அதனாலென்ன...?

கொஞ்சமாய் வெளிச்சம் கலந்த
குளிர்காற்றின் பரவலோடு
அறிமுகமாகிறது காலை.

கலங்கிய குட்டையில்
மீன் பிடித்த கவிச்சு மணம்
முழுஇரவின் அவகாசத்தில்
விலகியிருக்க வேண்டும்.

எதையும் எழுதிவிடக் கூடிய
வெள்ளைத்தாளென
விரிந்து கிடக்கிறது மனசு
நாள் முழுதின் வக்கிரங்களையெல்லாம்
நானா தாங்கிக் கொள்ளப்போகிறேன்
என்னும் வினாவோடு.

மெல்லிய அசைவுகளும்
சின்ன சின்ன சப்தங்களும் கூட
முக்கியமானவையாகின்றன
கிரகிப்பின் தீர்க்கத்தில்.

வைத்த புள்ளிகள்
பொட்டுகளா, வடுக்களாவென
வெம்மைப் பொழுதின்
கோலமே வரைந்து காட்டும்
வாசலில்
தெரிந்தோ
கவனமின்றியோ
அமைதியாய் வரைந்தவிக் கோலம்
பாதங்களின் கீழே
சிதைந்து போகத்தான் செய்கின்றன.

அதனாலென்ன...?
அடுத்த அதிகாலையிலும்
வரையத்தானே போகிறோம்
இன்னொரு அழகான கோலத்தை.

                         ------- அக்டோபர் 2003

Comments

Popular posts from this blog

இன்குலாப் என்னும் பொதுவுடைமைக் கவிஞன்

ஏற்புரை--தமிழ்மணவாளன்

தை முதல்நாளே தமிழர் புத்தாண்டு