Posts

Showing posts from December, 2010

கதவு

குரல் கொடுத்துக் காத்திருந்ததுண்டா இறுகப் பூட்டிய கதவின் வெளிநின்று....? உள்ளிருத்தலை நிச்சயப்படுத்த வியலாது திறந்த கதவு தள்ளி நுழைய, எத்தனிக்கும் வன்மம் தரும் அச்சுறுத்தல் தாழ்ப்பாளாய் அடைத்த பொழுதுகளில் நின்று திரும்பிவிடும் திறந்துவைத்துஎதிர்நோக்குக் குரியவையும் பௌதீக வடிவமற்றுத் தவிர்க்கும் பிறிதுணரச் சாத்தியமற்று இட்டுச் செல்லும் இடர்பயணம் அசோகவனம் வரை நீளும் உடைத்த கதவிடை உருவான பெருவழியில்.

தெளிவுறுதல்

மீனொன்று காற்றில் பறந்து போனது வியப்பாயிருக்கிறது. காற்றுப்பரப்பில் சுவாசிக்கவியலாது மீனுக்கு.அவ்வாறெனில் காற்று எப்போது நீராய் மாறியது. மீன் பறவையானதா செதில்கள் சிறகுகளாய். மீனென்றால் அது காற்றாக இருக்க முடியாது. காற்றென்றால் அது மீனாக இருக்க முடியாது. காற்றாக மீனாக நீராக பறவையாக காற்று நீர் மீன் பறவை மீன் பறவை காற்று நீர் நீர் மீன் பறவை காற்று வியப்பாயிருக்கிறது என்றாலும் கூட மீனொன்று காற்றில் பறந்து போனது. (’புறவழிச் சாலை’  நூலிலிருந்து..)

வருகை

உன் வருகை குறித்த எவ்வித ஆட்சேபனையு மில்லையெனக்கு. எனது கதவுகள் ஒருபோதும் சாத்திவைக்கப் படுவதில்லை என்பதையும் அறிவாய் நீ. உனக்கான சூழல் தான் உனதிவ் வருகையை சாத்தியப்படுத்துகிறது. எண்ணங்கள் என்னுள் சிதறிக் கிடக்கின்றன. ஒன்றையொன்று விஞ்சி நிகழ் காலத்தின் மீதான ஆக்ரமிப்பை நிறுத்தவில்லையின்னும் கழுவியும் கழுவாமலுமாய் மனச்சுவரில் ஞாபகப் பிரதிகளாய் ஒட்டப்பட்டிருக்கின்றன. பக்குவமாய் அவற்றை பரணில் கட்டி போடும் காலத்தின் உதவிக்காகவே காத்திருக்கிறேன். அதற்குள் அகோரமாய் பல் முளைத்த  உன் முகத்தை நீ பார்த்துவிடக் கூடாதெனும் சிறு கவலை உண்டெனினும் இப்போதும் கூட உன் வருகை  குறித்த எவ்வித ஆட்சேபனையும் இல்லையெனக்கு.