கவிநுகர் பொழுது-17

( மு.ஆனந்தனின், ‘யுகங்களின் புளிப்பு நாவுகள்’,நூலினை முன்வைத்து) மு.ஆனந்தனின், ‘யுகங்களின் புளிப்பு நாவுகள்’,நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு ஆற்றிய உரையின் கட்டுரை வடிவமாக இதைக் கொள்ளலாம். யுகம், புளிப்பு, நா மூன்றின் கூடுகை, யுகங்களின் புளிப்பு நாவுகள். புளிப்பு என்பது ஒரு சுவை. புளித்துப்போதல் என்பது சலித்துபோதலின் குறியீடு எனக் கொள்ளலாமா? புளித்த பதார்த்தங்கள் கெட்டுப் போனதன் விளைவு என்பதாகவும் பொருள் படக்கூடும். அவ்வாறெனில் திரிந்து போன ஒன்றை அடையாளம் கொள்வதற்கான சாத்தியத்தைக் கொண்டது நா. அந்த நாவே புளிப்பாய் மாறினால் என்னவாகும். அதுவும் யுகங்களின் புளிப்பு நாவுகள் என்கிறார் தலைப்பில். யுகம் என்பது காலத்தினை அளக்கும் மிகப் பெரிய அளவீடு. அதன் நம்பகத்தன்மை குறித்த இடத்திற்கு நகரவில்லை. அதனை ஒரு அடையாளத் தொன்மமாகக் கருதுகிறேன். கிருத யுகம் 17,28,000 ஆண்டுகள். இந்த யுகத்தில் 100% மக்கள் அற்த்தோடு வாழ்ந்தனராம். திரேதாயுகம் 12,96,000 ஆண்டுகள். இந்த யுகத்தில் 75% மக்கள் அறத்தோடு வாழ்ந்தனராம். துவாபரயுகம் 8,64,000 ஆண்டுகள். இந்த யுகத்தில் வாழ்ந்த 50% சதவீத மக்கள்...