மரத்தின் நிழல்’

( செஞ்சி தமிழினியனின்,’ மரத்தின் நிழல்’, ஹைக்கூ நூலினை முன் வைத்து)
          
                ஆரம்ப காலத்தில் ஐக்கூ கவிதை ஒக்கூ (hokku, ஃகொக்கூ) என்றே அழைக்கப்பட்டது. பின்னர் ஐகை என்று திரிந்து ஐக்கூ என்றாயிற்று. ஐக்கூ என்றால் அணுத்தூசி போன்ற சிறிய கவிதை என்று பொருள் கூறுகின்றனர். இக்கவிதையின் பெயரை ஹொக்கு என்று பாரதியார் தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்
ஜப்பானிய மொழியில் தோன்றிய ஐக்கூ, 5-7-5 என்னும் அசையமைப்புடையதாக, ஜென் (Zen) தத்துவத்தை விளக்குவதற்கும் இயற்கையைப் போற்றுவதற்கும் பயன்பட்டது. தமிழிலக்கியத்தில் இவ்வடிவத்தில் அமைந்த கவிதைகள் சமூக விமர்சனத்திற்கும் சமூகக் கேடுகளைச் சாடுவதற்கும் பெரிதும் பயன்படுகிறது எனலாம்.
”தமிழ் ஹைக்கூவிலும் முருகியல் படைப்பாளிகள், சமுதாயப் படைப்பாளிகள், வாழ்வியல் படைப்பாளிகள், பெரியாரியப் படைப்பாளிகள், தலித்தியப் படைப்பாளிகளுண்டு. சமூகப் பார்வையோடு படைக்கப்பட்ட ஹைக்கூ கவிதைகளே அதிகம் பேசப்படுகின்றன..இதனை நன்குணர்ந்த கவிஞர் செஞ்சி தமிழினியன்”மரத்தின் நிழல் என்னும் தமது நூலினை அழகுறப் படைத்துள்ளார்.”, என்று தனது முன்னுரையில் பல்லவிகுமார் குறிப்பிடுகிறார்.
செஞ்சி தமிழினியனை அவர்து முந்தைய கவிதை நூல்களான,’ராக்காச்சி பொம்மை’, ‘செப்புக்கடை’, நூல்களின் மூலமாக நன்கறிவேன். சமூகத்தின் மீது தீராத காதல் கொண்டவர். இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகள் அத்தௌணையும் சமூகத்தின் மீதான அக்கறையோடே எழுதப்பட்டிருக்கின்றன என்பதை எளிய வாசிப்பே புலப்படுத்திவிடக்கூடும்.
அதற்கு அவருக்கு ஹைக்கூ வடிவம் பெரிதும் கை கொடுத்திருக்கிறது. பெரிய விஷயங்களை பெரும் விவாதப் பொருள்களை மூன்று வரிகளில் பளிச்செனப் பேசுவது பெரும் சாதுர்யம். அதுவே ஹைக்கூவின் சிறப்பும் கூட.
வாழ்க்கை என்பது வெறும் காலம் அல்ல. செயல்கள். ஆனாலும் வாழ்க்கையைக் காலத்தால் கணக்கிடுவது தவிர்க்கமுடியாததாகிறது.பிறப்பிலிருந்து இறுதி வரை நம்மின் செயல்பாடுகளே வாழ்வு குறித்த மதிப்பீடுகளாகும். ஆனால் இளவயதில் ஆற்றும் பணிகளுக்கு முதுமையில் பலன் கிடைக்கிறதா? முதியவர்களிடம் இச்சமூகம் காட்டும் அக்கறைஎன்ன. சமூகம் என்பது என்பது பெற்ற பிள்ளைகளையும் சேர்த்துத் தான். முதியோர் இல்லங்களை விசாரிக்கிற பிள்ளைகள். முதியோர் இல்லங்களை விசாரிக்கிற முதியோர். அறிந்து வைத்திருப்பது நல்லது தானே. முதியோர் குறித்தும் அவர்கள் பால் சமூகம் காட்டும் அக்கறையின்மை குறித்தும் நிறய பேசப்பட்டுள்ளன. இவர் ஒரு கவிதை எழுதுகிறார்.முற்றிலும் புது அவதானிப்புடன். மனிதர்களைப்பற்றியே பேசாமல்.
                  கடைசியாய்
                  சந்தையைப் பார்க்கிறது
                  உழுது ஓய்ந்த மாடு.
எத்தனை செய்திகளை உள்ளடக்கிய வரிகள். மேலே நான் முதியவர்களுக்குச் சொன்ன எல்லாவற்றினையும் பொருத்திப் பார்க்கவியலும் தானே.
இப்படி இந்தத் தொகுப்பில் உள்ள பல கவிதைகள் மேலதிகச் சிந்தனையைத் தூண்டுவனவாகவ உள்ளன.
சர்க்கரை என்றால் இனிக்குமா? சர்க்கரை என்று எழுதி நாவில் தடவினால் மட்டும் இனிக்குமா? வெறும் வார்த்தைகளால் ஆகிவிடாது எதுவும். அப்படிச் சொல்லிவிட முடியுமா. வார்த்தைகளால் தான் ஆகிறது யாவும். செயல்கள் செயல்கள் ஆவதற்கு முன் நர் முன் மொழியப்படுவது சொற்களாலே தான். அதுவே செயலாய் மாறும். செயலாஇ மாறும் போது தீர்வு கிட்டும் தானே. அவ்வாறெனில் ,
                  ஒரு மிடறு அள்ளிக்குடித்தேன்
                  என்ன சுவை
                  சர்க்கரைக் குளம்
என்னும் செஞ்சி தமிழினியனின் வார்த்தைகளை நம்புவதில் சுகம் இருக்கிறது.
இன்றைக்கு கைபேசிகள் தனிமனித சுதந்திரத்திப் பெரிதும் பறித்து விட்டன.னாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பது பற்றி அழைப்பவர்க்கு எவ்விதக் கவலையும் இருக்கப்போவதில்லை.நம் மன நிலை குறித்து அக்கறையில்லை. உடல் நிலை குறித்தும் அக்கறையில்லை. சரி. மறுக்கும் உரிமையேனும் உள்ளதாவெனில் நாம் இருக்குமிடம் கூட அறிந்து கொள்ள முடியும். அலைபேசிகளில் பதிவு செய்யப்பட்டிருக்கும் பதில்கள் சுவாரஸ்யமானவை.
அலைபேசியை மௌனத்தில் வைத்திருக்கும் நபர் உறங்கிக்கொண்டிருந்தாலும் அழைப்பவரிடம், மிகவும் பிஸியாக இருப்பதாக சொல்லும். அருகிலேயே நின்று கொண்டிருப்பவரை ,தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பதாக அறிவிக்கும். தயவு தாட்சண்யமில்லாமல், உங்களோடு பேச விரும்பவில்லையென்று சொல்லும்.
                  தெளிவாக சொல்கிறது
                  கைப்பேசி
                  பேச விரும்பவில்லை.
சமூக விடுதலைக்காகத் தன் வாழ்நாளின் இறுதிவரைக் குரல் கொடுத்தவர் தந்தைப் பெரியார். அவரின் கடைசிக் கூட்டம் சென்னைதியாகராய நகரில்திசம்பர் 19, 1973 அன்று அவர் கலந்து கொண்ட கூட்டமாகும். அக்கூட்டத்தில் சமுதாயத்தில் சாதி முறையையும், இழிநிலையையும் ஒழித்துக்கட்ட திராவிடர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் என்று பேசினார். உலகின் மாபெரும் சுயசிந்தனையாளரும், உறுதியான பகுத்தறிவுச் சிற்பி என அனைவராலும் போற்றப்பட்ட இராமசாமி, சிகிச்சை பலனின்றி திசம்பர் 24, 1973 அன்று தனது 94 ஆம் வயதில் இயற்கை எய்தினார்.
                            
                                      கடைசி சிந்தனை ஒன்றே
                        மானுட மீட்பு
                        வெண்தாடிக் கிழவன்
பெரியாரை நினைவுகூர்வது எந்தப் படைப்பாளிக்கும் இருக்கவேண்டிய தார்மீகக் கடமை.
மீனவர்கள் படும் துயர் சொல்லிமாளாதது. குறிப்பாகத் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிப் போவதாகச்சொல்லி அவர்களின் வலைகளை அறுப்பதும் படகுகளைப் பறிமுதல் செய்வதும் சுவதும் கைது செய்வதும் என்று நாள்தோறும் அவர்கள் படும் பாடு இவ்விதமிருக்க,
                        வலையை அறுக்கிறார்கள்
                        வாய்திறப்பதில்லை
                        யாருக்கு நட்பு நாடு?
என்னும் கேள்வி மிக முக்கியமானது.
முன்பெல்லாம், முன்பெல்லாம் எனில் முப்பது ஆண்டுகளுக்கு முன் , ஒரு ஊரில் குடிப்பவர்கள் யாரென்று அறிவது எளிது. குடிகாரர்களைக் கணக்கெடுப்பது எளிது. இன்றைக்கு இரண்டு தலைமுறையாக நம் தமிழகம் குடிகாரர்களை உருவாக்கும் மாநிலமாக மாறிப்போனது
                        நீரின்றி அமையாது உலகு
                        நிரூபித்துக் கொண்டிருக்கிறது
                        டாஸ்மாக்
என்ன்கிற தமிழ்மணவாளனின் கவிதை வரிகள் நினைவுக்கு வருகின்றன. குடிக்காதவர்கள் மிக்ககுறைவு என்று சொல்லுமளவிற்கு குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது.
                        கணக்கெடுத்தார்
                        மிக விரைவாய்
                        குடிக்காதவர் யாரென்று
என்னும் செஞ்சி தமிழினியனின் வரிகள் உண்மையானவை.
            ஈன்றாள் பசி காண்பாள் ஆயினும் செய்யற்க
            சான்றோர் பழிக்கும் வினை
என்பான் வள்ளுவன்.தன்னைப் பெற்றெடுத்த தாய் ,எந்த வயிற்றில் சுமந்து நம்மை ஈன்றாளோ அதே வயிறு பசியால் அவதியுறும் போதும் அறம் தவறி நடக்கக் கூடாது என்பான் வள்ளுவன். அடிப்படை மாணூட மாண்பு பிற்ழக் கூடாது என்பதை , எத்தருந்த்திலும் அடிப்பைக் குணத்தை இழந்து விடக்கூடாது என்பதை
                        இனிக்கிறது
                       பிழிந்தாலும்
                       கரும்பு
என எளிய வாழ்வின் யதார்த்த உதாரணம் மூலம் அறிய முடியும்.

சாலைகளின் இருபுறமுமிந்த மரங்களை வெட்டி விரிவு படுத்திவிட்டோம். விரிந்த சாலைகள் இருக்கின்றன. நிழல் தரும் மரங்கள் எங்கே? பல் நுறு கிலோமீட்டர் தூரத்துக்கு மரங்களே இல்லாத சாலைகள். அதிலும் குறிப்பாக அமைக்கப் பட்ட புறவழிச் சாலைகளில் மரங்களைப் பார்ப்பதே அரிது.
                        அகலமான சாலை
                        காணவில்லை
                        மரத்தின் நிழல்
“அசோகர் மரம் நட்டார்  என்று வரலாற்றில் படித்திருக்கிறோம். சாலை எஙும் நிழல் தரும் அதனோடுபயனளிக்கும் புளிய மரம்,ஆலமரமிலுப்பைமரம், அரசமரம் தம்மை இருபுறமும் கண் இமைபோல வளர்த்து வந்தோம். சாலை விரிவாக்கம் என்ற பெயரால் மரமனைத்தும் வெட்டி விட்டு ஆணி வேரற்ற இம்மண் சார்ந்த மரமல்லாதவற்றை நட்டதால் இந்த நடா புயலில்சென்னைத் தெருக்கள் பாலவனமாகிவிட்டன’, என்று புதுவைத் தமிழ்நெஞ்சன் அணிந்துரையில் குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது.
இங்கே ஏமாற்றுபவர்களுக்கே காலம்.எல்லாவற்றிலும் ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கக் கூடியவர்கள் வெற்றி பெறும் வாய்ப்பைப் பெறுகிறார்கள்.வைக்கோலை வைத்து கன்றுக் குட்டியாகக் காட்டி ,
                        நக்கியபடி
                        பால் சுரக்கிறது பசு
                        வைக்கோல் கன்று
என்னும் கவிதையாக.
’அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் ’,
என்று சொல்லும் பாரதியின் வரிகளின் ஹைக்கூவாய்,இவருடைய,
                        காட்டையே
                        மிரட்டுகிறது
                        ஒற்றைத்தீக்குச்சி

இப்படி சமூகத்தின் மீதான உண்மையான ஈடுபாடும் அக்கறையும் கொண்ட கவிமனம் எழுதிச் செல்லும் ஹக்கூக் கவிதைகளீன் தொகுப்பாக செஞ்சி தமிழினியனின் ,மரத்தின் நிழல்’ தொகுப்பு அமைந்திருக்கிறது. மகிழ்ச்சி,வாழ்த்துகள்.

Comments

Popular posts from this blog

இன்குலாப் என்னும் பொதுவுடைமைக் கவிஞன்

ஏற்புரை--தமிழ்மணவாளன்

தை முதல்நாளே தமிழர் புத்தாண்டு