தமிழ்மணவாளன் கவிதை:கண்ணெதிரே


                                                 -----தமிழ்மணவாளன்


கண்ணெதிரே விரிந்திருக்கும் திரைச்சீலையென
காற்றுவெளியெங்கும்
கலைத்துக் கலைத்து வரைந்து கொண்டிருக்கிறது 

காலம் தன் சித்திரங்களை
காலைக்கென்று ஒரு வண்ணம்
கடும்பகல் காட்டும் ஒரு வண்ணம்
அந்திப் பொன்மாலை ஒரு வண்ணம்
இரவின் ஏகாந்தம் ஒரு வண்ணம்
ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வண்ணத்திலுமுன்னை வரைந்து காட்டுவதால்
புரிந்து கொள்வதெளிதாகிறது
ஒரு சமயம் பச்சை
ஒரு சமயம் மஞ்சள்
ஒரு சமயம் நீலம்
ஒரு சமயம் சிவப்பு
ஒரு சமயம் கறுப்பு
இன்னும்

சமயத்திற்கேற்ப வரையப்பட்டவுன் சித்திரங்கள்
புனைவுகளின் பாதுகாப்போடு
புதைந்து கிடக்கின்றன
மூளையின் ஆழ் மடிப்புகளில்  அதிலொன்றும் பிரச்சனையில்லை

ஏதோ ஒரு நிர்பந்தத்தின் அழுத்தம்
எல்லாச் சித்திரங்களையும்
ஏக காலத்தில் மீட்டெடுக்கும் முயற்சியில் தான்
நேர்ந்து விடுகிறது
பிறழ்வும் பிளவும்

Comments

Popular posts from this blog

இன்குலாப் என்னும் பொதுவுடைமைக் கவிஞன்

ஏற்புரை--தமிழ்மணவாளன்

மரத்தின் நிழல்’