என்னை, உன்னை மற்றும் சிலரைப் பற்றிய கவிதை

பெரும்பாலும் பொழுதுகள்
நினைவுகளிலேயே
செலவாகிறது
உன்னைப் பற்றி
என்னைப் பற்றி
மற்றும் சிலரைப் பற்றி .
**            **         **

தேசத்தின் வரைபடமென
தீட்டப்பட்டிருக்கும்
அபிப்ராயச் சித்திரத்தை
அத்தனை எளிதில்
மாற்றுவது சாத்தியமில்லையென
நினைத்திருக்கும் வேளை
பூகோளத்தின் ரேகைகளையே
நகர்த்தும் சுனாமியாய்
பொங்கிப் பிரவகிக்கும்
உன் செயல்பாட்டுப் பேரலை.
**           **              **

அறிதலில் உருவாகும் அகங்காரம்
ஆசானை வம்புக்கிழுக்கச்
சொல்கிறது.
ஆணவம் வெல்வதில்லை நண்பனே
ஆயுதப் பட்டியலில் இல்லாத
அகப்பையும் கொப்பரை மூடியும்
ஆசானின் மனைவிக்கு
ஞாபகம் உள்ள வரைக்கும்.
**                   **           **


ஆயிரம் முறை ஆனபோதிலும்
மீண்டும்
கேட்டுத்தான் தீர வேண்டுமுன்
பிரஸ்தாபத்தை
தவிர்க்கவே வியலாது
சந்திக்கப் போகும்
இன்றைய மாலைப் பொழுதிலும்.
**          **                 **


எத்தனை ஆண்டுகள்
ஆனபோதிலும்
இயலவில்லை
சிந்தாமல் பேனாவில் மை நிரப்ப.
உபாயம் ஒன்றுண்டு
முக்கால் குப்பி நிரம்புகையில்
போதும் போதுமென
மனம் நிரம்பி வழிய
வேண்டும்.
கவனத்தின் அத்தியாவசியம்
மை நிரப்புவதில்
அல்ல
மனம் நிரப்புவதில்.
**          **           **

உணர்வதில்லை ஒன்றைமட்டும் நீ.
உன் வார்த்தைகள்
கேட்கப்படுகின்றன.
ஆயினும் அவை போல்
புரிந்து கொள்ளப் படுகின்றனவாவென.
**          **          **


உன்னைப் பற்றி
நிறையவே எழுதியாகிவிட்டது
என்றாலும்
எழுத்துகள் குதூகலித்து
எப்பொழுதும்
உருவாக்கி கொண்டிருக்கின்றன
உனக்கான வார்த்தைகளை.

Comments

Popular posts from this blog

குப்பை பற்றி ஒரு கவிதை

அசரிரீ சொன்ன பொய்

மரத்தின் நிழல்’