அவளுக்குப் பெயர் தான் அம்மா

வானிலவின் குளிர் முகத்தின் வனப்பைக் காட்டி
      வாஞ்சையுடன் குதூகலமாய் உணவை ஊட்டித்
தானிருக்கும் குருதியினைப் பாலாய்த் தந்து
      தாயன்புச் சுவைதனையும் சேர்த்துத் தந்து
நானிலத்தில் நல்லவர்கள் மெச்சும் வண்ணம்
     நம்பிள்ளை வரவேண்டும் எண்ணத் தோடு
தேனினிய கனவுகளை நெஞ்சில் தேக்கி
     தேகத்தை நமக்காகத் தேய்க்கும் உள்ளம்.


கன்றுதனை ஈன்றவுடன் நெஞ்சின் அன்புக்
     கட்டளையால் நக்குகிற பசுவை போல
நின்றுலகில் நிலைபெறவே பெற்ற பிள்ளை
      நீர்கொண்ட பயிராக வளர வேண்டி
அன்புமழை பொழிகின்றாள் ஆசை  யாக
      அழுகின்றாள் நெஞ்சத்தில் ஓசையின்றி
என்றுமவள்(ன்)  இனிதாக வாழ்தல் வேண்டும்
      எண்ணங்கள் சுமையாலே ஏங்கி நிற்பாள்.


அரங்கத்தில்  ஆடவைத்த பெருமை யெல்லாம்
      அவனிதனில்  நிலையற்ற நெஞ்சின் அன்புச்
சுரங்கத்தின் முதலாளி; தூய தாய்மைச்
      சொந்தத்தின் உணர்வுதனை ஊட்டி, தன்னின்
கரங்களிலே குழந்தையினைக் கைதி யாக்கி
      கால்தனையே கண்களிலே ஒற்றிக் கொள்ளும்
திறங்கொண்ட தியாகத்தின் சொந்தக் காரி
      திருநாட்டில் தாயின்றி யாரு மில்லை.


சிறுமழலைச் சொல்லுக்கும் விளக்கம் கூறிச்
      சிங்காரப் பாதத்தில் முத்தம் தந்து
பெருவிரலின் நகந்தனையே தூக்கிப் பார்த்து
      பெரிதாக அராய்ச்சி செய்யும் உள்ளம்.
ஒருகுறையும் குழந்தைக்கு ஏற்பட் டாலே
      உதிரத்தைக் கண்ணீராய்க் கொட்டித் தீர்க்கும்
மறுபிறவி எடுத்திருக்கும் தாயின் நெஞ்சம்
     மாறாது இறுதிவரை அஃதே மிஞ்சும்.


                   ************** )& ( ***************

பின் குறிப்பு

      தொடக்கத்தில் நான் மரபுக்கவிதைகள் எழுதிய போது ,1980 ஆம் ஆண்டு கல்லூரியில் படித்த சமயம் எழுதிய கவிதை.
    இந்தக்கவிதையை வாசித்து விட்டு, வெகுநாள் தன் தாயுடன் இருந்த பகைமை மறந்து மீண்டும் இணைந்ததாக எனக்கு வந்த கடிதம் தான் இதுநாள் வரை என் கவிதைகளுக்காக நான் பெற்ற பரிசுகளிலேயே சிறந்த பரிசாகக் கருதிப் பாதுகாக்கிறேன்.
     கவிதை குறித்த கருத்தியலில் பலகட்டங்களைக் கடந்திருக்கும்  இத்தருணத்தில், 30 ஆண்டுகளுக்குப் பின்னரும் இக்கவிதையை வாசிக்கும் போது எழும் நெகிழ்வின் நினைவை , மறைந்த என் தாய்க்கு மட்டுமன்றி--,
தன்னையிழந்தாலும் கூட தனது  பிள்ளையின் உயிர்ப்பை உறுதி செய்யத் தவிக்கும் உலகத்தாய்மைக்குச் சமர்ப்பிக்கிறேன்.                                                                                                       (அம்மாவின் நினைவாக....)
                                                                                                          தமிழ்மணவாளன்

Comments

  1. கவிதை குறித்து உரையாட ஆவலாக இருக்கிறேன். குறை அறிவு எனது. உங்களைப் போன்ற ஆற்றல் சார்ந்த நண்பர்களுடன் உரையாடுவதன் மூலம் இன்னும் கற்றுக்கொள்ள விருமபுகிறேன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நிதர்சனத்தின் விரல் பிடிக்கும் வரிகள்

கவிநுகர் பொழுது-16

அசரிரீ சொன்ன பொய்