இன்குலாப் என்னும் பொதுவுடைமைக் கவிஞன்


லக்கியம் காலத்தின் கண்ணாடி.இலக்கியத்தின் வாயிலாக சமூகத்தின் நிலையை அறிந்துகொள்ளவியலும். வள்ளுவன் எவையெல்லாம் கூடாதென எழுதி யிருக்கிறானோ அவையெல்லாம் அவன் காலத்தில் சமூக பழக்க வழக்கங்களாக இருந்திருக்கின்றன என்பதை யூகிக்க முடியும். எனவே ஒரு படைப்பாளி சமூகத்தின் தேவை கருதியே தன் படைப்புகளை உருவாக்குகிறான்.
                  எமக்குத் தொழில் கவிதை
                  இமைப்பொழுதும் சோராதிருத்தல்
என்று பிரகடனப் படுத்திக் கொண்ட, இருபதாம் நூற்றாண்டின் மகாகவிஞன் பாரதி நம் தேசத்தின் விடுதலையை முன் வைத்துப் பாடல்களை இயற்றினான்.
அந்நிய ஏகாதிபத்தியத்தின் பிடியில் சிக்குண்டுக் கிடந்த நம் தேசத்தின் சுதந்திரம் அவனுக்குப் பிரதானமாய் இருந்தது. அதனாலே தான்,
                  ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
                  ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டொமென்று
என்று விடுதலைக்கு முன்னரே குரல் கொடுத்தான்.
அவனின் தாசன் என்று தன்னை பெயர் சூட்டிக்கொண்ட பாவேந்தன் காலத்தில், தமிழ் மொழிக்கான ஆபத்து பிற மொழி ஆதிக்கத்தால் இருந்த காரணத்தால் தமிழ் குறித்தும் அதன் சிறப்பு குறித்தும் பெரிதும் பாடியதோடு அப்போதைய சமூகச் சூழலைக் கருத்தில் கொண்டு சாதிமத எதிர்ப்பு, மூடநம்பிக்கைக்கு எதிரான நிலைப்பாடென தன் படைப்புகளை உருவாக்கினான். எனவே சமூகச்சூழலும் நாட்டின் தேவையும் மக்களின் அவசியப்பாடாக எது தேவையோ அதுவே உயர்ந்த படைப்பாளிகளின் பாடு பொருளாகிறது என்பது திண்ணம்.

இன்குலாப் என்றால் புரட்சி என்று பொருள். புரட்சிகரமான சிந்தனைத் தெளிவோடு தன் படைப்பியக்கத்தைத் தொடங்கிய சமயம், சாகுல்அமீத் என்ற இயற்பெயரை இன்குலாப் என்னும் புனைப் பெயராக்கி எழுதத் தொடங்கினார். இளவயதிலேயே தமிழ் மொழியின் பால் மிகுந்த ஈடுபாடு கொண்டவராகவும் கவிதை எழுதும் ஆற்றல் பெற்றவராகவும் இன்குலாப் திகழ்ந்தார். புதுக்கல்லூரி பேராசிரியராக இருந்த சாகுல்அமீது, கவிஞர் இன்குலாப் ஆகி சமூகத்தின் காயங்களை கனல் கவிதைகளாய் முன்வைத்து இளம் தலை முறையை ஈர்த்தார். கவிதையைக் கை வாளாகப் பயன்படுத்தும் கலகக்காரர் என்பதை விட, இருக்கும் நிலையை மாற்ற எண்ணுகிற புரட்சிக்காரர் என்று சொல்லும் வகையில் அவரது கவிதைகள் படைக்கப்பட்டுள்ளன எனலாம். மனிதநேயமும் சமூகக் கொடுமை கண்டு அஞ்சாத நெஞ்சுரமும் அவரின் அடிப்படைக் குணங்களாக இருந்ததால் அவரின் படைப்புகளில் அவற்றின் தன்மையே மேலோங்கி இருப்பதைக்காணலாம்.
பொதுவுடைமை என்பது எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும். ஆண்டான் - அடிமைச் சிந்தனை மாறவேண்டும். ஏழை - பணக்காரன் நிலை மாற்றம் பெறவேண்டும். ஏழை என்றும் பணக்காரன் என்றும் பாகுபாடு இருக்கக் கூடாது என்பதை,
ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர்
உதையப்பர் ஆகிவிட்டால் ஓர்நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
ஒப்பப்பர் ஆகிவிடுவார் உணரப்பா நீ
என்ற பாடலின் மூலம் ஒத்த நிலை ஏற்பட வேண்டும் என்று பாவேந்தர் கூறுகின்றார்.
அந்த மனப்பாங்கோடுதான்,
            தனியொருவனுக்கு உணவில்லையெனில்
            ஜகத்தினை அழித்திடுவோம்
என்று பாரதியும் குரல் கொடுக்கிறான்.

நம் தேசம் விடுதலை பெற்றதற்குப் பின் பல்வேறு துறைகளிலும் முன்னேற்றம் காணத் தொடங்கியது என்பது உண்மை தான். ஆனால் அந்த முன்னேற்றம் கடைக்கோடி மனிதனுக்கும் சென்றடைந்ததா எனில் இல்லையென்பதே வேதனையான பதிலாக மிஞ்சுகிறது.
இன்குலாப் எழுதியமுதல் கவிதைத்தொகுதி, கார்க்கி வெளியீடாக 1972 ஆம் ஆண்டு, ‘இன்குலாப் கவிதைகள்’, என்னும் பெயரில் வெளியானது. அவரின் முதல் தொகுப்பில் வர்க்கப்போராட்டம் குறித்த மிக முக்கியமான கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன. அந்தத்தொகுப்பிற்கு இளவேனில் எழுதிய முன்னுரையில்,
“உலக மக்களின்  விடுதலைக்காகப் பிரச்சாரம் செய்வது எங்கள் உரிமையும் கடமையுமாகும். இந்தப்பிரச்சாரத்தை செய்யும் படி நாங்கள் நிர்பந்திக்கப்படுகிறோம் என்பது உண்மைதான். எங்களை நிர்பந்திக்கிறவர்கள் எங்கள் தோழர்களல்லர்; எங்கள் எதிரிகள்.
ஆளும் வர்க்கங்களின் மற்றொரு ஆயுதம் கலை இலக்கியம் என்பதைக் கண்டு கொண்டோம். வெகு ஜன விரோதிகளே! உங்களை அறியாமலேயே நீங்கள் தூக்கிய அதே ஆயுதங்களை எங்களைத் தூக்கும்படி நிர்பந்தித்து விட்டீர்கள்.,பாட்டாளி வர்க்கம் ஆயுதம் தூக்க ஆரம்பித்துவிட்டால், தனது கடைசி எதிரியையும் வீழ்த்தும் வரை அது தன் ஆயுதங்களைக் கீழே போடாது”, என்கிறார். இந்த முன்னுரை வரிகளின் மூலமாக இன்குலாப் எத்தகைய ஆவேசக் கவிதைகளை எழுதியிருப்பார் என்பதை உணர முடியும்.
இத்தொகுப்பின் முன்னுரைக்கு இன்குலாப் அறைகூவல் என்று தலைப்பிட்டிருக்கிறார். அதில்,

கிழக்கிருந்து மேற்குவரைக்கும்
கோடி கோடி விடியல்கள் வளர்க்க
சூரிய குலங்களைத் தாங்கும் தோள்களுக்கு
பட்டொளிவீசும் சிவப்புப் பதாகைகளுக்கு
தாய்மைப் பிரபஞ்சத்தின் கருவறைச் சுவர்களில்
நீங்கள் உயிர்த்த நெருப்பு மூச்சுகளை
இந்தப் புல்லாங்குழலில் இன்று ஊதிப்பார்க்கிறேன்
என்று இலக்கியப் புல்லாங்குழலில் நெருப்பு மூச்சுகளை ஊதிப் பார்ப்பதாக அறைகூவல் விடுகிறார்.
’கண்மணி ராஜம்’, என்னும் முதல் கவிதை, அவர் பணியாற்றிய புதுக்கல்லூரி இருக்கும் பீட்டர் சாலை பற்றியது. பீட்டர் சாலையை அறிமுகப்படுத்தும் விதத்தைப் பாருங்கள்.
            பீட்டர் சாலை…பெரிய சாலை
இங்கே
வானைச் சுமக்கிற மாளிகை உண்டு
என்று மாளிகை குறித்து அடையாளப் படுத்தும் பொழுது, வானைச் சுமக்கும் மாளிகை என்றவுடன் மேலதிகமாக அது குறித்துப் பேச மனமின்றி கவிஞனின் எண்ணம் முழுதும் அதைக் கட்டி எழுப்பிய, ஆனால் இன்னும்கூட மண்ணில் கிடக்கிற ஏழையின் பால் கவனம் குவிக்கிறது. அதனாலே தான் இன்குலாப் மானுடம் பாடும் பொதுவுடைமைக்  கவிஞராக அடையாளமாகிறார்.
            மாளிகை நிமிர மண்ணைச் சுமக்கும்
            கூலிகள் அந்தச் சாலையின் ஓரத்தில்
            கோணிப்பை அடைப்புக் குடிசைக்குள்
            குடும்பம் நடத்தும் கோலங்கள் உண்டு
என மாளிகையின் அஸ்திவாரங்களாக மண்ணில் கிடக்கும் ஏழைகளின் இன்னலைப்பாடுகிறார்.

            பாவேந்தர் பசுமையான சோலையைப் பார்க்கும் பொழுது அதனை உருவாக்கப் பாடுபட்ட தொழிலாளர்களின் நிலையை, துயரத்தை எண்ணிப் பார்க்கின்றார் என்பதை,
சித்திரச் சோலைகளே உமைநன்கு
திருத்த இப்பாரினிலே - முன்னர்
எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ
உங்கள் வேரினிலே 
பாடலால் அறியலாம். இவர் மாளிகையைப் பார்த்தவுடன் அதை உருவாக்கிய தொழிலாளர்களின் நினைவைக் கூட்டுகிறார். தொழிலாளர் மேல் இருக்கும் அளப்பரிய ஆதரவு நிலைப்பாட்டால் ராஜ ராஜ சோழனின் ஆதிக்க மனோபாவத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறார். அப்படிப்பட்ட ஆதிக்க மனம் கொண்ட மன்னனை,
            ’காலனி ஆதிக்கத் தொழுநோய்த் தேமலை
            பூமியின் முகத்தில் எழுதிய புல்லனுக்கு
            மக்களாட்சியா மகத்துவம் சேர்க்கும்?
என்று , தமிழர் வரலாற்றில் முக்கிய மன்னனாகச் சொல்லப்படும் ராஜ ராஜனின் செயல்பாட்டை தொழிலாளர், ஏழை மக்கள் இவர்களிடம் வைத்திருக்கும் நேயத்தின் வெளிப்பாடாக, மீள்பார்வைக்கு உட்படுத்துவதோடு கடுமையான விமர்சனக் கணையையும் தொடுக்கிறார்.

இன்குலாப் பொதுவுடைமைக் கொள்கையின் தீவிரப் பற்றாளர் என்பதால் பாட்டாளி வர்க்கத்தின் கவிஞர் என்று போற்றத்தக்க விதத்தில் தன் படைப்புகளை வழங்குகிறார்.
பொதுவுடைமைச் சிந்தனையிலும் கூட அவரின் தீவிரமான கருத்தியலைக் கீழ்க்காணும் கூற்றால் அறிய முடியும்.
“இந்தியாவைப் பற்றிய ‘சி.பி.ஐ.சிபி.எம் எடுத்த மதிப்பீடுகள் என் சிந்தனைக்கு மாறுபட்டதாக இருந்தன. நிலவுடைமை, சுரண்டல் பற்றிய அவர்கள் கணிப்பு எனக்கு ஏற்புடையதாக இல்லை. ரஷ்யா என்றோ புரட்சிகர நிலைப்பாட்டை இழந்து விட்டது என்று நான் நினைத்தேன். அது ஒரு சோஷலிஷ அரசு இல்லை இன்கிற நக்சல் பாரிகளின் நிலைப்பாடு என்னை சிந்திக்க வைத்தது,”என்கிறார்.
இன்குலாப் கவிதைகளில், தொழிலாளர் போராட்டம், விவசாயிகள் போராட்டம், பாட்டாளி வர்க்கத்தின் மீட்சி என பல்வேறு கூறுகளோடு காணமுடியும்.
முதலாளித்துவ வர்க்கம் உழைக்கும் மக்களைச் சுரண்டி அவர்களின் உயர்வுக்கு ஏற்ற ஊதியம் தராமல் தன்னலப் போக்கில், அரசு அதிகாரத்தின் துணைகொண்டு செயல்படுவதை எதிர்த்து உரக்கக் குரல் கொடுக்கும் கவிதைகள் அவரின் கவிதைகள்.
1970 ஆம் ஆண்டு சிம்சன் ஆலைத் தொழிலாளர்களின் போராட்டம் தீவிரமாக நடைபெற்றது. அப்போராட்டத்தை அரசும் காவல்துறையும் அடக்குமுறையால் கட்டுப்படுத்த முனைந்தனர். தொழிலாளர்கள் தாக்கப்பட்டனர்.
            வயல்களில் நெளியும் மரகத ரேகைகள்
            பூமியின் உதட்டுப் புன்னகை அல்லவா?
நகரில் இயங்கும் நாகரிக வார்ப்புகளை
இயக்கும் கைகள் இளைத்த கைகளா?
மாட மாளிகைகளை மண்ணில் எழுப்பியோர்
திருவோட்டுப் பண்டாரங்களாய்த் தெருக்களில் துயில்வதா?
என்னும் கேள்விகளை ஆவேசமாய் எழுப்பினார்.
            வறுமை முட்கள் கீறிய வடுக்களே
            பாடு பட்டதற்குக் கிடைத்த பரிசுப் பதக்கங்கள்
            ஏகாதிபத்தியம் இந்திய நாட்டின்
            வேர்வைக் கோஹினூர் வைரத்தைத் திருடித்
            தனது
            மகாராணியின் மகுடத்தில் பதித்தது
என்று பாடுபட்டதற்கான பலனாக பாட்டாளி மக்கள் பரிசாகப் பெறுவது வறுமை முட்கள் கீறி உடலெங்கும் ரணமாகி அதனால் உண்டாகும் வடுக்கள் எனப் பதிவு செய்கிறார்.
இந்திய தேசம் விடுதலையடைந்து இருபத்தைந்து ஆண்டுகள் ஆகியிருந்த நேரமது. ஆனால் நாடு கண்ட முன்னேற்றம் என்ன? மொத்தமும் சுரண்டும் வர்க்கத்தின் கைகளில் சிறைபட்டுப் போன சூழல். வெள்ளையரிடமிருந்து சுதந்திரம் பெற்றோமே இவர்களிடம் சிக்கிக் கொண்டதை நம்மால் பெற முடியவில்லையே என்னும் ஆதங்கம் வார்த்தைகளாகி
            வெள்ளிவிழா மண்டபத்தில்
            விடுதலைத் தேவதையைப்
பாண்டவர்களும்
துரியோதனாதிபதிகளும்
பங்கு போடும் வேளையில்
            வெளியே…வீதியிலே
            புலம்பல் முடிகிறது
            மூச்சு புயலாகிறது
பாலாறு பாயுமெனப் பார்த்திருந்த வீதிகளில் அக்கினி ஓடைகள் அசைந்து நடக்கும் அவலத்தை ,’வெள்ளிவிழா மண்டபத்தின் வெளியே… வீதியிலே…’ என்னும் கவிதையில் வெளிப்படுவதைக் காணமுடிகிறது.
            வேர்வையின் மக்களே விழித்தெழுவீர்
            வேள்விகள் தொடங்கட்டும்
என்று உழைக்கும் மக்களை எழுச்சியூட்டி போராட்டத்துக்கான அழைப்பினை முன்வைக்கிறார்.
வர்க்கப் புரட்சியும் போரட்டமுன்னெடுப்புமே வாழ்வின் அடிமட்டத்தில் பொருளாதார தாழ்நிலையில் இருப்போர் விடியலைக் காணுவதற்கான ஒரே வழி என்பதனைத் தன் கவிதைகளில் தெளிவாக்குகிறார்.
            பெரிய மாளிகையில்-வளர்த்த
            பெண்டு பிள்ளைகளோ-எங்கள்
            குருதித் துளிகளினால்-வாசற்
            கோலம் போடுகிறார்
            காலப் பந்தலின் மேல்-உங்கள்
            கண்ணீர் அரும்புவதேன்?
            உங்கள் விழிச்சிவப்பில்-கண்ட
            உதயக் கனவுகளை
            எங்கள் விழி சிவந்து-நனவில்
            எழுதப் போகிறது
என்று உழைக்கும் மக்களின் துயர்மிகு கண்ணீருக்கு இருக்கும் வலிமை எத்தகைய ஆதிக்க வர்க்கத்தின் மாளிகைகளையும் சரிந்து விழச்செய்திடும் சக்தி வாய்ந்தது என்பதை உறுதியாக உரைக்கிறார்.
நித்தமும் வாழ்க்கையை நிலையில்லாத தன்மையுடன் கடலில் சென்று மீன் பிடித்துக் கரைக்கு மீண்டால் தான் நிச்சயம் என்னும் மீனவர்களின் வாழ்விலும் புரட்சி நிகழும் என்பதனை,’கானல் வரிகள்’ என்னும் கவிதையில் கதைப்போக்கிலே,
            கப்பராணி பெத்தெடுத்த
            சின்னராணி-நான்
            கட்ட ஒரு கந்தையில்லா
            சின்ன ராணி
            கட்ட ஒரு பட்டு தாரேன்
            சின்னராணி-என்னைக்
            கட்டிக்கொள்ளச் சம்மதமா
            சொல்லுராணி
            கட்ட ஒரு பட்டமும் வேண்டாம்
            சின்னராஜா-அப்பன்
            காசில் வந்த சீட்டி அட்டை
            போதும் ராஜா
என்று தன்மானத்தோடு வாழ்வதே உழக்கும் மக்களின் குணம்;பணத்தசை கொண்டு அலைபவர்கள் அல்லர்; கிடைத்ததைக் கொண்டு நிறைவுடன் வாழும் குணநலனையும் சுட்டுகிறது.
நம்நாடு விவசாய நாடு. நம் நாட்டின் முக்கியமான பொருளாதாரத்தின் அடிப்படையாக இருக்கும் தொழில் விவசாயம்.
            உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
            தொழுதுண்டு பின் செல்பவர்
என்பது வள்ளுவன் வாக்கு.
 நம்நாட்டில் கணிசமான மக்கள் விவசாயத் தொழிலாளர்களே. ஆனால்,அவர்தம் இன்னல் சொல்லி மாளாதது. விவசாயத் தொழிலாளிகளின் வாழ்க்கைத்தரம் உயர்ந்திருக்கிறதாவெனில்,இல்லையென்ற பதிலே கிட்டும். பண்ணையார்களிடம் கூலிகளாய் இன்னும் சொல்லப்போனால் அடிமைகளாய் வாழும் அவலம் இருந்தது. அந்த அவல நிலையைத் தன் படைப்புகள் மூலமாகப் பாடியவர் இன்குலாப்.
அதற்கு மாற்றாக முற்போக்குச் சிந்தனையை முன்வைக்கிறார். கூட்டுப் பண்ணை முறையே அதற்கு சரியான தீர்வு.
            கூட்டுப் பண்ணைக்குப் பாடு படுவோம்
            அனைவரும் வாருங்கள்… அனைவரும் வாருங்கள்
            ஆண்டான் அடிமை என்ற பழைய நச்சுமரத்தை
            வேரோடு பிடுங்கி வீச வாருங்கள்
என்று உழைக்கும் விவசாயத் தோழர்களுக்கு அறைகூவல் விடுக்கிறார்.

பாமர மக்களின் மீது ஆக்ரமிப்பு அதிகாரத்தின் மூர்க்கத்தைக் கண்டு அஞ்சாமல் எழுச்சிக்கவிதைகள் படைப்பவர் இன்குலாப். பொறுத்தது போதும் இனி பொறுப்பதற்கில்லை என்னும் தன்மையோடு,
            கன்னத்தில் அறையும்
            எந்தக்கைக்கும்
            மறுகன்னத்தில் அறையும்
            வாய்ப்பே இல்லாமல்
            அந்தக்கணமே
            அறுத்தறியப்படும்

            வெட்டப்படுவது இனிமேல்
            நகங்களல்ல-
            விரல்கள்
            உனது மகுடங்களை
            மூழ்கடிப்பதற்கே
            வேர்வைத்துளிகள்
            வெள்ளமாய் இணைகின்றன
என்கிற கோபாவேசக் குரலுக்குச் சொந்தக்காரரான கவிஞர் இன்குலாப் மானுடம் பாடும் பொதுவடைமைக் கவிஞராகத் திகழ்கிறார் என்பதில் ஐயமில்லை.

Comments

  1. As claimed by Stanford Medical, It's in fact the one and ONLY reason women in this country get to live 10 years longer and weigh on average 19 kilos lighter than us.

    (And really, it is not related to genetics or some hard exercise and absolutely EVERYTHING to "how" they eat.)

    BTW, I said "HOW", not "WHAT"...

    TAP this link to reveal if this little test can help you release your real weight loss potential

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஏற்புரை--தமிழ்மணவாளன்

தை முதல்நாளே தமிழர் புத்தாண்டு