யும் காரணிகள்: பணம், பலம் பதவி இலக்கணப்பிழையாய்... நாயை நரியென்றால் நாய் நரியாகலாம் நரிக்குணம் என்னவாகும்...? நன்றி வருமா நரிக்கு...? இடுகுறிக்கே இதுவென்றால் சொல் வெறும் சுட்டு தான் செயலால் மட்டும் கிட்டும். சொல்லை மாற்றும் செயலை விடுத்து தொழிலை மாற்றும் வினையால் சொல் மாறும்.

பூங்காளம்மன் சரிதம்

தார்ச்சாலை விலகி யோடும் வெண்கற்கள் விரவிக் கிடக்குமந்த மீனவேலி சிறுபாதை கடந்தேகும் போதில் மேற்புறத்தே வீற்றிருக்கிறாள் பூங்காளம்மன். கோபுரமில்லை, கலசங்களில்லை, சிற்பங்களில்லை, சித்திரமில்லை, மணடபமில்லை. வெறித்துத் தகிக்கும் வெயிலுக்கிதமாய் தரு நிழலைத் தருமப்பெரும் வேப்பமரத்தின் வேர்களில் தொடங்கும் அவளின் சரிதம். ஆங்கிலேயன் ஆர்மியில் சிப்பாய் அகோர வீரபத்ர நாயுடுவின் மரணத் தீயிறங்கி மரித்துப் போனாள் மனைவி வெங்கட்டம்மா. நெருப்பில் குளிர்ந்த போது நிறை மாத கர்ப்பிணியாய் ஓர் இறப்பில் ஈருயிரிழப்பாய் நிகழ்ந்து போக, சூல் ஆடு குத்தி தொடர்ந்து செய்யும் பூஜை கால வெளியில் கனிந்து குலம் காக்கும் அம்மனாய் குடி கொண்டிருக்கிறாள். தொடர்புகள் அரிதானவக் காலத்தில் கனவு வழி தகவல் சொன்னாராம் மரித்துபோன வீரபத்ரன். தரச்சொல்லி மிலிட்டரி ஆபீஸரிடமும் பெறச்சொல்லி பங்காளியிடமும். நாயுடுவின் துப்பாக்கி போர்வாள் கேடயம் குறுங்கத்தி வழிபாட்டுக்குரியதாயின. வம்சாவழி தவிர யாருக்கும் வழங்கப்படுவதில்லை பூங்காளம்மன் முன்படையலிட்டயெதுவும். திருமணமாகிப் போன பெண்களுக்கும் கூட. மணமான

என்னை, உன்னை மற்றும் சிலரைப் பற்றிய கவிதை

பெரும்பாலும் பொழுதுகள் நினைவுகளிலேயே செலவாகிறது உன்னைப் பற்றி என்னைப் பற்றி மற்றும் சிலரைப் பற்றி . **            **         ** தேசத்தின் வரைபடமென தீட்டப்பட்டிருக்கும் அபிப்ராயச் சித்திரத்தை அத்தனை எளிதில் மாற்றுவது சாத்தியமில்லையென நினைத்திருக்கும் வேளை பூகோளத்தின் ரேகைகளையே நகர்த்தும் சுனாமியாய் பொங்கிப் பிரவகிக்கும் உன் செயல்பாட்டுப் பேரலை. **           **              ** அறிதலில் உருவாகும் அகங்காரம் ஆசானை வம்புக்கிழுக்கச் சொல்கிறது. ஆணவம் வெல்வதில்லை நண்பனே ஆயுதப் பட்டியலில் இல்லாத அகப்பையும் கொப்பரை மூடியும் ஆசானின் மனைவிக்கு ஞாபகம் உள்ள வரைக்கும். **                   **           ** ஆயிரம் முறை ஆனபோதிலும் மீண்டும் கேட்டுத்தான் தீர வேண்டுமுன் பிரஸ்தாபத்தை தவிர்க்கவே வியலாது சந்திக்கப் போகும் இன்றைய மாலைப் பொழுதிலும். **          **                 ** எத்தனை ஆண்டுகள் ஆனபோதிலும் இயலவில்லை சிந்தாமல் பேனாவில் மை நிரப்ப. உபாயம் ஒன்றுண்டு முக்கால் குப்பி நிரம்புகையில் போதும் போதுமென மனம் நிரம்பி வழிய வேண்டும். கவனத்தின் அத்தியாவசியம் ம

ஊழல்

ஆட்சி மாறியதும் முந்தைய ஆட்சியில் ஊழல் என்று விசாரணைக் கமிஷன் அமைத்தார்கள். மீண்டும் ஆட்சி மாறியதும் விசாரணைக்கமிஷன் அமைத்ததிலேயே ஊழல் என்கிறார்கள்.

அடடா! இதுவா பெண்மை?

பளிச்சென மின்னல் ஒன்று     பட்டதும் பார்த்தேன்; அங்கே விழித்திரை தன்னில் கன்னி     வித்தைகள் புரிந்தாள்; அந்த மொழிக்குநான் விளக்கம் தேடி     முடியாமல் தவித்த போது ‘களுக்’கெனச் சிரித்துக் கண்ணை     கால்களை நோக்கிப் போட்டாள்! படபட வென்றே அந்தப்     பாய்விழி இரட்டை அம்பை உடனவள் இமைக ளாலே     உள்ளுக்குள் மூடிக் காட்டி நடனங்கள் புரிந்த போது     நானென்னை இழந்து போனேன் அடடா!இதுவா பெண்மை?     அனுபவி புரியும் உண்மை. மீண்டுமவள் பார்வைக் காக     மெதுவாகத் தலையைத் தூக்கி ஆண்டவன் முன்னே பக்தன்     அமைதியாய் நிற்ப தைப்போல் வேண்டுதல் வைத்துப் பார்த்தேன்     வேறேதோ சிந்த னையாய் தோண்டினாள் விரலால் பூமி     தொலைத்ததைத் தேடு தல்போல்! *பல்லவன் வந்தான்; அந்தப்     பாவையை அள்ளிப் போனான்; உள்ளத்தைக் கண்ணால் கொத்தி     ஓடிய அவளை விட்டு மெல்லநான் நினைவைத் தேடி     மெதுவாக நென்ச்சைத் தொட்டேன் துள்ளிடும் த்ரைமீன் போலே     துடித்தது வேக மாக! ----------------------------------------------------------- இக்கவிதை எழுதப்பட்ட ஆண்டு  1986 * பல்லவன் - எண்பதுகளில் சென்னையில் இயங்க

ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி

*நாவல்-நாடகம் ,சிறுகதை, நவீன கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில் 2010 ஆம் ஆண்டு வெளியான நூல்கள் போட்டியில் பங்கேற்கலாம். ... ...*ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியே பரிசுத்தொகை ரூ 10,000 வழங்கப்படும். *நூல்களின் மூன்று பிரதிகள் அனுப்பவேண்டும். *நூல்கள் வந்து சேரக் கடைசி நாள் 31-01-2011  *அனுப்ப வேண்டிய முகவரி ------------------------------------------------------------------------------------------------------------------- தமிழ்மணவாளன் 18, பத்மாவதி நகர் மாதவரம் பால் பண்ணை சென்னை-600 051 ------------------------------------------------------------------------------------------------------------------- செந்தமிழ் அறக்கட்டளை மணப்பாறை

அவளுக்குப் பெயர் தான் அம்மா

வா னிலவின் குளிர் முகத்தின் வனப்பைக் காட்டி       வாஞ்சையுடன் குதூகலமாய் உணவை ஊட்டித் தானிருக்கும் குருதியினைப் பாலாய்த் தந்து       தாயன்புச் சுவைதனையும் சேர்த்துத் தந்து நானிலத்தில் நல்லவர்கள் மெச்சும் வண்ணம்      நம்பிள்ளை வரவேண்டும் எண்ணத் தோடு தேனினிய கனவுகளை நெஞ்சில் தேக்கி      தேகத்தை நமக்காகத் தேய்க்கும் உள்ளம். கன்றுதனை ஈன்றவுடன் நெஞ்சின் அன்புக்      கட்டளையால் நக்குகிற பசுவை போல நின்றுலகில் நிலைபெறவே பெற்ற பிள்ளை       நீர்கொண்ட பயிராக வளர வேண்டி அன்புமழை பொழிகின்றாள் ஆசை  யாக       அழுகின்றாள் நெஞ்சத்தில் ஓசையின்றி என்றுமவள்(ன்)  இனிதாக வாழ்தல் வேண்டும்       எண்ணங்கள் சுமையாலே ஏங்கி நிற்பாள். அரங்கத்தில்  ஆடவைத்த பெருமை யெல்லாம்       அவனிதனில்  நிலையற்ற நெஞ்சின் அன்புச் சுரங்கத்தின் முதலாளி; தூய தாய்மைச்       சொந்தத்தின் உணர்வுதனை ஊட்டி, தன்னின் கரங்களிலே குழந்தையினைக் கைதி யாக்கி       கால்தனையே கண்களிலே ஒற்றிக் கொள்ளும் திறங்கொண்ட தியாகத்தின் சொந்தக் காரி       திருநாட்டில் தாயின்றி யாரு மில்லை. சிறுமழலைச் சொல்லுக்கும் விளக்கம் கூறிச்  

அதனாலென்ன...?

கொஞ்சமாய் வெளிச்சம் கலந்த குளிர்காற்றின் பரவலோடு அறிமுகமாகிறது காலை. கலங்கிய குட்டையில் மீன் பிடித்த கவிச்சு மணம் முழுஇரவின் அவகாசத்தில் விலகியிருக்க வேண்டும். எதையும் எழுதிவிடக் கூடிய வெள்ளைத்தாளென விரிந்து கிடக்கிறது மனசு நாள் முழுதின் வக்கிரங்களையெல்லாம் நானா தாங்கிக் கொள்ளப்போகிறேன் என்னும் வினாவோடு. மெல்லிய அசைவுகளும் சின்ன சின்ன சப்தங்களும் கூட முக்கியமானவையாகின்றன கிரகிப்பின் தீர்க்கத்தில். வைத்த புள்ளிகள் பொட்டுகளா, வடுக்களாவென வெம்மைப் பொழுதின் கோலமே வரைந்து காட்டும் வாசலில் தெரிந்தோ கவனமின்றியோ அமைதியாய் வரைந்தவிக் கோலம் பாதங்களின் கீழே சிதைந்து போகத்தான் செய்கின்றன. அதனாலென்ன...? அடுத்த அதிகாலையிலும் வரையத்தானே போகிறோம் இன்னொரு அழகான கோலத்தை.                          ------- அக்டோபர் 2003

மறுபக்கம்

அறைந்து சாத்தப்பட்ட கதவில் தொங்கும் பெரிய பூட்டின் கனம் தாளாது நசுங்கிச் சிதையும் சந்தித்தலின் மீதான ஆர்வம். உரையாடலை நறுக்கிச் சிதைக்கும் கூரிய மௌனத்தின் நிராகரிப்பு. மரணவீட்டின் இரவென மனசைக் கலவரப் படுத்தும் ப்ரயோகித்த ஒற்றைச் சொல்லின் வீச்சு. அறிமுக மற்றவனைப் போல எதிரில் கடந்து செல்லும் ஒவ்வொரு முறையும் புதைக்கப்படும் காலம் கடந்த உண்மைகள் எனவேதான் நினைத்த மாத்திரத்தில் சந்தோஷம் தந்த ஞாபகங்களை மறப்பதொன்றே பிரதானமாய். இப்போது காய்ந்த செடியைப் பிடுங்கிய போதுதான் தெரிந்தது வேரின் ஆழமும் காயாத ஈரமும்.

விசாரிப்பு

எந்தவொரு சந்திப்பின் போதும் ’சௌக்யமா’?  வென்றே உரையாடல் தொடங்குகிறது. என்னை யார் சந்தித்தாலும் நான் யாரைச் சந்தித்தாலும் முதல் வார்த்தை அதுவாகவே இருக்கிறது. எதிரில் வந்த என்னைப் பார்த்து புன்முறுவலுடன் வினவுகிறாய் நீயும் ‘சௌக்யமா’?  வென. எப்படிச் சொல்வேன் உன்னிடத்திலென் சௌக்யமின்மையையும் இன்மையின் காரணமே நீ தானென்பதையும்.

கதவு

யாவரின் வருகையையும் எதிர்நோக்கி வரவேற்கத் திறந்திருக்கிறது வாசற்கதவு. திறந்து வைத்த கதவின் வழி யாரும் வராத பொழுதில் வெறுமை அப்பிக்கிடக்கிறது. கவனமாய்க் கண்காணித்துக் கொண்டிருந்த வாசல் வழியே மெல்ல ஒருவர் வெளியேறுகிறார். பிறகு மற்றொருவர் பிறிதொருவர் என. உள்ளே வருவதை மட்டுமே நிச்சயப்படுத்தாத கதவின் திறப்பு வெளிப்போதலின் எல்லா சாத்தியங்களையும் உள்ளடக்கியதென்பதை உணரத் தலைப்படும் கணத்தில் தான் அந்தக் கடைசி மனிதனும் வெளியேறி கொண்டிருந்தான்.                                    -------ஜூலை2003

உரைத்தல் முரண்

கடை வீதியில் எதிர்வந்த பெண்ணைக் காட்டி ‘நான் காதலித்த பெண்ணிவள்’ என்கிறான் கணவன். கல்யாண வீடொன்றில், வந்திருந்தவனைக் காட்டி ‘நீங்கள் பெண்கேட்டு வரும் வரை ரொம்ப நாளாய் இவருக்குத்தான் என்னை கல்யாணம் செய்வதாய்ப் பேச்சு’ என்கிறாள் மனைவி.                      ----ஏப்ரல் 2003

என்னுடன்....?

எதை எழுதி முடிக்கும் போதும் உன்னையும் சேர்த்தே எழுதுகிறேன் எதை வாசித்து முடிக்கும் போதும் உன்னையும் சேர்த்தே வாசிக்கிறேன் தனிமையில் அமர்ந்திருக்கும்போது பின்புறமாய் தோள்தட்டி விழிமலர்கிறாய் எந்தவொரு பயணத்தின் போதும் எதிரில் வந்து புன்னகை பூக்கிறாய் கனவிலும் நனவிலும் நிகழும் இவை குறித்து உன்னிடம் கூறுகையில் அதற்குமுனக்கும் எவ்விதத் தொடர்புமில்லையென கைவிரிக்கிறாய் பொய் தானே சொல்கிறாய் நீ...?

கௌரவம்

இறுதி ஊர்வலத்தின் போது இறைக்கப்படும் பூக்களோடு இறந்தவர் குறித்த விமர்சனங்களும்  தெரு முழுக்க. ஒவ்வொரு மரணமும் அறிவுறுத்தத்தான் செய்கிறது எந்தக்கணத்திலும் நிகழ்ந்து முடியக்கூடிய வாழ்வின் நிலையாமை பற்றி. சில அகால மரணங்கள் மேலும் அதிர்ச்சியோடு உணர்த்துகின்றன அதையே. ஆயினும் இந்த மனிதர்கள் சவ அடக்கத்தின் போதே பிரஸ்தாபிக்கிறார்கள் பிணத்தின் முன்னிலையில் யாரின் கௌரவம் முதன்மையானதென.                                        --   மார்ச்  1999

குப்பை பற்றி ஒரு கவிதை

குப்பைக் கவிதை எழுத வேண்டும் ஒன்று.எனினும் குப்பையெனத் தனியே ஏதுமில்லை. பொருளற்ற பொருள்கள் பயன்பாட்டின் முடிவில் திணைகள் திரிந்து பாலையானதாய். பொருள்களென்றின்றி மனசுக்குள்ளும். மணப்பாறை பக்கமுள்ள எங்கள் கிராமத்துக் குப்பை மேட்டில் பரங்கிக் கொடி படர்ந்து கிடக்கும். சத்தான குப்பையில் ரோஜா பூக்கும் புஷ்டியாய். குப்பைக்குக்  க ண்காட்சி நடத்த வேண்டும். குப்பைக் கண்காட்சி. என் அறையில் நல்ல புத்தகங்களும் கலைந்து கிடந்தன குப்பையாய். அடுக்கி வைத்தேன் குப்பை அகல அடுக்கினால்.........போதாது.                                  கணையாழி- ஏப்ரல் 1998

மனிதாபிமானம்

சிவப்பு வன்ணம்  மாறப்போகும் தருணத்திற்காய் வாகனத்தின் விசையூட்டி  விசையூட்டி ஆயத்தத்தின் வீச்சை விரலசைவில் வைத்திருப்போரும் முன்னம் சென்றுவிடவேண்டும் என்னும் முனைப்போடு நிறுத்துக்கோட்டைத் தாண்டி பரபரத்திருப்போரும் கணப்பொழுதின் தாமதமும் ஏற்படுத்தி விடக்கூடிய சவால்களோடு அவசரத்தின் விளிம்பில் நிற்பவர்களும் யாரோ முகமறியா ஒருவரை சுமந்தபடி அபயக்குரலெழுப்பி ஆம்புலன்ஸ் சுழலும்  விளக்குடன் வரும்போது தம் வாகனத்தை நிறுத்தியோ வேகம் குறைத்தோ வழிவிட யத்தனிக்கும் பதற்றத்தில்  தான் ஊசலாடிக்கொண்டிருக்கிறது இன்னும் கொஞ்சம் மிச்சமிருக்கும் மனிதாபிமானம். கவிதை : இடம்: சென்னை இரட்டைஏரி சிக்னல்                     நேரம்: 26-09-10 காலை 10 .00 மணி

தமிழாக்கம்?

தமிழ் நாடு அரசுப் பேருந்துகளில், எண்களைத் தமிழாக்கம் செய்து எழுதியிருக்கிறார்கள். உதாரணமாக, ’TN 01 N xxxx’ என்று ஒரு எண்ணை ’தநா 01 நா xxxx’ என எழுதியுள்ளார்கள். TN என்பது தமிழ்நாட்டைக் குறிக்கிறது என்பதால் ’த நா’ என்பதைக் கூட ஏற்கலாம்?. அடுத்து வரும் ’N’ ஆங்கில alphabetical வரிசைக்கிரமத்தில் வழங்கப்படும் போது அது எப்படி ’நா’ வாகும். அப்புறம் Q, W என்னவாக மாறும். P,B வரிசையிரண்டும்? தமிழ்ப் படுத்த நினைத்தால் தமிழ் அகர வரிசையில் எண்களை வழங்குவதே சரியாகும். இல்லையெனில் அப்படியே பயன்படுத்துவதே முறையாகும்.

நீ....

நகலாய் எதிரில் வந்து உரக்கப் பேசுகிறாய் அசலும் அச்சமுறும் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதில்களுடனே எதிர் கேள்விகளும் இருக்கத்தான் செய்கின்றனவாயினும் எழுப்புவதில்லை. கேள்விகள் மேலும் மேலும் கேள்விகளாகும் அச்சத்தில்.

சுவருக்கு அப்பால்

இந்தச் சுவர்கள் பொல்லாதவை எத்தகைய விஷயங்களையெல்லாம் மறைத்து விடுகின்றன இந்தச் சுவர்கள் இவற்றின் மீது தான் எத்தனை மரியாதை வைத்து, வாழ்வின் சித்திரங்களையெல்லாம் வரைந்து வைக்கிறோம் நம்முடனேயே நகர்ந்து வருகின்றன சில சுவர்கள் திடீரென முன் வந்து  மறித்து நிற்கையில் கடவுளரையே தாங்கும் அவற்றின் மீதான மீதான அச்சம் தவிர்க்க முடிவதில்லை எப்போதும் மறைத்து நிற்கும் சுவர்களின் அந்தப் புறத்தை அறிந்து கொள்வதில் ஆர்வம் குறைவதே யில்லை இந்தச் சுவர்கள் பொல்லாதவை வாய் திறந்து பேச முடியவில்லை, காதுண்டு என்பதால் மட்டுமல்ல சுவருக்கப்பால் யாதுண்டு வெனவறியாத வரைக்கும்

யதார்த்தம்

எதைக் காய்ச்சி வடிக்கிறாய் இத்தனை அடர்த்தியாய் அகங்காரத்தை தொடர்ந்த இறுக்கம் சமாதியாக்கும் மனத்தைப் புதைத்து உதிரும் பூக்களாயினும் அடுத்தடுத்து உருவாகும் மொட்டுகள் உயிர்த்தலின் அடையாளம் இருக்கட்டும் தவறில்லை என்றாலும் கூட இயல்புதான் வாழ்க்கை நினைவின் நிகழ்ச்சிகளன்று நிஜம்  வேறாக போவது போய்க்கொண்டிருக்கிறது வருவது வந்து கொண்டிருக்கிறது தடுப்பதற்கில்லையெதையும் அவ்வளவு எளிதாய் காணக்கிடைப்பதில்லை கனவுகளின் சாம்ராஜ்யம்.

நீர்ப் பறவை

கண்ணின் தூரம் வியாபித்திருக்கும் நீல வண்ண ராட்சசப் பறவை சிறகு விரித்துக் கிளம்பும் பறக்க. இரைச்சலில் செவிப்பறை கிழிய மனசுக்குள் புரட்டிப் போட்ட ஞாபகங்களூடே உப்புக்கரிக்கும் பாதம் முழுக்க. சிறகு மடக்கி விரிக்கும் மீண்டும் மீண்டும் ராட்சசப் பறவை.

இது உன் கவிதை

என் எல்லைக் கோட்டை அறிந்திருக்கிறாய் என் மெளனத்தின் முழு அர்த்தமும் புரிந்து கொண்டிருக்கிறாய் மெல்ல மழைதூறிக்கொண்டிருந்த மாலை உன் வருகை சந்தோஷமாய் இருந்தது ஆயினும் தொடர்ந்ததன் அச்சம் தவிர்க்கவியலாததாய் இருக்கிறது.உன் நினைவுகள் என்னை மேலும் சலனப்படுத்துகிறது. வெறுப்பின்றி, விருப்பங்கொள்ளவியலாமல் மனத்தின் ஆழம் மின்னலாய்த் தோன்றும் மகிழ்ச்சியினூடே செவிகிழிக்கும் பேரிடி ஓசை அதிர்கிறது. உனக்கொன்றும் விளங்காமலில்லை எனவே தான் என் கவிதையை நீயெழுதுகிறாய் நீயும் நானும் வேறல்ல.