ஏற்புரை--தமிழ்மணவாளன்



   




யாவர்க்குமானவை உலகில் இருக்கின்றன அல்லது உலகில் இருப்பவை யாவர்க்குமானவை
அறிதலே முதன்மை.
அறியக் கொடுப்பது கடமை.
காரணங்கள் பலவாய் இருக்கலாம்.
சாதி,மதம், இனம், பொருளாதாரம்,சமூகம், மொழி, நாடு, நிலப்பகுதி,பால்என.
காரணங்கள் பலவாய் இருக்கலாம். அடிமைப்படுத்தும் காரணிகள் எதுவாயினும் அது ஒருநோய்க்கூறு.நம்மில் இருந்தாலும் உடைத்து வெளிவரவேண்டும். அதிகாரப்பீடத்தில் கெட்டிதட்டிப்போயிருக்குமெனில் தகர்க்கவேண்டும். சமத்துவம் என்பதன் வெளியை உருவாக்கவேண்டும்.

மேற்சொன்ன காரணிகளில் பலகவனம் பெற்று பலராலும் உரக்கக்குரல் கொடுக்கப்பட்டுவருகின்றன. ஆனால் அவற்றுள், மாறு பாலினத்தவர்க்கான உரிமைகள் உரிய அளவில் இன்னமும் கூடபேசப்படவில்லை என்பதே உண்மை. அதற்குக்காரணம் அவர்களின் பிரச்சனை குறித்த உண்மைத்தன்மை பொதுவெளியில் உரையாடலுக்கு பரவலாய் உட்படவில்லை.

மாறு பாலினத்தவர் நலன் கோரி தேசிய சட்ட ஆணைக்குழு தாக்கல் செய்த பேராணை விண்ணப்பத்தின் மீது உச்சநீதிமன்றம் 15-04-2014 அன்று வழங்கிய மேன்மைமிகு தீர்ப்புரையின் தமிழ்ப்பிரதி இது.

”எட்டுத்திக்கும் சென்று கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” ,என்றான் பாரதி. இது ஒரு செல்வம்.
செல்வம் நமக்கானது என்றாலும் நம்மிடமே இருந்தாலும் நமக்கானது எனத்தெரியாதவரை யாதொரு பயனுமில்லை தானே.
ஸ்தூலப்பொருள்களுக்கே அவ்விதமெனில் கருத்துச்சாரத்தினைப் பருக மொழி எத்தனை முக்கியமானது.
ஆகவே அத்தீர்ப்பினைத் தமிழில் கொடுப்பது அவசியமானது எனக்கருதுகிறேன்.

முப்பது ஆண்டுகளாய் கவிதை, கவிதை குறித்த கட்டுரை ,கவிதை குறித்த உரையாடல் என இலக்கியத்தில் இயங்குபவன் நான். .அதன் வாயிலாக பல மகிழ்தருணங்கள் வாய்க்கப் பெற்றவன். ஆனால் இந்தத் தமிழாக்கப்பிரதியை உருவாக்கியிருக்கும் இக்கணம் எல்லாவற்றையும் வி  சற்றுக்கூடுதல் மகிழ்ச்சியைத் தருகிறது.
கவிதை சார்ந்த மொழிசார்ந்த இலக்கியம்சார்ந்த எழுத்துகளுக்கு அப்பால் பயன் சார்ந்த பணியாகப் பார்க்கிறேன் .அது எனக்குக் கூடுதல் சந்தோஷத்தைத் தருகிறது.

இது ஒரு பேராணை விண்ணப்பத்தின் மீது வழங்கப்பட்ட தீர்ப்பு மட்டுமல்ல. ஒரு சர்ச்சையை மட்டும் பிரச்சனையை மட்டும் முன்வைத்துப்பேசும் தீர்வு அல்ல. மாறு பாலினத்தவர்கள் அறிந்து கொள்ளவேண்டிய ஆவணம். அவர்கள் மட்டுமன்றி அனைவரும் அறிந்து கொள்ளவேண்டிய கருத்துகள்.

இத்தீர்ப்பு, அவர்களின் சமூகநிலை குறித்து தீர்க்க ஆராய்கிறது .
பரிணாமப் போக்கில்,கடந்தகாலத்தில் அவர்களுக்கு இருந்த இடம், முக்கியத்துவம் குறித்து நினைவூட்டுகிறது.

இராமாயண காவியத்தில், இராமர் நாடு கடத்தப்பட்டு பதினான்கு ஆண்டுகள் காட்டில் வாழச்செல்லும் போது அவரோடு வந்தவர்களைத் திரும்பிப்பார்த்து எல்லா ஆண்களும் பெண்களும் நகருக்குத் திரும்பிடச் சொன்னார். ஹிஜ்ராக்கள் மட்டும் அவரின் இந்த வேண்டுகோளுக்குக் கட்டுப்பட வேண்டியதில்லையென எண்ணி அவருடன் தங்கத் தீர்மானித்தனர். அவர்களின் பக்தியால் ஈர்க்கப்பட்டு, இராமர், பிறந்தநாள், திருமணம், தொடக்கவிழா போன்ற நல்ல தருணங்களில் ஆசீர்வதிக்கும் சக்தியை அவர்களுக்கு வழங்கினார். மேடைஅமைத்து ஹிஜ்ராக்கள் பாடி, ஆடி ஆசி வழங்குவது ’பாதை ’என்னும் வழக்கமாய் நம்பப்படுகிறது.

மகாபாரதத்தில் அர்ச்சுனன் மற்றும் நாககன்யாவின் மகனான அரவாண் குருஷேத்திரப்போரில் பாண்டவர்கள் வெல்வதற்காகத் தன்னை தியாகம் செய்ய முன்வந்தார். அப்போது அவர் முன்வைத்த ஒரே நிபந்தனை தனது கடைசி இரவில் தாம்பத்ய உறவு கொள்ளவேண்டும் என்பதேயாம். கொல்லப்படப்போகும் ஒருவரை மணம்புரிய ஒருபெண்ணும் முன்வராததால் கிருஷ்ணன் மோகினி என்னும் அழகான பெண் உருவம் எடுத்துத்திருமணம் செய்துகொண்டார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹிஜ்ராக்கள் அரவாணைத் தம் மூதாதையராகக் கருதி தம்மை அரவாணிகள் என அழைத்துக்கொள்கின்றனர்.

ஜெயின் புத்தகங்களில் உள்ள மாறு பாலினத்தவர் பற்றிய விரிவான குறிப்பில் உளவியல் பாலியல் கருத்துக் கூறப்படுகிறது. இஸ்லாமிய உலகின் அரசவைகளில் குறிப்பாக ஓட்டமான் பேரரசு மற்றும் மத்தியகால இந்தியாவின் மொகலாய ஆட்சியிலும் ஹிஜ்ராக்கள் முக்கியத்துவம் பெற்றிருந்தார்கள் .அவை குறித்த விரிவான ஆய்வு காயத்ரி ரெட்டியின்,With Respect to Sex : Negotiating Hijra identity in South India-Yoda Press(2006)  நூலில்காணக்கிடைக்கிறது.




”சக்கரத்திற்குப் பிறகு மனிதனின் மீப்பெரிய திருப்புமுனை கண்டுபிடிப்பு காகிதம் .அக்காகிதத்தை கண்டறிந்த சீனதேசத்து "சாய் லுன் "என்பவர் ஒருதிருநங்கை என்பது எத்தனைபேருக்குத் தெரியும்.?? தமிழ் நாகரிகத்தோடு தொடர்பு கொண்ட தொன்மைமிகுநாகரிகமான எகிப்து தேசத்தின் கிளியோபாட்ரா (ஏழாம் கிளியோபாட்ரா) வின் புகழ் என்பதுஅனைவரும் அறிந்ததே... அழகைக்காட்டிலும் அறிவால் ஒரு பெண்ணாக ,வரலாற்றில் தன்னை பதித்துக்கொண்ட கிளியோபாட்ராவை வளர்த்தெடுத்தவள் ஒரு திருநங்கை.அரண்மனை அந்தபுரம் முதல் அரசாங்க உயர்பதவிகள் வரை வீரம், அறிவு நுட்பம், கலைகளோடு பண்பாட்டைக்காக்கும் தவிர்க்க முடியாத சக்திகளாக இருந்தமாற்றுபாலினத்தோரின் நிலை இன்று தலைகீழ்.”,என மேலதிக சான்றுகளைத் தன் முன்னுரையில் சொல்கிறார் ஷீத்தல்.

அவர்களின் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் விதம் எதிர்கொள்ள வேண்டியவிதம் குறித்துப் பேசுகிறது.
அவர்களின் அடிப்படை உரிமைபற்றிப் பேசுகிறது.
உரிமை என்பது யாரும் யாருக்கும் வழங்குவதல்ல. வாழவிடுவது.
மாறு பாலினத்தவரின் உடல்சார் மனம்சார் வெளிகளை அறிவியல்பூர்வமாய் அணுகுகிறது.

மாண்பமை நீதியரசர்கள் மதிப்புமிகு கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்களும் மதிப்புமிகு எ.கே.சிக்ரி அவர்களும் இந்தத்தீர்ப்பை வழங்கும்பொழுது, அவர்களின் உள்ளார்ந்த உணர்வை அறியமுடிகிறது. மாறு பாலினத்தவர் மீது அவர்கள் கொண்டிருக்கும் அக்கறை துல்லியமாய் வெளிப்படுகிறது .மாண்பமை நீதியரசர்களுக்கு சமகாலச் சமூகத்தின் அங்கத்தினன் என்னும் விதத்தில் நெஞ்சின் அருகில் கைகூப்பி நேர்மையான வணக்கத்தையும் நன்றியையும் சமர்ப்பிக்கிறேன்.

”நீளும்கைகள்”, என்னும் தலைப்பில் இந்நூலினை வெளியிடக் காரணம் உண்டு.
இந்தத் தீர்ப்பு,
விளிம்பை நடுவணாக்கும் வெளிச்சம்.
மாறு பாலினசமூகத்தினரோடு கைகுலுக்க நீளும் கைகள்.
அவர்களை அரவணைக்க நீளும்கைகள்
அவர்களின் பிரச்சனைகளுக்காக போராடுவதற்கு நீளும்கைகள்
வெற்றியின் போதுபாராட்ட, முதுகில் தட்டிக்கொடுக்க நீளும் கைகள்.

”அகல்விளக்கிற்கு அடியில் நிழலாய் இருள் இருக்கலாம் ஆனால் , ஆதவனிடத்தே அவ்வாறில்லையன்றோ?அதுபோல், அன்று கிடைக்கப்பெற்ற சட்டத்தை  நம்  மாற்றுபாலினத்தோர் உணரும்  வகையில்  தாய்மொழியாம்  தமிழில்  மொழிபெயர்த்துத் தந்துள்ளது குறித்து நன்றி.  மழையின் ஒவ்வொருதுளியும் வளம் தருவதுபோல் இந்நூலின் ஒவ்வொரு வரியும்   ஒவ்வொரு பக்கங்களும் நம் வாழ்வைவளர்ச்சியைபங்கேற்பை தீர்மானிக்கக் கூடியவைவெற்று காகிதம் எனக் கடந்து செல்லாமல் உணர்ந்து வாசிப்போம்.,” என்று தனது முன்னுரையில் அன்புக்குரிய ஷீத்தல் அவர்கள் குறிப்பிட்டுருப்பது நிறைவைத்தருகிறது.

மாறு பாலினத்தவர் பற்றிய புனைவிலக்கியச் செயல்பாட்டில் சிலரைச் சந்தித்து உரையாடினேன். மேலதிகமான சந்திப்பின் சாத்தியம் ,சூழல்பற்றிப் பேசிக்கொண்டிருந்த போது  இத்தீர்ப்பினைத் தமிழில் ஆவணப்படுத்த வேண்டும் என்னும் எண்ணத்தை வெளிப்படுத்தி நூலாகும் வரை உற்சாகமாய் உடன்பயணிக்கும் அன்புமகள் சமூகஆர்வலர் பா.ஹேமாவதிக்கும் என் இளவல் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சீனுவுக்கும் மாறாத என் அன்பும் நன்றியும்.

நீதி கேட்ட தருணத்தின் சூடு குறையாமல் நின்று கொண்டிருக்கும் கண்ணகி சிலையின் கீழ் அமர்ந்தபடி பிரதியை வாசித்து, கருத்துகள் வழங்கிய வழக்கறிஞர் மு.ஆனந்தன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

பிரதியை வாசித்து மேலான ஆலோசனைகளை மட்டுமல்லாது அணிந்துரையும் தந்து சிறப்பித்திருக்கும் மூத்த பத்திரிகையாளர்   அ. குமரேசன் அவர்களுக்கு என் நெஞ்சின் நன்றி.

தம் சமூகத்திற்கு இந்தத் தமிழாக்கப்பிரதியால் விளையும் பயனின் தன்மையை முன்வைத்து கருத்துரை வழங்கியுள்ள தோழர் ஷீத்தல் நாயக் அவர்களுக்கென் அன்பும் நன்றியும்.

நூலுக்கான முகப்பு ஓவியத்தினை வடிவமைத்துக் கொடுத்திருக்கும் ஓவியர் மணிவண்ணன் அவர்களுக்கும் சிறப்புற நூலினை வடிவமைக்க உதவிய தோழி ஈழவாணிக்கும் நன்றி.

என் பணியில் எப்போதும் துணைநிற்கும் என் மனைவி லதாராணி பிள்ளைகள் விமலாதித்தன், தமிழாதித்யன் ஆகியோருக்கும் நன்றி.

எளிமைப்படுத்த எண்ணி அழுத்தம் மாறிவிடக்கூடாதென,
சட்டம் சார்ந்த பிரதி என்பதால் இயன்றவரை இணைச்சொற்களை சரியாகப் பயன்படுத்த முயன்றிருக்கிறேன். எனினும் சட்டபூர்வமான அணுகுதலுக்கும் மேற்கோள்களுக்கும் மாண்பமை நீதியரசர்களின் மூலப்பிரதியே தகுதியுடையது என்பது என் கருத்தாகும்.

என்னோடு எப்போதும் துணைவரும் இலக்கியத் தோழமைகள் அனைவருக்கும் நன்றி.

Comments

Popular posts from this blog

இன்குலாப் என்னும் பொதுவுடைமைக் கவிஞன்

தை முதல்நாளே தமிழர் புத்தாண்டு