Posts

Showing posts from October, 2010

ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி

*நாவல்-நாடகம் ,சிறுகதை, நவீன கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில் 2010 ஆம் ஆண்டு வெளியான
நூல்கள் போட்டியில் பங்கேற்கலாம்.
......*ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியே பரிசுத்தொகை
ரூ 10,000 வழங்கப்படும்.
*நூல்களின் மூன்று பிரதிகள் அனுப்பவேண்டும்.
*நூல்கள் வந்து சேரக் கடைசி நாள் 31-01-2011
 *அனுப்ப வேண்டிய முகவரி
-------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ்மணவாளன்
18, பத்மாவதி நகர்
மாதவரம் பால் பண்ணை
சென்னை-600 051

-------------------------------------------------------------------------------------------------------------------
செந்தமிழ் அறக்கட்டளை

மணப்பாறை

அவளுக்குப் பெயர் தான் அம்மா

வானிலவின் குளிர் முகத்தின் வனப்பைக் காட்டி
      வாஞ்சையுடன் குதூகலமாய் உணவை ஊட்டித்
தானிருக்கும் குருதியினைப் பாலாய்த் தந்து
      தாயன்புச் சுவைதனையும் சேர்த்துத் தந்து
நானிலத்தில் நல்லவர்கள் மெச்சும் வண்ணம்
     நம்பிள்ளை வரவேண்டும் எண்ணத் தோடு
தேனினிய கனவுகளை நெஞ்சில் தேக்கி
     தேகத்தை நமக்காகத் தேய்க்கும் உள்ளம்.


கன்றுதனை ஈன்றவுடன் நெஞ்சின் அன்புக்
     கட்டளையால் நக்குகிற பசுவை போல
நின்றுலகில் நிலைபெறவே பெற்ற பிள்ளை
      நீர்கொண்ட பயிராக வளர வேண்டி
அன்புமழை பொழிகின்றாள் ஆசை  யாக
      அழுகின்றாள் நெஞ்சத்தில் ஓசையின்றி
என்றுமவள்(ன்)  இனிதாக வாழ்தல் வேண்டும்
      எண்ணங்கள் சுமையாலே ஏங்கி நிற்பாள்.


அரங்கத்தில்  ஆடவைத்த பெருமை யெல்லாம்
      அவனிதனில்  நிலையற்ற நெஞ்சின் அன்புச்
சுரங்கத்தின் முதலாளி; தூய தாய்மைச்
      சொந்தத்தின் உணர்வுதனை ஊட்டி, தன்னின்
கரங்களிலே குழந்தையினைக் கைதி யாக்கி
      கால்தனையே கண்களிலே ஒற்றிக் கொள்ளும்
திறங்கொண்ட தியாகத்தின் சொந்தக் காரி
      திருநாட்டில் தாயின்றி யாரு மில்லை.


சிறுமழலைச் சொல்லுக்கும் விளக்கம் கூறிச்
      சிங்காரப் பாதத்தில் முத…

அதனாலென்ன...?

கொஞ்சமாய் வெளிச்சம் கலந்த
குளிர்காற்றின் பரவலோடு
அறிமுகமாகிறது காலை.

கலங்கிய குட்டையில்
மீன் பிடித்த கவிச்சு மணம்
முழுஇரவின் அவகாசத்தில்
விலகியிருக்க வேண்டும்.

எதையும் எழுதிவிடக் கூடிய
வெள்ளைத்தாளென
விரிந்து கிடக்கிறது மனசு
நாள் முழுதின் வக்கிரங்களையெல்லாம்
நானா தாங்கிக் கொள்ளப்போகிறேன்
என்னும் வினாவோடு.

மெல்லிய அசைவுகளும்
சின்ன சின்ன சப்தங்களும் கூட
முக்கியமானவையாகின்றன
கிரகிப்பின் தீர்க்கத்தில்.

வைத்த புள்ளிகள்
பொட்டுகளா, வடுக்களாவென
வெம்மைப் பொழுதின்
கோலமே வரைந்து காட்டும்
வாசலில்
தெரிந்தோ
கவனமின்றியோ
அமைதியாய் வரைந்தவிக் கோலம்
பாதங்களின் கீழே
சிதைந்து போகத்தான் செய்கின்றன.

அதனாலென்ன...?
அடுத்த அதிகாலையிலும்
வரையத்தானே போகிறோம்
இன்னொரு அழகான கோலத்தை.

                         ------- அக்டோபர் 2003

மறுபக்கம்

அறைந்து சாத்தப்பட்ட கதவில் தொங்கும்
பெரிய பூட்டின் கனம் தாளாது
நசுங்கிச் சிதையும்
சந்தித்தலின் மீதான ஆர்வம்.

உரையாடலை நறுக்கிச் சிதைக்கும்
கூரிய மௌனத்தின்
நிராகரிப்பு.

மரணவீட்டின் இரவென
மனசைக் கலவரப் படுத்தும்
ப்ரயோகித்த ஒற்றைச் சொல்லின் வீச்சு.

அறிமுக மற்றவனைப் போல எதிரில்
கடந்து செல்லும்
ஒவ்வொரு முறையும் புதைக்கப்படும்
காலம் கடந்த உண்மைகள்

எனவேதான்
நினைத்த மாத்திரத்தில் சந்தோஷம்
தந்த
ஞாபகங்களை மறப்பதொன்றே
பிரதானமாய்.

இப்போது
காய்ந்த செடியைப்
பிடுங்கிய போதுதான் தெரிந்தது
வேரின் ஆழமும்
காயாத ஈரமும்.

விசாரிப்பு

எந்தவொரு சந்திப்பின் போதும்
’சௌக்யமா’?  வென்றே
உரையாடல் தொடங்குகிறது.

என்னை யார் சந்தித்தாலும்
நான் யாரைச் சந்தித்தாலும்
முதல் வார்த்தை அதுவாகவே
இருக்கிறது.

எதிரில் வந்த என்னைப் பார்த்து
புன்முறுவலுடன்
வினவுகிறாய் நீயும்
‘சௌக்யமா’?  வென.

எப்படிச் சொல்வேன் உன்னிடத்திலென்
சௌக்யமின்மையையும்
இன்மையின் காரணமே
நீ தானென்பதையும்.

கதவு

யாவரின் வருகையையும் எதிர்நோக்கி
வரவேற்கத் திறந்திருக்கிறது
வாசற்கதவு.

திறந்து வைத்த கதவின் வழி
யாரும் வராத பொழுதில்
வெறுமை
அப்பிக்கிடக்கிறது.

கவனமாய்க் கண்காணித்துக் கொண்டிருந்த
வாசல் வழியே
மெல்ல ஒருவர் வெளியேறுகிறார்.

பிறகு மற்றொருவர்
பிறிதொருவர் என.

உள்ளே வருவதை மட்டுமே
நிச்சயப்படுத்தாத கதவின் திறப்பு
வெளிப்போதலின்
எல்லா சாத்தியங்களையும்
உள்ளடக்கியதென்பதை
உணரத் தலைப்படும் கணத்தில் தான்
அந்தக் கடைசி மனிதனும்
வெளியேறி கொண்டிருந்தான்.

                                   -------ஜூலை2003