காதலின் மிச்சம்



                                


காலில் குத்திய கருவேலம் முள்ளின்
துகளென
இதயத்தில் தங்கி இம்சிக்கும்
காதலின் மிச்சம்.

****     *****  ****

என் மீது நீ கொண்டிருந்த காதலை,
நானுணர்ந்த தருணம்
மிகவும் அபூர்வமானது.

அழகானதோர் அந்திப் பொழுதில்
நிகழ்ந்த சந்திப்பின் போது,
வெட்கம் விழிகளில் சிறகடிக்க
முத்தத்துடன்
முன் மொழியப்பட்டதல்ல..

சாலை விபத்தொன்றில் சிக்கி
அனுமதிக்கப் பட்டிருந்த வென்
படுக்கையருகே
யாரும் எதிர்பாராவண்ணம்
பெருங்குரலெடுத்துக் கதறிய போதுன்
விழிகளில் வழிந்த கண்ணீரில்..

****   ****   ****

உன்
திருமணத்தில் வாழ்த்த வந்தவர்கள்
ஒவ்வொருவராய்
உன்னவரிடம் அறிமுகம் செய்கையில்

என்னைப் பற்றிச் சொல்ல
உன்னிடம் வார்த்தை ஏதுமில்லை
உனக்குக் கொடுக்க
என்னிடம் பரிசுகள் ஏதுமில்லை..

நம் காதலைத் தவிர.

மாறாக,
பிறிதொரு வேளை
எதிரில் வந்த என்னைக் காட்டி
உன் மகனிடம்
‘பெரியப்பா, என்றாய்..
உறவின் ஒற்றைச் சொல்லுக்குள்
ஒளிந்து கொண்டன
ஒரு கோடி காதல் உணர்வுகள்.

பொன்னான காதல் நினைவுகளை
காலமென்னும் ராஜ திராவகம்
கரைத்த பின்னர்,
சந்திக்க வாய்த்த தருணங்களில்
எல்லாம்
இனிதான உனதிவ் வாழ்க்கை
எனதானதென
ஒருபோது நினையாத என்மனம்...

எதிபாரா வண்ணம்
உன் கணவனின் மரணத்தால்
நேர்ந்த துக்கம்,
என் மரணத்துக்குரியதென வெண்ணி
நெஞ்சின் ஆழத்தில்
கோரிக்கையற்ற அனாதைப் பிணமென
அடையாளமற்றுக் குமைகிறது
காதலின் மிச்சம்.

                 --தமிழ்மணவாளன்

Comments

Popular posts from this blog

குப்பை பற்றி ஒரு கவிதை

அசரிரீ சொன்ன பொய்

மரத்தின் நிழல்’