இன்று என் பிறந்தநாள்


                     ------------------------------------------
இன்று என் பிறந்தநாள்.
நள்ளிரவு தாண்டி இந்த நாள் ஆரம்பிக்க, மனைவி தொடங்கி மகன்கள் தொடர்ந்து உறவுகள் நண்பர்கள் அலுவலகத் தோழமைகள் கலை இலக்கிய ஆளுமைகள் முக நூல் நண்பர்கள் எனப் பலரும் வாழ்த்துத் தெரிவித்தனர்.எல்லோருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
பிறந்த நாளின் போது எனக்கு வாழ்த்துச் சொல்வதற்காக ஒருவர் மேற்கொள்ளும் மெனக்கெடல் மிகுந்த நெகிழ்ச்சியை உருவாக்குகிறது.
நேரிலும் தொலைபேசி மூலமும் குறுஞ்செய்தி வாயிலாகவும் மின்னஞ்சல் பகிரி மெஸெஞ்சர் வழியும் வழியும் அன்பை என்னென்பது.வாழ்த்துவதற்கு செலவிடும் வார்த்தைகள் வெறும் வார்த்தைகள் அல்ல. அவர்களின் எண்ணமும் மகிழ்ச்சியுமல்லவா.
அலுவலகத்தில் ஐஸ்கிரீம்  குளிர்ச்சியோடு வாழ்த்தினார்கள்.
இவற்றினூடாக, இந்தப் பிறந்த நாளில் பிரத்யேகமாக சிலரிடம் வாழ்த்துப் பெற மனம் விழைந்தது.
வடசென்னைப் பகுதியில் மாதவரம், மாத்தூரில் இருந்து ஞாயிறு செல்லும் சாலையில் பெருங்காவூர் என்னும் கிராமத்தில் இயங்கும், ‘உயிரொளி’ முதியோர் இல்லத்தில் என்னைப் பெறாத பெற்றோராய் இருப்பவர்களிடம் வாழ்த்துப்பெற வேண்டும் என்பதே அது.
இன்றைய மதிய உணவினை அவர்களோடு உண்டது பெருமகிழ்வு. எவ்வித வெளிநாட்டுப் பண வருமானமும் இன்றி நடைபெறும் இல்லம் அது. முதியவர்களெனில் அறுபது எழுபது வயதல்ல. அங்கு குறைந்த வயதுடைய தாய்க்கே எண்பத்தைந்து வயது.மற்றவர்கள் அவரினும் மூத்தோர்.
ராஜ்குமார் தனது கட்டடத்தை வழங்க கணேசன் அவர்களின் உணவு மருத்துவம் போன்றவற்றைக் கவனிக்கிறார்.ஒரு நாள் முழு சிறப்பு உணவு வழங்க ரூபாய் நாலாயிரம் செலவாகிறது.
நான் அதனை இங்கே குறிப்பிடக் காரணம் நான் அதற்குப் பங்களித்தேன் என்பதைக் குறிப்பிடுவதற்காக அல்ல. நம் வாழ்வில், பிறந்த நாள்கள் சிறந்த நாள்கள் நினைவு நாள்கள் போன்ற தருணங்களை நிறைவுள்ளதாக்க விரும்ம்புவோர்க்கு அறியப்படுத்தும் நோக்கமேயாம்.
பணம் தான் வழங்க வேண்டுமென்பதில்லை. அவர்களுக்கு, செவிகள் தேவைப்படுகிறது. தாம் பேசுவதைக் கேட்க, செவிகள் தேவைப்படுகிறது. கால அவகாசம் கிடைக்கும்போது இப்பகுதி நண்பர்கள் அவர்களோடு உரையாடலாம்.
காதுகளைக் கதவடைப்புச் செய்து, முன் முடிவோடு அமர்ந்திருக்கும் பார்வையாளர்களிடம் பலசமயம் உரையாற்றுகிறோம்.நாம் பேசுவதை பிரியத்தோடு கேட்பதற்குக் காத்திருக்கிறார்கள்.இவர்களைப் போன்றோரிடம் உரையாற்ற நேரம் ஒதுக்குவோம்.
என்னைத்தொடர்பு கொண்டால் அவர்களுக்கு உதவிடும் வண்ணம் ஆற்றுப்படுத்தி விட ஏதுவாகுமென நம்புகிறேன்.
இந்தப் பிறந்த நாள் எனக்கு விஷேசமானது.

அனைவருக்கும் என் இதயம் நெகிழும் நன்றி.

Comments

Popular posts from this blog

இன்குலாப் என்னும் பொதுவுடைமைக் கவிஞன்

ஏற்புரை--தமிழ்மணவாளன்

தை முதல்நாளே தமிழர் புத்தாண்டு