Posts

என்னைப் போல் ஒருவன்

என்னைப் போலவே ஒருவனைப் பார்த்ததாகச் சொல்லிக் கொண்டிருந்தான் அவன். அந்திமயங்கும் நேரம் போதையின் உச்சத்தில் ஹீரோ ஹோண்டாவை ஸ்டார்ட் பண்ண முயற்சித்து முயற்சித்து முடியாமல் வண்டியோடு விழுந்தவனைப் பற்றித்தான் சொல்லிக் கொண்டிருந்தான் அவன். கடந்து போன பேருந்திலிருந்து கவனித்தபோது கன்னிமாரா நூலக வளாகத்திலிருந்து வெளிவந்தவனை நானென எண்ணிக் குரல் கொடுத்திருக்கிறான் இவன். என்னைப்போலவே காணப்பட்டவர் இருந்தார்களாவென உறுதிப்படுத்தவியலாதாயினும் இருக்கின்றனர் நிச்சயமாக இவர்கள் அவனைப் போலவே அவனும் இவனைப் போலவே இவனும்.

பரமேஸ்வரியின் வாழ்க்கைக் குறிப்புகள்

குருமூர்த்தியின் மகளாய்ப் பிறந்தாள் பரமேஸ்வரி. செல்ல மகளாய் வளர்ந்தாள். கல்யாணம் நடந்தபோது தனபாலனின் தங்கை. புகுந்தவீட்டில் எப்போதுமவள் மணிகண்டன் மனைவிதான். பிள்ளைப்பேறு அவளை குமார் அம்மாவாக்கியது. பின்னிரவுப் பொழுதொன்றில் கடந்த வாரம் தன் எண்பத்திமூன்றில் காலமானாள் சதீஷ் பாட்டியாக. பரமேஸ்வரி ஒருபோதும் பரமேஸ்வரியாய் அடையாளம் காணப்பட்டதாக அவளின் வாழ்க்கைக் குறிப்புகளில் தடயங்களேதுமில்லை.                  தமிழ்மணவாளன்

கதவு

குரல் கொடுத்துக் காத்திருந்ததுண்டா இறுகப் பூட்டிய கதவின் வெளிநின்று....? உள்ளிருத்தலை நிச்சயப்படுத்த வியலாது திறந்த கதவு தள்ளி நுழைய, எத்தனிக்கும் வன்மம் தரும் அச்சுறுத்தல் தாழ்ப்பாளாய் அடைத்த பொழுதுகளில் நின்று திரும்பிவிடும் திறந்துவைத்துஎதிர்நோக்குக் குரியவையும் பௌதீக வடிவமற்றுத் தவிர்க்கும் பிறிதுணரச் சாத்தியமற்று இட்டுச் செல்லும் இடர்பயணம் அசோகவனம் வரை நீளும் உடைத்த கதவிடை உருவான பெருவழியில்.

தெளிவுறுதல்

மீனொன்று காற்றில் பறந்து போனது வியப்பாயிருக்கிறது. காற்றுப்பரப்பில் சுவாசிக்கவியலாது மீனுக்கு.அவ்வாறெனில் காற்று எப்போது நீராய் மாறியது. மீன் பறவையானதா செதில்கள் சிறகுகளாய். மீனென்றால் அது காற்றாக இருக்க முடியாது. காற்றென்றால் அது மீனாக இருக்க முடியாது. காற்றாக மீனாக நீராக பறவையாக காற்று நீர் மீன் பறவை மீன் பறவை காற்று நீர் நீர் மீன் பறவை காற்று வியப்பாயிருக்கிறது என்றாலும் கூட மீனொன்று காற்றில் பறந்து போனது. (’புறவழிச் சாலை’  நூலிலிருந்து..)

வருகை

உன் வருகை குறித்த எவ்வித ஆட்சேபனையு மில்லையெனக்கு. எனது கதவுகள் ஒருபோதும் சாத்திவைக்கப் படுவதில்லை என்பதையும் அறிவாய் நீ. உனக்கான சூழல் தான் உனதிவ் வருகையை சாத்தியப்படுத்துகிறது. எண்ணங்கள் என்னுள் சிதறிக் கிடக்கின்றன. ஒன்றையொன்று விஞ்சி நிகழ் காலத்தின் மீதான ஆக்ரமிப்பை நிறுத்தவில்லையின்னும் கழுவியும் கழுவாமலுமாய் மனச்சுவரில் ஞாபகப் பிரதிகளாய் ஒட்டப்பட்டிருக்கின்றன. பக்குவமாய் அவற்றை பரணில் கட்டி போடும் காலத்தின் உதவிக்காகவே காத்திருக்கிறேன். அதற்குள் அகோரமாய் பல் முளைத்த  உன் முகத்தை நீ பார்த்துவிடக் கூடாதெனும் சிறு கவலை உண்டெனினும் இப்போதும் கூட உன் வருகை  குறித்த எவ்வித ஆட்சேபனையும் இல்லையெனக்கு.

பெயர்ச்சொல்.

எது எதை எது எதுவாய்ச் சொல்கிறோம் அது அது அது அதுவாய் இருக்கிறது மாட்டை ஆடென்றும் ஆட்டை மாடென்றும் சொல்லியிருந்தால்... ஒரு வேளை மாடு ஆடாகியிருக்கலாம் ஆடு மாடாகியிருக்கலாம் இடுகுறிப் பெயர்கள் இப்படித்தான். நாலு கால் நாற்காலி மூணுகால் முக்காலி ஆமையிடம் திறமையிருந்தும் சோம்பித் தோற்றதால் ‘முயல்’... காரணம் காட்டும் பெயர்ச்சொல். நல்லதைச் செய்தால் நல்லவன் கெட்டதைச் செய்தால் கெட்டவன் செய்யும் வினையாலணையும் பெயர் கெட்டதைச் செய்தாலும் நல்லவனெனச் சொல்லச் சொல்லி கெடுபிடி செய்யும் காரணிகள்: பணம், பலம் பதவி இலக்கணப்பிழையாய்... நாயை நரியென்றால் நாய் நரியாகலாம் நரிக்குணம் என்னவாகும்...? நன்றி வருமா நரிக்கு...? இடுகுறிக்கே இதுவென்றால் சொல் வெறும் சுட்டு தான் செயலால் மட்டும் கிட்டும். சொல்லை மாற்றும் செயலை விடுத்து தொழிலை மாற்றும் வினையால் சொல் மாறும்.

பூங்காளம்மன் சரிதம்

தார்ச்சாலை விலகி யோடும் வெண்கற்கள் விரவிக் கிடக்குமந்த மீனவேலி சிறுபாதை கடந்தேகும் போதில் மேற்புறத்தே வீற்றிருக்கிறாள் பூங்காளம்மன். கோபுரமில்லை, கலசங்களில்லை, சிற்பங்களில்லை, சித்திரமில்லை, மணடபமில்லை. வெறித்துத் தகிக்கும் வெயிலுக்கிதமாய் தரு நிழலைத் தருமப்பெரும் வேப்பமரத்தின் வேர்களில் தொடங்கும் அவளின் சரிதம். ஆங்கிலேயன் ஆர்மியில் சிப்பாய் அகோர வீரபத்ர நாயுடுவின் மரணத் தீயிறங்கி மரித்துப் போனாள் மனைவி வெங்கட்டம்மா. நெருப்பில் குளிர்ந்த போது நிறை மாத கர்ப்பிணியாய் ஓர் இறப்பில் ஈருயிரிழப்பாய் நிகழ்ந்து போக, சூல் ஆடு குத்தி தொடர்ந்து செய்யும் பூஜை கால வெளியில் கனிந்து குலம் காக்கும் அம்மனாய் குடி கொண்டிருக்கிறாள். தொடர்புகள் அரிதானவக் காலத்தில் கனவு வழி தகவல் சொன்னாராம் மரித்துபோன வீரபத்ரன். தரச்சொல்லி மிலிட்டரி ஆபீஸரிடமும் பெறச்சொல்லி பங்காளியிடமும். நாயுடுவின் துப்பாக்கி போர்வாள் கேடயம் குறுங்கத்தி வழிபாட்டுக்குரியதாயின. வம்சாவழி தவிர யாருக்கும் வழங்கப்படுவதில்லை பூங்காளம்மன் முன்படையலிட்டயெதுவும். திருமணமாகிப் போன பெண்களுக்கும் கூட. மணமான...