வருகை

உன் வருகை குறித்த எவ்வித ஆட்சேபனையு
மில்லையெனக்கு. எனது
கதவுகள் ஒருபோதும் சாத்திவைக்கப் படுவதில்லை
என்பதையும் அறிவாய் நீ.
உனக்கான சூழல் தான் உனதிவ் வருகையை
சாத்தியப்படுத்துகிறது.
எண்ணங்கள் என்னுள் சிதறிக்
கிடக்கின்றன. ஒன்றையொன்று விஞ்சி
நிகழ் காலத்தின் மீதான
ஆக்ரமிப்பை நிறுத்தவில்லையின்னும்
கழுவியும் கழுவாமலுமாய்
மனச்சுவரில் ஞாபகப் பிரதிகளாய்
ஒட்டப்பட்டிருக்கின்றன.
பக்குவமாய் அவற்றை பரணில் கட்டி போடும்
காலத்தின் உதவிக்காகவே
காத்திருக்கிறேன். அதற்குள்
அகோரமாய் பல் முளைத்த
 உன் முகத்தை நீ பார்த்துவிடக் கூடாதெனும்
சிறு கவலை உண்டெனினும்
இப்போதும் கூட உன் வருகை  குறித்த
எவ்வித ஆட்சேபனையும்
இல்லையெனக்கு.

Comments

Popular posts from this blog

இன்குலாப் என்னும் பொதுவுடைமைக் கவிஞன்

ஏற்புரை--தமிழ்மணவாளன்

தை முதல்நாளே தமிழர் புத்தாண்டு