பூங்காளம்மன் சரிதம்

தார்ச்சாலை விலகி யோடும்
வெண்கற்கள் விரவிக் கிடக்குமந்த
மீனவேலி சிறுபாதை
கடந்தேகும் போதில்
மேற்புறத்தே வீற்றிருக்கிறாள்
பூங்காளம்மன்.

கோபுரமில்லை, கலசங்களில்லை,
சிற்பங்களில்லை, சித்திரமில்லை,
மணடபமில்லை.
வெறித்துத் தகிக்கும் வெயிலுக்கிதமாய்
தரு நிழலைத் தருமப்பெரும்
வேப்பமரத்தின் வேர்களில்
தொடங்கும் அவளின்
சரிதம்.

ஆங்கிலேயன் ஆர்மியில் சிப்பாய்
அகோர வீரபத்ர நாயுடுவின்
மரணத் தீயிறங்கி மரித்துப் போனாள்
மனைவி வெங்கட்டம்மா.

நெருப்பில் குளிர்ந்த போது
நிறை மாத கர்ப்பிணியாய்
ஓர் இறப்பில் ஈருயிரிழப்பாய்
நிகழ்ந்து போக,
சூல் ஆடு குத்தி
தொடர்ந்து செய்யும் பூஜை
கால வெளியில் கனிந்து
குலம் காக்கும் அம்மனாய்
குடி கொண்டிருக்கிறாள்.

தொடர்புகள் அரிதானவக் காலத்தில்
கனவு வழி தகவல் சொன்னாராம்
மரித்துபோன வீரபத்ரன்.
தரச்சொல்லி மிலிட்டரி ஆபீஸரிடமும்
பெறச்சொல்லி பங்காளியிடமும்.
நாயுடுவின் துப்பாக்கி
போர்வாள் கேடயம் குறுங்கத்தி
வழிபாட்டுக்குரியதாயின.

வம்சாவழி தவிர யாருக்கும்
வழங்கப்படுவதில்லை
பூங்காளம்மன்
முன்படையலிட்டயெதுவும்.
திருமணமாகிப் போன பெண்களுக்கும் கூட.

மணமான பின்னாலும் மகள்தானே
பெண்ணின் பேருருவாய்த் திகழுமவள்
பேதமின்றி வழங்கிடவே
கசிந்துருகி வேண்டுமிக் கவிதையை
படையலிடுகிறேன்.

எனக்கு நம்பிக்கையிருக்கிறது
ஏனெனில்
இருநூறு ஆண்டுகளாய்
உயிர்த்திருக்குமவள்
குலவழி காக்கும்  சிறுதெய்வம் மட்டுமல்ல.
விருட்சமாய் நிமிர்ந்து நிற்கும்
தலைமுறைகளின்
நம்பிக்கை.


 (2010 கல்கி தீபாவளி மலரில் வெளி வந்திருக்கும் கவிதை)

Comments

Popular posts from this blog

இன்குலாப் என்னும் பொதுவுடைமைக் கவிஞன்

ஏற்புரை--தமிழ்மணவாளன்

தை முதல்நாளே தமிழர் புத்தாண்டு