பெயர்ச்சொல்.

எது எதை எது எதுவாய்ச் சொல்கிறோம்
அது அது அது அதுவாய் இருக்கிறது

மாட்டை ஆடென்றும்
ஆட்டை மாடென்றும்
சொல்லியிருந்தால்...
ஒரு வேளை
மாடு ஆடாகியிருக்கலாம்
ஆடு மாடாகியிருக்கலாம்

இடுகுறிப் பெயர்கள்
இப்படித்தான்.

நாலு கால் நாற்காலி
மூணுகால் முக்காலி
ஆமையிடம் திறமையிருந்தும்
சோம்பித் தோற்றதால்
‘முயல்’...

காரணம் காட்டும் பெயர்ச்சொல்.

நல்லதைச் செய்தால் நல்லவன்
கெட்டதைச் செய்தால் கெட்டவன்
செய்யும் வினையாலணையும் பெயர்

கெட்டதைச் செய்தாலும்
நல்லவனெனச் சொல்லச் சொல்லி
கெடுபிடி செய்யும்
காரணிகள்: பணம், பலம் பதவி
இலக்கணப்பிழையாய்...

நாயை நரியென்றால்
நாய் நரியாகலாம்
நரிக்குணம் என்னவாகும்...?
நன்றி வருமா நரிக்கு...?

இடுகுறிக்கே இதுவென்றால்
சொல் வெறும் சுட்டு தான்
செயலால் மட்டும் கிட்டும்.

சொல்லை மாற்றும் செயலை விடுத்து
தொழிலை மாற்றும் வினையால்
சொல் மாறும்.

Comments

Popular posts from this blog

இன்குலாப் என்னும் பொதுவுடைமைக் கவிஞன்

ஏற்புரை--தமிழ்மணவாளன்

தை முதல்நாளே தமிழர் புத்தாண்டு