Thursday, September 30, 2010

உரைத்தல் முரண்


கடை வீதியில் எதிர்வந்த
பெண்ணைக் காட்டி
‘நான் காதலித்த பெண்ணிவள்’
என்கிறான் கணவன்.


கல்யாண வீடொன்றில்,
வந்திருந்தவனைக் காட்டி
‘நீங்கள் பெண்கேட்டு வரும் வரை
ரொம்ப நாளாய்
இவருக்குத்தான் என்னை
கல்யாணம் செய்வதாய்ப் பேச்சு’
என்கிறாள் மனைவி.

                     ----ஏப்ரல் 2003

என்னுடன்....?

எதை எழுதி முடிக்கும் போதும்
உன்னையும் சேர்த்தே
எழுதுகிறேன்

எதை வாசித்து முடிக்கும் போதும்
உன்னையும் சேர்த்தே
வாசிக்கிறேன்

தனிமையில் அமர்ந்திருக்கும்போது
பின்புறமாய்
தோள்தட்டி விழிமலர்கிறாய்

எந்தவொரு பயணத்தின் போதும்
எதிரில் வந்து
புன்னகை பூக்கிறாய்

கனவிலும் நனவிலும்
நிகழும் இவை குறித்து
உன்னிடம் கூறுகையில்

அதற்குமுனக்கும்
எவ்விதத் தொடர்புமில்லையென
கைவிரிக்கிறாய்

பொய் தானே சொல்கிறாய் நீ...?

Wednesday, September 29, 2010

கௌரவம்

இறுதி ஊர்வலத்தின் போது
இறைக்கப்படும் பூக்களோடு
இறந்தவர் குறித்த
விமர்சனங்களும்  தெரு முழுக்க.

ஒவ்வொரு மரணமும்
அறிவுறுத்தத்தான் செய்கிறது
எந்தக்கணத்திலும்
நிகழ்ந்து முடியக்கூடிய
வாழ்வின்
நிலையாமை பற்றி.

சில
அகால மரணங்கள்
மேலும்
அதிர்ச்சியோடு உணர்த்துகின்றன
அதையே.

ஆயினும்
இந்த மனிதர்கள்
சவ அடக்கத்தின் போதே
பிரஸ்தாபிக்கிறார்கள்
பிணத்தின் முன்னிலையில்
யாரின்
கௌரவம் முதன்மையானதென.

                                       --   மார்ச்  1999

குப்பை பற்றி ஒரு கவிதை

குப்பைக் கவிதை எழுத வேண்டும்
ஒன்று.எனினும்
குப்பையெனத் தனியே ஏதுமில்லை.

பொருளற்ற பொருள்கள்
பயன்பாட்டின் முடிவில்
திணைகள் திரிந்து பாலையானதாய்.

பொருள்களென்றின்றி மனசுக்குள்ளும்.

மணப்பாறை பக்கமுள்ள எங்கள்
கிராமத்துக் குப்பை மேட்டில்
பரங்கிக் கொடி படர்ந்து கிடக்கும்.

சத்தான குப்பையில் ரோஜா பூக்கும்
புஷ்டியாய்.

குப்பைக்குக்  க ண்காட்சி நடத்த
வேண்டும். குப்பைக் கண்காட்சி.


என் அறையில்
நல்ல புத்தகங்களும் கலைந்து
கிடந்தன குப்பையாய்.
அடுக்கி வைத்தேன்
குப்பை அகல
அடுக்கினால்.........போதாது.

                                 கணையாழி- ஏப்ரல் 1998

Monday, September 27, 2010

மனிதாபிமானம்

சிவப்பு வன்ணம்  மாறப்போகும்
தருணத்திற்காய்
வாகனத்தின் விசையூட்டி  விசையூட்டி
ஆயத்தத்தின் வீச்சை
விரலசைவில் வைத்திருப்போரும்

முன்னம் சென்றுவிடவேண்டும் என்னும்
முனைப்போடு
நிறுத்துக்கோட்டைத் தாண்டி
பரபரத்திருப்போரும்

கணப்பொழுதின் தாமதமும்
ஏற்படுத்தி விடக்கூடிய
சவால்களோடு அவசரத்தின் விளிம்பில்
நிற்பவர்களும்

யாரோ முகமறியா ஒருவரை சுமந்தபடி
அபயக்குரலெழுப்பி
ஆம்புலன்ஸ் சுழலும்  விளக்குடன்
வரும்போது
தம் வாகனத்தை நிறுத்தியோ
வேகம் குறைத்தோ
வழிவிட யத்தனிக்கும் பதற்றத்தில்  தான்
ஊசலாடிக்கொண்டிருக்கிறது
இன்னும் கொஞ்சம்
மிச்சமிருக்கும் மனிதாபிமானம்.

கவிதை : இடம்: சென்னை இரட்டைஏரி சிக்னல்
                    நேரம்: 26-09-10 காலை 10 .00 மணி