Friday, April 20, 2012வாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து.

                                                            வடிவுடையானின்
           சற்று மாறுதலாய் யோசி
          வாழ்க்கை மாறும்
                      தமிழ்மணவாளன்
_____________________________________________________________
             மாற்றம் ஒன்றுதான் மாறாதது’, என்பார்கள்.காலத்திற்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப எல்லாமே மற்றத்தை அடைகின்றன.
          எதையும் மாறுதலாய் யோசிக்கத் தெரிந்தவனே வெற்றி பெறுகிறான். வெற்றி பெறுவது மட்டுமல்ல அவனே தனித்தும் கவனத்திற்குள்ளாகிறான். முன்னே வருகிறான்.முன்னேறுகிறான். தலைவனாகக் கூட அடையாளம் கொள்ளப்படுகிறான்.
                எனக்குத் தெரிந்து, தேநீர்க் கடையில் டீ போடுவதை கலைநயத்தோடு செய்பவர்களைப் பார்த்திருக்கிறேன். அநாயசமாக அவர்கள் டீ ஆற்றுவதை  வேடிக்கைப் பார்க்கத்தோன்றும்.
                கலைநயத்தோடு ஆடவேண்டிய மேடையில் சிலர் ஆடும்போது சலித்து எழுந்து போய்விடத் தோன்றும்.
           எதைச்செய்கிறோம் என்பதல்ல, எப்படி செய்கிறோம் என்பதே முக்கியம்.எதையும் மாறுதலாய் யோசிக்கத் தெரிந்தவன் புதுமையாகவும் சிறப்பாகவும் செய்துவிடுகிறான்.
           அப்படி மாறுதலாய் யோசிப்பதன் அவசியம் குறித்தும், அதற்கான பயிற்சி குறித்தும், முயற்சி குறித்தும் சற்று மாறுதலாய் யோசி  வாழ்க்கை மாறும்’, என்னும் நூலில் வடிவுடையான் பதிவு செய்திருக்கிறார்.
                        மறுபரிசீலனை
           காலம்
           மனமாற்றம்
           அடிமனப்பதிவு
           மனித இயக்கம்
           எண்ணமே செயலாகிறது
போன்ற சொல்லாடல்களைப் புரிந்துகொண்டால் எளிதாகவும் விரிவாகவும் அறிய முடியும்.
     மனிதன் தன்னை உணர்ந்துகொள்ளாமல் மற்றவரைப் பார்த்து தனது வாழ்வை அமைக்கத் திட்டமிடுகிறான்.
     வாழ்க்கையை பலவிதமாகப் பலரும் உருவகப் படுத்தியிருக்கிறார்கள். வாழ்க்கை என்பது சிந்தனைகளின் தொடர்ச்சி என்கிறார் வடிவுடையான்.
எளிதாக  சொல்லப்பட்டாலும், சிந்தனைகளே ஒரு மனிதனை இலக்கு நோக்கி கொண்டு செல்கிறது. ஆகவேதான் சிந்தனைகளில் மாற்றம் மிக அவசியம் என வலியுறுத்துகிறார்.
    
    எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
     மெய்ப்பொருள் காண்பதறிவு
என்றார் வள்ளுவர்.
  நீ கொண்டிருக்கும் நம்பிக்கையைக் கூட மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கிறார் வடிவுடையான்.
வாழ்க்கையில் நம்பிக்கை என்பது மிகவும் முக்கியம். முக்கியமான ஒன்றை, தீவிர பரிசீலனைக்குப்பின் உறுதிப்படுத்துவதன் அவசியம் தான் அவரின் கருத்தாகும். துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கில்லையா?
எல்லாவற்றையும் மீள் பார்வைக்கு உட்படுத்தினால் புதிய தெளிவு உண்டாகும். யார் கூறினார் என்பதை விடுத்து என்ன கூறினார் என்பதன் மீதே கவனம் குவியவேண்டும்.
    பயன் படாத பழைய எண்ணங்களை அப்புறப்படுத்தி புதிய எண்ணங்களால் மனத்தை நிரப்பவேண்டும்.
    வெற்றி என்பது ஒருவரின் சுயமான சக்தி. அதுதனித்தன்மையின் உருவாக்கம்.ஒருவன் தனது இயல்பிலிருந்து வேறு ஒருவனைப்போல் ஆக முயற்சித்து, அந்த வேறு யாரையோ தன்னில் வெளிப்படுத்த முயற்சிக்கும் அதே அளவு,அவன் தோல்வி அடைகிறான்’.
   ஆம். நீ நீயாக இரு. உன் சுயம் தொலைக்காதே.தன்னம்பிக்கையின் முதல் பிறப்பிடமாக இதனைக் கருதுகிறேன்.
வாழ்க்கையில் இலட்சியங்களை அடைவதற்கு இடியறாத உழைப்பு அவசியம். நேரம் போதவில்லை என்பவன் உள்ளபடியே நேரத்தை வீணடிக்கிறான் என்றே பொருள்.
உலகில்பிறந்த அத்தனை பேருக்கும் நாளொன்றுக்கு 24 மணி நேரம் தானே.
  ‘ஒருநாளைக்கு இருபத்திநான்கு மணிநேரம். வாரத்துக்கு ஏழு நாட்கள்.               
                  நீ வாழ்வதற்கான அவகாசம் உனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.காலம் அனைவருக்கும் பொதுவானது என்றிருக்கையில் அதனை அவரவரும் எப்படி பயன் படுத்துகிறோம் என்பதே முக்கியம்.
மனத்தை மூன்று நிலைகளில் பிரிக்கலாம்.
1. வெளிமனம்
2. உள்மனம்.
3. ஆழ்மனம்.
           வெளிமனம் நாம் செய்கிற சராசரி காரியங்களை கட்டுப்படுத்துகிறது. உள்மனம் ஆற்றுகிற காரியங்கள் அனிச்சையாக இயங்கும் தன்மை கொண்டது. நாம் சேமித்து வைக்கும் விஷயங்கள் ஆழ்மனத்தின் உள்ளேசென்று தங்கி நாளடைவில் அதுவே நம்மை இயக்கும் சக்தியாக மாறிவிடுகிறது.
ஆழ்மனத்தில் தங்கியுள்ள விஷயங்களே உறக்கத்தில் கனவாக மாறி வருகிறது. எனவே நம்மின் செயல்பாடுகளை நம்மை அறியாமல் கட்டுக்குள் வைத்திருப்பது ஆழ்மனத்தின் சேமிப்பேயாகும்.எனவே உள்மனத்தில் எதைக் கொண்டிருக்கிறோம் என்பது மிக முக்கியம்.
     உலகத்தில் தடம் பதித்தவர்கள் எல்லோரும் ஆழமான நம்பிக்கையின் வழிகாட்டுதலோடு செயல்பட்டிருக்கிறார்கள். உன் உள்மனத்தை நீ அப்படி பயன்படுத்தத் தொடங்கிவிட்டால் உன் உள்மன ஆற்றலை அறிய முடியும்,என்கிறார் வடிவுடையான்.
     அதற்கு என்ன செய்ய வேண்டுமாம்?
     அவரே குறிப்பிடுகிறார்; ‘நீ விரும்புவதை உன் மனத்திற்குள் சொல்லிக்கொண்டே இருந்தால் அதைப் பெறுவதற்கான வழியில் உன்மனம் உன்னை செலுத்த ஆரம்பிக்கும். எதிர்மறை சிந்தனையை நீ உருவாக்கினால் அழிவை நோக்கி அது உன்னை செலுத்துகிறது
உள்மனத்தில் பதிவாகும் தகவல்கள் அனைத்தும் சொல், கற்பனை, உணர்ச்சி ஆகிய மூன்று பரிமாணங்களைக் கொண்ட விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
     கனவு பற்றி ஃப்ராய்ட் மிக அழகாக விளக்கம் சொல்லுவார். அதன் வழியே வடிவுடையான் கனவு பற்றி நிறைய பேசுகிறார். அதன் தன்மைகள் பற்றி பேசுகிறார்.சாதரண விஷயங்களைக்கூட குழப்பிவிடக்கூடிய சிக்கல் கொண்ட பகுதிகளை, வடிவுடையான் மிக எளிமையாக ,அனைவரும் புரிந்துகொள்ளும் வித்த்தில் எழுதியிருப்பது சிறப்பானது.மேலோர் பலரது மேற்கோள்கள் பலம் சேர்க்கிறது.படித்தால் மனத்தில் மாற்றத்தை உருவாக்கவல்ல நூல்.
படியுங்கள் புரியும்.

Tuesday, April 3, 2012

வாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து. வடிவுடையானின் காம சூத்ராவைக் கடந்துவா


    த்தனை இயல்பாய் இருக்கிறது
              இரவெல்லாம் புணர்ந்த
              இந்த உலகம்
காமக்கடும்புனல்  கவிதைத் தொகுப்பிலுள்ள மகுடேஸ்வரனின் கவிதை வரிகள்.
காமம்  எத்தனை இயல்பான ஒன்று. ஆனால், அது குறித்து இந்த உலகம் எத்தனை பாசாங்கு செய்கிறது என்பதை மிக நேர்த்தியாகச் சுட்டும் வரிகள்.
     உலகில், உயிரினம் தோன்றிய போதே உருவான உணர்வு பசியும் காமமும் தான். ஆம்.காமம் என்னும் இச்சை மட்டும் இல்லாதிருந்திருந்தால் இனப்பெருக்கம் குறித்து எந்த உயிரினமும் கவலைப்பட்டிருக்க வாய்ப்பில்லை. இவ்வுலக இயக்கத்தின் தொடர்ச்சியை உறுதிப்படுத்த இயற்கை உருவாக்கிய உத்தி எனக்கூடத் தோன்றுகிறது.
     எதிர்பால் ஈர்ப்பென்பது, முதல் ஆண்--முதல் பெண் தோன்றிய காலத்திலேயே உருவாகியிருக்கக்கூடும்.அவ்விதமாயின், அதன் காலம் குறித்து நம்மால் ஒருவாறு கணிக்க இயலும்.காமம் பற்றியும், காம சாஸ்திரம் பற்றியும் நம் முன்னோர் எவ்வளவோ பேசியும் எழுதியும் உள்ளனர்.பல நூல்கள் பலராலும் எழுதப்பட்டுள்ளன.
     வடிவுடையான், காமசூத்ராவைக் கடந்து வா’, என்னும் நூலில், ஓர் ஆண்குரலின் சாட்சியமாக பலவிஷயங்களை  முன்வைக்கிறார்.
பதின்ம வயதில் உருவாகும் காமம், அதன்பொருட்டு எழும் எண்ண அலை, சமூகத்தில் அவ்வுணர்வுக்கு இணக்கமாக அல்லது எதிராக நிகழும் சம்பவங்கள் என, கோர்வையாக சொல்லிச் செல்கிறார்.
     ஆணுக்கும் பெண்ணுக்குமான உடல் சார்ந்த உறவு மட்டுமல்ல காமம். ஐம்புலன்களாலும் அனுபவிக்கவல்லது. அதனால் தான் நினைத்தால், பேசினால், கேட்டால், பார்த்தால்,தொட்டால் என எதனினும் இன்பம் என்னும் ஏகோபித்த புலன் வேட்கையை உருவாக்குகிறது.
     பதின்ம வயதில் உருவாகும் காம உணர்வு இனம்புரியா சங்கடங்களை ஏற்படுத்தக்கூடிய ஒன்று என்பதாலே தான்,தடம் மாறிப்போய்விடக்கூடாதென பாலியல் கல்வி தேவையென பலரும் கருத்து முன் வைக்கிறார்கள்.
     வடிவுடையானின் இந்நூல் என்ன சொல்கிறது?
     மிகச்சிறு வயதில், தன்னை விட வயது மீறிய பெண்ணொருத்தியோடு ஏற்படும் உறவு குறித்தும், அவ்வுறவு ஏற்படக்காரணம் குறித்தும் முதல் அத்தியாயத்தில் விளக்குகிறார்.
     பாலியல் தேவைக்கு அல்லது பாலியல் வன்முறைக்கு சிறுமிகளைப்போலவே சிறுவர்களும் பலியாகிறார்கள் என்பதே சமூகத்தில் இருக்கும் சோகம்.
     ஆயினும் இச்சோகம் யாரிடம் பகிர்ந்து கொள்ள அல்லது முறையிடப் பட வேண்டுமோ அவர்களாலேயே அதாவது உறவு மற்றும் உடன் உள்ளோர் மூலமே, கணிசமாக நிகழ்கிறது என்பது அதனினும் பெருஞ்சோகம்.
     அவ்வாறெனில் அது குறித்த விழிப்புணர்வு ஏற்பட வேண்டாமா? பால் ஊற்ற செல்லுமிடத்தில் வயது மீறிய பெண்ணுடன் உண்டான உறவு பற்றி படிக்கிற போது, அவர்களின் பாதுகாப்பு மற்றும் மனோநிலை குறித்த பதட்டம் ஏற்படுகிறது.
 அடுத்தடுத்து சந்திக்கும் பெண்கள் மட்டுமல்ல:
  காமம் X பிரம்மச்சர்யம் குறித்தும் பேசுகிறார்.
           காமத்திற்கும்
          ஞானத்திற்கும் ஏன்
          முடிச்சுப்போட்டுத்
     தோற்றுப் போகிறீர்கள்
     ........................................
     முதலில் பெண்ணில்
     குளித்தெழுங்கள்
     அவளால் மட்டுமே
     உங்கள் பாவங்களைக் கழுவ
     முடியும்

பெண்ணில் குளித்தெழுங்கள் என்பதில் இருக்கும் சொல், முற்றிலும் மூழ்கித் திளைக்கச் சொல்லுவது. அதன் பின் தான் மற்றது யாவும் எனத்தன்னளவில் முடிவுகொண்ட கருத்தாகத் தெரிகிறது.
     பெண்ணழகை ஆணும், ஆணழகைப் பெண்ணும் ரசிப்பதும்,களிப்பதும் இயற்கை உருவாக்கித் தந்திருக்கும் பாடம்.ஆனால் அழகு மட்டுமே வாழ்க்கையில்லை அதனைத்தாண்டிய மனம் உள்ளது என்பதை உணரவேண்டும் என்பதும் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்றாகும்.
     வண்ணக் கலையழகு மாளாத சிலையழகு
     கண்ணிற் கவியழகு கற்பனைக்குப் பேரழகு
பின்னற் சடையழகு பேதலிக்கும் மார்பழகு
சின்ன நடையழகு சிங்காரக் கையழகு
முன்னம் படைகூட்டி முகப்பளக்கும் மெய்யழகு
எண்ணத்தொலையாத இடையழகு தேவனவன்
பெண்ணைப் படைத்ததற்குப் பின்னழகே மண்ணழகு
என்னும் கவியரசு கண்ணதாசன் வரிகள், பெண்ணழகின் பெருமை பேசும்.
     வடிவுடையான் நூலுக்கு வருவோம்.
     கதை சொல்லி, எஸ்தரைச் சந்திக்கிறான். யார் எஸ்தர்?
உணர்வுகளைத் தாண்டி, இறைப்பணிக்குத் தன்னை ஒப்படைத்துக் கொண்டவள். உலக வாழ்க்கை அவளுக்கு வேறாக இருக்கிறது. உள்ளுக்குள் உணர்வு வேறாக, வேராக இருக்கிறது.
     பிரமச்சரியம் கடைபிடிப்பது மனம் சார்ந்தது என தத்துவார்த்த விளக்கங்கள் சொன்னாலும், உடலும் சார்ந்தது என்னும் எதார்த்தத்தை மறக்கமுடியாது. அங்கே தான் தன்னின்  கேள்வியை எழுப்புகிறார்,வடிவுடையான். பிரமச்சரியம் கடைபிடிக்கும்போது, பாதாம் பால் அருந்துவது குறித்த கேள்வி ,பாதாம் பால் பற்றியதல்ல. பிரம்மச்சரியம் பற்றியது என நமக்கு விளங்குகிறது.

எஸ்தரோடு ஏற்படும் இணக்கமும்  அனுபவமும் அவள் தரும் பாதாம் பாலில் ஆரம்பமாவது சுவையானது;பாதாம் பால் போன்றே.
இன்பத்தை சிற்றின்பம் என்றும் பேரின்பம் என்றும் நம் முன்னோர் பிரித்தார்கள்.
                        பேரின்பம் என்பது
          சிற்றின்பங்களின் தொகுப்பே
சிறு துளிகளின் தொகுப்பு
அதுவே சமுத்திரம்
பேரின்பம் என்று பிறிதொன்றில்லை, வாழ்வின் இன்பங்களே அவை என்பது வடிவுடையானின் கருத்து முன்வைப்பாக உள்ளது.
     காதலர்களின் சந்திப்பு சுவையானது; சுகமானது. எல்லா காதலுக்குள்ளும் மெல்லிய காமம் இழையோடியிருக்கிறது. அதனால் தான் சந்திப்பு அத்தனை சுகம் தருகிறது. பார்த்ததும் பரவசம் ஏற்படுகிறது. பேசப்பேச இனிக்கிறது. கேட்கக்கேட்க சந்தோஷமாய் உள்ளது. காதலர்களின் பேச்சின் இறுதியில், பஞ்சு மிட்டாய் போல சுருக்கினால் ஒன்றும் இருக்காது. ஒன்றும் தேவையில்லை அவர்களுக்கு. அருகிருக்க வேண்டும் அவ்வளவே. அதற்கு எதையேனும் பேசலாம்.
     எஸ்தருடனான சந்திப்பும் அவளோடு பயணித்த சுற்றுலாவும், தொடர்ந்து கிராமத்தில் தங்கிய நாட்களும் கவித்துவமானவை.அழகாக சித்தரித்திருக்கிறார்.
     எஸ்தரின் வெளிநாட்டுப் பயணத்திற்குப்பின், கதை சொல்லி காவி உடை தரித்து புறப்படுகிறார்.காவி வேஷமல்ல, அது எனக்கு இதமாக இருந்தது’, என்கிறார். வழியில் ஒரு சாமியாரைச் சந்திக்கிறார். அவரோடு தங்குகிறார். தர்க்கம் புரிகிறார். அந்தப் பகுதியில் கதைசொல்லியின் வாயிலாக தன் கருத்தின் செறிவை இயன்றவரை நிறைவு செய்ய முற்படுகிறார்.
     அவர் தனக்கு சீடனாக இருக்கப் பணித்த போது
               இந்த ஆஸ்ரமத்தில் நான்
              குருவாகவும் நீ
சிஸ்யனாகவும் இருக்கலாம் என

சீடனாக இருந்து
பழக்கமில்லை எனக்கு
வேண்டுமென்றால் நீங்கள்
சொன்னதை மாற்றிக்
கொள்ளலாம் என்றேன்
வாழ்வின் தருணங்கள் யாவிலும் தொடரவேண்டிய தன்னம்பிக்கையின் அடையாளமாக உணர முடிகிறது.வெற்றியின் போது வரும் தன்னம்பிக்கை இயல்பானது. இக்கட்டின் போது வரும் தன்னம்பிக்கை தான் உயர்வானது.
     தொடர்ந்து சலோமி. மீன்பிடித்தொழில் செய்யும் விதவை. தன் பெண்மை குணம் கூடத்தொழிலுக்கு ஊறு விளைவிக்கும் என நம்பி ஆணாகவே தன்னை மனத்தளவில் பாவித்துக்கொண்டவள். பெண்ணுக்கு நேரு இக்கட்டுகளிலிது முற்றிலும் புதுவிதமாய் அறியக் கிடைக்கிறது.
           வாள்கொண்டு பூப்பறிக்க
முயல்கிறவர்களின் பூக்களின்
நறுமணத்தையும் அழகையும்
எப்படி உணர இயலும்
என்றும்,
           ஓ மனிதர்களே
          முத்தமிடக் கற்றுக் கொள்ளுங்கள்
          கடவுளை விட முத்தம்
          உங்கள் ஆயுளைக்கூட்டும்
          உங்களில்
          அன்பை ஊற்றாக்கும்
    
என்றும் பேசத்தெரிந்த,கதைசொல்லியுடனான சந்திப்பு அவளின் பெண்மையைப் பூக்கச்செய்கிறது.
          
           நீலவானுக்கு கீழே
          சமுத்திரத்திற்கு மேலே
          அலைமீதுஆடும் கட்டிலில்
நானும் அவளும்
இசைபாடும் அலைகள்
அலைகள் துள்ளி சிலநேரம்
பன்னீர் தெளித்து சாரல் நனைக்கும்
உணர்வுகளின் உச்சத்தில்
நானும் அவளும்
நான் கொடுக்க அவள் பெற்றுக்கொள்வதும்
அவள் கொடுக்க நான் பெற்றுக்கொள்வதும்
எத்தனை வெளிப்படையான சாட்சியம்.
     வாழ்வில் அச்சம் தான் தோல்விகளுக்கான பாதையைச் சமைக்கிறது.
அச்சம் தவிர்.
மகாகவி பாரதி.
                மனிதன்
கடவுளுக்கும் அஞ்சுகிறான்
மனிதனுக்கும் அஞ்சுகிறான்
சமூகத்திற்கும் அஞ்சுகிறான்
சட்டத்திற்கும் அஞ்சுகிறான் அவன்
உணர்வுகளுக்கும் அஞ்சுகிறான்
அச்சமே அவன் வாழ்க்கை
அச்சமே வாழ்க்கையென்றால்
எப்போதுதான் விடுதலை பாவம்
மணத்திற்குப்பின் தானா
என்னும் ஆதங்கம், பாரதியின் ‘அவன்- அஞ்சாத பொருளில்லை அவனியிலேஎன்னும் வரிகளின் தொடர்ச்சியாகக் காணமுடிகிறது. 

     இவ்வாறாக கதை சொல்லியின் வாழ்வுநெடுக, எதிர்கொள்ளும்
நிகழ்வுகளை கதையாடலின் சுவை குன்றாமல் நகர்த்திப்போய் இறுதியில் அந்தப் பெண்களை மீண்டும் சந்திக்கிற வாய்ப்பில் என்னபேசுகிறார் என்று அறிந்தால் ஆச்சர்யப்பட்டுப்போவீர்கள்.
     ஆமாம் நண்பர்களே.
     அவர்களிடம், மரக்கன்றுகள் நாற்றங்கால் உருவாக்க உதவி கேட்கிறார். பெறுகிறார்.
     மரங்களை நடவேண்டும். பசுமை செழிக்க வேண்டும். அதன் மூலம் காற்றுவெளியில் உள்ள மாசு குறைய வேண்டும் என முற்றிலும் புதிய தளத்திற்கு நகர்கிறார்.
லட்சியக்கனவு.
           இரவில் படுத்துக்கிடந்து என்
லட்சியப் பயணத்தை கனவு காண்பேன்
உலகெங்கும் இதுபோல
தோட்டமமைத்து மரக்கன்றுகளை
உற்பத்தி செய்து    எந்தவித
நிபந்தனையும் அற்று
இலவசமாக வழங்க வேண்டும்
என் கண்களில் எங்கேயும்
தரிசு நிலங்களை பார்க்கக்கூடாது
எங்கும் பச்சைப் பசேலென
         மரங்களே காண வேண்டும்
அவரின் ஆசை நிச்சயம் நிறைவேறும். அதற்கான காலம் வெகுதொலைவில் இல்லை. வாழ்த்துகள்.
     சரி. மீண்டும் மையக்கருத்துக்குப் போவோம். எஸ்தரும் சலோமியும்- ஏன் அந்த பால் ஊற்றப்போன இடத்தில் சந்தித்த நங்கை எல்லோரும் நினைவில் சுழல்கிறார்கள்.
     அழகான கதை சொல்லும் திறனோடு, வாழ்வின் மிகமுக்கியமான, தவிர்க்கவியலாத, விஷயம் குறித்து மிகுந்த கவித்துவத்தோடும், நேர்மையோடும், தெளிவோடும் பகிர்ந்து கொண்டிருக்கிற வடிவுடையான் மிகுந்த பாராட்டுக்குரியவர்.
என் மனமார்ந்தபாராட்டுகள்.
படித்துப்பாருங்கள்.
உங்களுக்கும் பாராட்டத் தோன்றும்.