தமிழ்மணவாளன் கவிதை: குதிரை சவாரி
ஈரம் படிந்த மணற்பரப்பின் அந்தியில்
குளம்படித்தடம் பதித்து
குழந்தைகளை மட்டுமே ஏற்றிச் செல்லும் பாவனையோடு
குதிரையொன்று வந்து நிற்கிறது.
’சுற்றொன்றுக்கு வெறும் ஐந்து ரூபாய் தான்’
ஏறி அமர்ந்தவுடன்
கம்பீரமாய்க் கடிவாளம் பற்றுகிறான்
ஓர் இளவரசனைப் போல.
பார்வை தூரம் கடந்ததும்
பதற்றத்தில் விழிகள் நிலைகுத்தி நிற்க,
புலப்பட மெல்ல மீண்டது புரவி.
தேசம் பிடித்து நாட்டுக்குத் திரும்பும்
மன்னனைப் போன்ற
வெற்றிக் களிப்புடன்.
பின்னொரு நாளில் இதே நினைவுடன்
அடம் பிடிக்கிறான்
கைகளை ஊன்றி முழங்காலிட்டு குதிரையாகினேன்
முதுகில் ஏறி அமர்ந்ததும்
காலரை இறுக்கிப் பிடிக்கிறான்
கடிவாளத்தைப் போல.
‘வேகமா போ..குதிரை வேகமா போ’
மழலைக் குரலின் மிரட்டல்
வேகம் கூட்டியது குதிரைக்கு
குழந்தைக்கு என்னை
அப்பாவாகப் பிடிக்கிறதோ என்னவோ

குதிரையாகப் பிடிக்கிறது மிகவும்.

Comments

Popular posts from this blog

குப்பை பற்றி ஒரு கவிதை

அசரிரீ சொன்ன பொய்

மரத்தின் நிழல்’