Posts

Showing posts from August, 2010

தமிழாக்கம்?

தமிழ் நாடு அரசுப் பேருந்துகளில், எண்களைத் தமிழாக்கம் செய்து எழுதியிருக்கிறார்கள். உதாரணமாக, ’TN 01 N xxxx’ என்று ஒரு எண்ணை ’தநா 01 நா xxxx’ என எழுதியுள்ளார்கள். TN என்பது தமிழ்நாட்டைக் குறிக்கிறது என்பதால் ’த நா’ என்பதைக் கூட ஏற்கலாம்?. அடுத்து வரும் ’N’ ஆங்கில alphabetical வரிசைக்கிரமத்தில் வழங்கப்படும் போது அது எப்படி ’நா’ வாகும். அப்புறம் Q, W என்னவாக மாறும். P,B வரிசையிரண்டும்? தமிழ்ப் படுத்த நினைத்தால் தமிழ் அகர வரிசையில் எண்களை வழங்குவதே சரியாகும். இல்லையெனில் அப்படியே பயன்படுத்துவதே முறையாகும்.

நீ....

நகலாய் எதிரில் வந்து உரக்கப் பேசுகிறாய் அசலும் அச்சமுறும் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதில்களுடனே எதிர் கேள்விகளும் இருக்கத்தான் செய்கின்றனவாயினும் எழுப்புவதில்லை. கேள்விகள் மேலும் மேலும் கேள்விகளாகும் அச்சத்தில்.

சுவருக்கு அப்பால்

இந்தச் சுவர்கள் பொல்லாதவை எத்தகைய விஷயங்களையெல்லாம் மறைத்து விடுகின்றன இந்தச் சுவர்கள் இவற்றின் மீது தான் எத்தனை மரியாதை வைத்து, வாழ்வின் சித்திரங்களையெல்லாம் வரைந்து வைக்கிறோம் நம்முடனேயே நகர்ந்து வருகின்றன சில சுவர்கள் திடீரென முன் வந்து  மறித்து நிற்கையில் கடவுளரையே தாங்கும் அவற்றின் மீதான மீதான அச்சம் தவிர்க்க முடிவதில்லை எப்போதும் மறைத்து நிற்கும் சுவர்களின் அந்தப் புறத்தை அறிந்து கொள்வதில் ஆர்வம் குறைவதே யில்லை இந்தச் சுவர்கள் பொல்லாதவை வாய் திறந்து பேச முடியவில்லை, காதுண்டு என்பதால் மட்டுமல்ல சுவருக்கப்பால் யாதுண்டு வெனவறியாத வரைக்கும்

யதார்த்தம்

எதைக் காய்ச்சி வடிக்கிறாய் இத்தனை அடர்த்தியாய் அகங்காரத்தை தொடர்ந்த இறுக்கம் சமாதியாக்கும் மனத்தைப் புதைத்து உதிரும் பூக்களாயினும் அடுத்தடுத்து உருவாகும் மொட்டுகள் உயிர்த்தலின் அடையாளம் இருக்கட்டும் தவறில்லை என்றாலும் கூட இயல்புதான் வாழ்க்கை நினைவின் நிகழ்ச்சிகளன்று நிஜம்  வேறாக போவது போய்க்கொண்டிருக்கிறது வருவது வந்து கொண்டிருக்கிறது தடுப்பதற்கில்லையெதையும் அவ்வளவு எளிதாய் காணக்கிடைப்பதில்லை கனவுகளின் சாம்ராஜ்யம்.

நீர்ப் பறவை

கண்ணின் தூரம் வியாபித்திருக்கும் நீல வண்ண ராட்சசப் பறவை சிறகு விரித்துக் கிளம்பும் பறக்க. இரைச்சலில் செவிப்பறை கிழிய மனசுக்குள் புரட்டிப் போட்ட ஞாபகங்களூடே உப்புக்கரிக்கும் பாதம் முழுக்க. சிறகு மடக்கி விரிக்கும் மீண்டும் மீண்டும் ராட்சசப் பறவை.

இது உன் கவிதை

என் எல்லைக் கோட்டை அறிந்திருக்கிறாய் என் மெளனத்தின் முழு அர்த்தமும் புரிந்து கொண்டிருக்கிறாய் மெல்ல மழைதூறிக்கொண்டிருந்த மாலை உன் வருகை சந்தோஷமாய் இருந்தது ஆயினும் தொடர்ந்ததன் அச்சம் தவிர்க்கவியலாததாய் இருக்கிறது.உன் நினைவுகள் என்னை மேலும் சலனப்படுத்துகிறது. வெறுப்பின்றி, விருப்பங்கொள்ளவியலாமல் மனத்தின் ஆழம் மின்னலாய்த் தோன்றும் மகிழ்ச்சியினூடே செவிகிழிக்கும் பேரிடி ஓசை அதிர்கிறது. உனக்கொன்றும் விளங்காமலில்லை எனவே தான் என் கவிதையை நீயெழுதுகிறாய் நீயும் நானும் வேறல்ல.