நிதர்சனத்தின் விரல் பிடிக்கும் வரிகள்


(தமிழ்மணவாளனின், ‘உயிர்த்தெழுதலின் கடவுச் சொல்’, கவிதை நூலினை முன் வைத்து)
                                    -வேதநாயக்    

1992 லிருந்து 2016 வரை 8 புத்தகங்கள்.
இந்த உயிர்த்தெழுதலின்  கடவுச் சொல் வரை 5 கவிதை தொகுப்புகள்,
தமிழின் ஆளுமைக் கட்டுரைகள் ஒன்று, நூல் விமர்சன கட்டுரை நூல் ஒன்று, நவீன தமிழ் கவிதைகளின் நாடக கூறுகள்  பற்றிய காலமும் வெளியும் என்ற ஆய்வு நூல் ஒன்று என கால் நூற்றாண்டாக இயங்கி வரும் தமிழ் மணவாளன் அவர்களின் இந்த உயிர்த்தெழுதலின் கடவுச் சொல் நூல் வெளியீட்டின் சார்பாக சில வார்த்தைகள்.
அழகான வடிவமைப்புடன் படி வெளியீடாக (டிஸ்கவரி புக் பேலஸ்) உயிர்த்தெழுதலின் கடவுச் சொல் வெளிவருவதற்கு வாழ்த்துகள்.
அவரது வார்த்தைகளிலிருந்தே துவங்கலாம் என்று நினைக்கிறேன்.

உடன்பாட்டுக்கான எந்த சொற்களுமில்லை யெனினும்
 உரையாடல் இடையறாது நிகழ்கிறது

வாசகனுக்கும் படைப்பாளிக்கும் இடையே இருப்பதாக நினைக்கப்பட்ட , நினைக்கின்ற தூரத்தை குறைத்திருக்கிறார் என இவ்வரிகளிலேயே நினைக்க வைத்து விடுகிறார்.
அத்துடன் 
சூட்சுமம்’, கவிதையில் அதன் தொடர் நூலிழை போல் அவரது பார்வையாக,

தேவைக்கான மசாலாவுடன் மணக்க மணக்க
 காலத்தின் சுவை நாவின் உணவாகிறது

எனக் குறிப்பிட்டு தெளிவுபடுத்தியும் விடுகிறார்.
எல்லா கவிதைகளையும் வாசித்துவிட்ட பின்பும் சில வரிகள் தொந்தரவு செய்தபடியே இருக்கின்றன.
எல்லோருக்கும்
யாரிடமேனும்
புகார் இருந்து கொண்டே இருக்கிறது
 எனத் தொடங்கும் கவிதையின் இறுதி வரிகளாய்,

எனவே தான் நடித்துக் கொண்டிருக்கிறோம்
உன்னையெனக்கும்
என்னையுனக்கும்
பிடிக்கவில்லையெனினும்
பிடித்தது போலவும்
பிடித்திருந்த போதும் பிடிக்காதது போலவும்

என முடிக்கையில் நிதர்சனத்தின் விரல் பிடித்து வரிகள் அழைத்துப் போகின்றன.
கனவின் பெரு வழி அருகே போகலாமா வேண்டாமா என்ற கேள்விக்கு முதலடியை எடுத்து வைக்கலாம் என்று மிகையின்றி சொல்ல முடிகிறது இவரால்.
அவளின் கணவனை எனக்கு அறிமுகப்படுத்திய போது என்ற கவிதையில் கடைசி மூன்று வரிகள்

அவனின் ஓர் இயலுமையும்
என்னினோர் இயலாமையையும்
பகிரங்கப் படுத்தி  
என முடிகையில் வேறு எதனையும் பொதுமைப்படுத்தாமல் குறிப்பிட்ட குணாதிசய சித்திரங்களை முதன்மைப்படுத்தி வலிக்கச் செய்ய வைக்கிறது  இக் கவிதை.
சொல் எனும் 22 வரிக் கவிதை முத்தாய்ப்பு ரகம்.

நானொரு போதும் சொற்களை
அம்பென்பப் பிரயோகிப்பதே கிடையது
என்னவாயினும் நீ வீசும்
சொல்லல்லவா?
இன்னுமொரு கவிதையில் ,

நீண்ட எழுதுகோலெனத் தோன்றுமிக்
குடுவையில் பொங்கி வழியும்
நுரையடங்குமி டைவெளிப்போதிலே தானிந்தக்
கவிதையை 
செய்து கொண்டிருக்கிறேன் 
நான்

என்கையில் அது அவரே அவருக்காய்தான் அக்கவிதையை சமைத்துக் கொண்டிருக்கிறார் எனப் படுகிறது.
ஆண்ட்ராய்ட் கவிதைகள் நன்றாக வெளி வந்திருக்கிறது. குறிப்பாக ஆறாவதாக,உள்ளமர்ந்து சாளரத்தினூடாக பார்த்துக் கொண்டிருக்கையில்’, எனத் துவங்கும் கவிதை.

முகநூலில் மட்டுமே அறிந்த என்னை அன்போடு அழைத்தமைக்காக 
இவரது கவிதைகளுக்கென  நான் என்னவென்று சொல்லி வாழ்த்த?
நன்றியும் பேரன்பும் ப்ரியங்களும் அவருக்கும்

Comments

Post a Comment

Popular posts from this blog

குப்பை பற்றி ஒரு கவிதை

அசரிரீ சொன்ன பொய்

மரத்தின் நிழல்’