அடடா! இதுவா பெண்மை?

பளிச்சென மின்னல் ஒன்று
    பட்டதும் பார்த்தேன்; அங்கே
விழித்திரை தன்னில் கன்னி
    வித்தைகள் புரிந்தாள்; அந்த
மொழிக்குநான் விளக்கம் தேடி
    முடியாமல் தவித்த போது
‘களுக்’கெனச் சிரித்துக் கண்ணை
    கால்களை நோக்கிப் போட்டாள்!


படபட வென்றே அந்தப்
    பாய்விழி இரட்டை அம்பை
உடனவள் இமைக ளாலே
    உள்ளுக்குள் மூடிக் காட்டி
நடனங்கள் புரிந்த போது
    நானென்னை இழந்து போனேன்
அடடா!இதுவா பெண்மை?
    அனுபவி புரியும் உண்மை.



மீண்டுமவள் பார்வைக் காக
    மெதுவாகத் தலையைத் தூக்கி
ஆண்டவன் முன்னே பக்தன்
    அமைதியாய் நிற்ப தைப்போல்
வேண்டுதல் வைத்துப் பார்த்தேன்
    வேறேதோ சிந்த னையாய்
தோண்டினாள் விரலால் பூமி
    தொலைத்ததைத் தேடு தல்போல்!


*பல்லவன் வந்தான்; அந்தப்
    பாவையை அள்ளிப் போனான்;
உள்ளத்தைக் கண்ணால் கொத்தி
    ஓடிய அவளை விட்டு
மெல்லநான் நினைவைத் தேடி
    மெதுவாக நென்ச்சைத் தொட்டேன்
துள்ளிடும் த்ரைமீன் போலே
    துடித்தது வேக மாக!
-----------------------------------------------------------
இக்கவிதை எழுதப்பட்ட ஆண்டு  1986
* பல்லவன் - எண்பதுகளில் சென்னையில் இயங்கிய
மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் பெயர்.
-------------------------------------------------------------

Comments

Popular posts from this blog

இன்குலாப் என்னும் பொதுவுடைமைக் கவிஞன்

ஏற்புரை--தமிழ்மணவாளன்

தை முதல்நாளே தமிழர் புத்தாண்டு