
தேவியின் மரணம் -------------------------- தேவி…. உன் மரணம் செய்தியாக விழுகிறது செவிகளில் முகநூலில் உன்னை ப்ரொஃபைல் படமாக வைத்துக் கடந்துவிட முயல்கிறேன். அத்தனை எளிதில்லை என அப்புறம் தான் தெரிகிறது பெண் என்னும் பேரழகை உணரத்தொடங்கிய பதின்ம வயதில் பக்கம் இருந்த செந்தூரப் பூவாயிற்றே எண்பதுகளின் டொடக்கத்தில் எப்போதும் உடனிருந்தாய் பாசங்குகள் அற்ற பால்யம் உறைந்த உன் குரல் காற்றின் வெளியில் கலந்து கிடந்தபோது தான் வாலிப சுவாசத்தை வரித்த காலம் இதழ் சுழிப்பும் இமை சிமிட்டலும் அழகின் அர்த்தத்தை பிறிதொன்றாக்கின நடிகையின் ரசிகன் எனச்சொல்வதில் ஒரு பெருமையை ஷோபாவுக்குப் பின் உன்னிடம் பெற்றேன் மயிலு மும்பை போனபின் மறந்து போனதென்னவோ உண்மை தான் அதற்காக மரணத்தால் ஞாபகப்படுத்துவது முறையா? இந்த மரணம் அத்தனை பெரிய கொம்பா ? எல்லாவற்றியையும் அழித்துவிட முடியுமா? ’’ப்ரியா’,’வில் நீ நிற்கும் படமொன்றைப் பென்சில் ஓவியமாய் வரைந்து வைத்திருந்தேன் எண்பதுகளின் ஞாபகங்களோடு எங்கே இருக்கிறதெனத் தேடிக் கொண்டிருக்கிறேன் தேவி. -தமிழ்மணவாளன்...