தை முதல்நாளே தமிழர் புத்தாண்டு

                   
பன்னெடுங்கால வரலாற்றைக் கொண்டது தமிழ்மொழி. வெகுகாலம் முன்பே நாகரிகத்தின் உயர் நிலையைக் கண்டவர்கள் தமிழர்கள். தமிழர்தம் குடும்ப வாழ்க்கை முறையும் சமூக நெறி காக்கும் முறைமையும் அத்தகைய நன்னிலையில் இருந்ததை நமது இலக்கியங்கள் காட்டுகின்றன. இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த சங்கப் பாடல்கள் அதற்குச் சான்றாய் விளங்குகின்றன. மொழிக்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்தவன் தமிழன்.
இடமும் பொழுதும் தான் வாழ்வியக்கத்தின் அடிப்படை என்பதை அறிந்தவன் தமிழன். வாழும் நிலப்பரப்பை அவற்றின் தன்மையினால் பகுத்தான்.
தமிழர் நிலத்தை நான்கு வகையாகப் பாகுபடுத்திப் பார்த்தனர். முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்பன அவை. முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து பாலை என்பதோர் படிமம் கொள்வதை உணர்ந்து பாலை என்னும் நிலத்தையும் கற்பித்துக்கொண்டனர். தமிழ்நாட்டில் பாலைவனம் இல்லை. நிலத்திணையை நாம் இவ்வாறு புரிந்துகொள்ளவேண்டும். குறிஞ்சிமுல்லைமருதம்பாலைநெய்தல் என்பனவே தமிழர் நிலத்திணைகள் ஆகும்.
மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சித் திணையெனவும் காடும், காடு சார்ந்த நிலமும் முல்லைத் திணையெனவும் இவையிரண்டுக்கும் இடையில் அமைந்த பாழ் நிலம் பாலை எனப்பட்டது.வயலும் வயல் சார்ந்த நிலமும் மருதம் எனவும்,கடலும் கடல் சார்ந்த இடம் நெய்தல் எனவும் அழைக்கப்பட்டன.
இது வெறுமனே நிலத்தின் தன்மையினால் உருவாக்கிய பகுப்புக்களாக இல்லாது, மக்கள் வாழ்வியலோடு இணைந்தவையாக அமைந்திருப்பதைக் காணலாம்..
அதுபோலவே காலத்தை வகுத்துக் கொண்டு வாழக் கற்றவன் தமிழன்.
காலத்தை சிறு பொழுதெனவும் பெரும்பொழுதெனவும் பகுத்தான். காலை,நண்பகல்,எற்பாடு, மாலை,யாமம்,வைகறை என நாளின் பொழுதைச் சிறுபொழுதாகவும் முன்பனி, பின்பனி,இளவேனில்,முதுவேனில்,கார்,கூதிர் என ஆண்டினைப் பெரும் பொழுதாகவும் பகுத்தான்.
நிலத்தைப் பகுத்தவன் காலத்தை வகுத்தவன் வாழும் காலத்தை, சூழலை, சமூகத்தின் நிலைமையை இலக்கியங்களாய் ஆக்கியவன் தொடராண்டு முறையின்றி வரலாற்றின் சங்கிலியற்ற தன்மையுடன் இருந்தது ஆச்சர்யமானது தான். அதன் விளைவாக பிற இன ஆதிக்கச் சூழல் மேலோங்கிய தருணங்கள் நடைமுறைகளைச் சாதமாக்கிக் கொள்ள சித்திரை முதல்நாள் ஆண்டின் முதல் நாள் ஆனது என்பது விளங்கிக் கொள்ளக் கூடியதே.

 தற்பொழுது நாம் கொண்டாடும் புத் தாண்டு, கி.பி.78இல் சாலிவாகனன் எனும் வடநாட்டுமன்னரால் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ”ஆண்டுப் பிறப்பு (வருஷ­ப் பிறப்பு) என்பதன் பொருளே அது நாரதரின் குழந்தை என்ற கதை மரபால்உருவானது தான். மற்றபடி ஆண்டுத் தொடக்கம் என்பதுதான் தமிழர் மரபு’,'என்பார் பாவலரேறு பெருஞ்சித்திரனார். இவை வடநாட்டு அரசனால் ஏற்பட்டவை என்பதால் வட மொழிப் பெயர்களாய் உள்ளன என்பதை அறிய முடியும்.
அறுபது ஆண்டுகளின் பெயர்களில் ஒன்றுகூடத் தமிழ் இல்லை. 60 ஆண்டுகள் பற்சக்கர முறையில் இருப்பதால் 60 ஆண்டுகளுக்கு மேல் உள்ள காலத்தைக் கணக்கிடுவதற்கு உதவியாகவும் இல்லை. 60 ஆண்டுகளின் பெயர்கள், கிருஷ்ணனும் நாரதரும் கலவி செய்து பெற்ற பிள்ளைகள் என்ற கதையும் அறிவுக்குப் பொருத்தமின்றியிருப்பதை அறிய முடியும்.. ஆகவே தான் சித்திரை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடுவது முறையல்ல என்று தீர்மானித்து, 1921ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க் கடல் மறைமலையடிகளார் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட தமிழ் புலவர்கள் கூடி தமிழர்க்கென்று ஒரு தனி ஆண்டு தேவை என்று கருதி திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு ஒன்றினைப் பின்பற்றுவது என்றும், திருவள்ளுவர் காலம் கி.மு.31 என்றும் முடிவு செய்தனர். முடிவு செய்தவர்களில் தலையான தமிழ் அறிஞர்கள், தமிழ்க்கடல் மறைமலை அடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி. கலியாணசுந்தரனார், தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணியபிள்ளை, சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் நா.மு. வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி..பெ. விசுவநாதம், பேராசிரியர் சா. நமச்சிவாயனார் ஆகியோர் ஆவார்கள்.
அதன் பிறகு 1939ஆம் ஆண்டு  திருச்சியில் அகில இந்தியத் தமிழர் மாநாடு  நாவலர் சோமசுந்தர பாரதியார்  தலைமையில் கூடியதுஅதில்தந்தை பெரியார், கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் உமா மகேசுவரனார்பேராசிரியர் கா.சுப்பிரமணியம், தெ.பொ. மீனாட்சிசுந்தரனார்திரு.வி.., மறைமலை அடிகளார்பி.டி. இராஜன், ஆற்காடு ராமசாமி முதலியார்புரட்சிக் கவிஞர்  பாரதிதாசன்பட்டுக் கோட்டை அழகிரி உட்பட பலரும் பங்கேற்றனர். அந்த மாநாடும்  தை முதல் நாளே  தமிழ்ப் புத்தாண்டு  என்று கூறியது.

ஆனால் வேறுபட்டக் கருத்துடையோரின் எதிர்ப்பால் உடனே நடைமுறைப் படுத்திட இயலவில்லை. பிறகு வெகு காலம் கழித்து 1971ஆம் ஆண்டு கலைஞர் அவர்கள் தமிழ் நாட்டு முதலமைச்சராக இருந்த பொழுது, திருவள்ளுவர் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும், 1972ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு இதழிலும் நடைமுறைப்படுத்த ஆணை பிறப்பித்தார்.ஆயினும் வெகுநாளாக கடைபிடிக்கப்பட்டு வந்த பழக்கத்தாலும் சித்திரையே ஆண்டின் முதல் நாள் என்னும் கருத்துடையோரின் எதிர்ப்பாலும் முற்றிலும் நடைமுறைக்கு வராதிருந்தது.
பல்வேறு அரசியல் மாற்றங்களுக்குப் பின் ஆட்சிக்கு வந்த கலைஞர் தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு என நடைமுறைப்படுத்த திரும்பவும் ஆட்சி மாற்றத்தின் போது பழைய நிலைக்கே மாறிப்போனது.
தையே முதற்றிங்கள்; தைம் முதலே ஆண்டு         முதல்
பத்தன்று; நூறன்று; பன்னூ றன்று
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு தைம்முதல்நாள், பொங்கள்       நன்னாள்
நித்திரையில் இருக்கும் தமிழா !
சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப்புத்தாண்டு
அண்டிப் பிழைக்க வந்த ஆரியக் கூட்டம்           காட்டியதே
அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழர்க்கு
தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு
 என்னும் பாவேந்தரின் வரிகள் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்பதை வலியுறுத்துவதைக் காணலாம்.
தை முதல் நாளே தமிழாண்டுத் தொடக்கம் எனும் கருத்துக்கு ஆதரவாக வள்ளலார் கருத்துரைக்கிறார்.
”ஓர் ஆண்டினை வடபுலம், தென்புலம் என இரண்டு மண்டலங் களாகப் பிரித்துள்ளனர்.
வடபுலம் (உத்தாரயணம்) - தை முதல் ஆறு மாதங்கள் பகற் பொழுது அதிகம்.
தென்புலம் (தட்சிணாயணம்)ஆடி முதல் ஆறு மாதங்கள் இராப் பொழுது அதிகம்.
இதனை ஒளிப்பக்கம், இருட்பக்கம் என்பர். ஒளி -_ அறிவுடைமை, ஞானம்; இருள் _ அறியாமை, அஞ்ஞானம் -ஒளி _ சுவர்க்கம்; இருள் _ நரகம்.
இருளினின்றும் நாம் ஒளிக்குச் செல்ல வேண்டும். அஞ்ஞானத் தினின்றும் ஞானத்திற்குச் செல்ல வேண்டும். அஞ்ஞானம் நீங்கி ஞானம் உதிக்க வேண்டும். அறியாமை அகன்று அறிவுடைமை வரவேண்டும். எனவே, அறிவுடைமைக்குச் சான்றாக விளங்கும் ஒளிப்பக்கத் தொடக்க நாள், தை மாதத் தொடக்க நாளே!”,
என  ஆன்மீக ரீதியாகவும்  வள்ளலார் முன்வைத்த குறிப்புகளைக் கவனத்தோடு நோக்குதல் அவசியம்.
தைத் திங்கள் முதல் நாளையே தமிழர்கள் புத்தாண்டுத் தொடக்கமாகப் பல்லாண்டு காலமாகக் கொண்டாடி வந்துள்ளனர் என்பதற்கு ஈராயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட இலக்கியங்களில் சான்றுகள் உள்ளனவெனலாம்.
தைஇத் திங்கள் தண்கயம் படியும் -_ நற்றிணை
தைஇத் திங்கள் தண்ணிய தரினும் _- குறுந்தொகை
தைஇத் திங்கள் தண்கயம் போல் _ புறநானூறு
தைஇத் திங்கள் தண்கயம் போல _ ஐங்குறுநூறு
தையல் நீராடி தவம் தலைப்படுவாயோ _ கலித்தொகை
போன்ற, தைத் திங்களின் சிறப்பினைப் பேசும் நம் சங்கப் பாடல்களின் வரிகளை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்
”தை பிறந்தால் வழி பிறக்கும்”, என்னும் மரபுவழித்தொடரையும் நினவு கொள்ளல் அவசியமாகும்.
எதையும் ஆழ்ந்த பொருளுடையதாய்ச் செயலாற்றும் வல்லமை கொண்டவர்களாய் பண்டையத் தமிழர்கள் இருந்தனர்.தமிழர்களிடம் கடவுள் நம்பிக்கை தொன்மைக் காலத்தில் இல்லை. அவர்கள் தங்களுக்குப் பயன்படுபவற்றை, தங்களுக்கு நன்மையும், பாதுகாப்பும் தருபவற்றை மரியாதையின் பொருட்டும், நன்றி செலுத்தும் பொருட்டும் வணங்கினர்.
பொங்கல் என்பது அறுவடைத் திருவிழா. விளைவித்த விளைபொருள் களம் கண்ட மகிழ்வில், அந்த விளைவிற்குக் காரணமானவற்றை மதிக்கும் விதமாகவே விழா அமையப் பெற்றது, அந்த விளைச்சலுக்குக் காரணமான மழைக்கு நன்றி கூற விரும்பி மழைத் திருநாளாய்க் கொண்டாடினர்.மழைக்கு இந்திரன்,அவன் பேர் போகி என்று மாற்றியது காலத்தின் திரிபாகும். பின் தமக்குச் செல்வமாக விளங்கிய மாடுகளுக்கு நன்றி சொல்லும் விழா.இவற்றையெல்லாம் கணக்கில் கொள்ளும் போது தை முதல் நாளே ஆண்டின் தொடக்கமாக அமைவதற்கான சாத்தியங்களைப் பெற்றிருப்பதாக அறிய முடியும்.மேற்கண்ட செய்திகள் எல்லாம் பலராலும் பல தருணங்களில் முன் வைக்கப் பட்டவையேயாகும்.
உளவியல் ரீதியாக ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.ஒரு புத்தாண்டுக்கான எல்லா கட்டமைப்பையும் தைப் பொங்கல் விழா கொண்டிருப்பதைக் காணலாம். இருக்கும் வழக்கப் படியே பார்த்தாலும் ஓர் ஆண்டின் தொடக்கத்தின் முதல் நாளில் கடந்த ஆண்டின் துன்பங்கள் தீமைகள் எல்லாவற்றையும் கொளுத்தி புதிய ஆண்டினை வரவேற்கத் தயாராகும் நிகழ்வாக போகியைக் கருதத் தோன்றுகிறது. புத்தாண்டில் மகிழ்த்து, காலத்தை பூமிக்கு வழங்கும் கதிரவனைப் போற்றிப் பொங்கலிடும் விதமாய்ப் புத்தாண்டைத் தொடங்குவதும் புரிந்து கொள்ளக் கூடியதே. அது போலவே ஆண்டின் தொடக்கம் எத்தகைய பருவ நிலையில் பழந்தமிழர் உருவாக்கியிருப்பார்கள் என்பதையும் ஊகிக்க முடியும்.

எனவே, சான்றுகள் வாயிலாகவும் இலக்கியத் தொடர்கள் வாயிலாகவும் சான்றோர்கள் முன் வைக்கும் கருத்தியல்கள் வாயிலாகவும் வழக்கத்தில் இருக்கும் தமிழ் ஆண்டுகள் தமிழில் இல்லாதிருக்கும் எதார்த்தமான முரண் வாயிலாகவும் விழா வடிவமைப்பின் வாயிலாகவும் பருவ நிலை வாயிலாகவும் தொடராண்டு தமிழுக்கு இல்லாதிருக்கும் சிக்கலினைப் போக்கும் வழிமுறையாகவும் தைத் திரு நாளே தமிழர்தம் புத்தாண்டு எனவும் தொடராண்டினை திர்வள்ளுவர் பிறப்பினைக் கொண்டு கணக்கிடுவதுமே பொருத்தப் பாடுடையதாக இருக்கிறது எனலாம்.

Comments

Popular posts from this blog

குப்பை பற்றி ஒரு கவிதை

அசரிரீ சொன்ன பொய்

மரத்தின் நிழல்’