அசரிரீ சொன்ன பொய்


கவிதை வாசிப்பது என்பது இடையறாத ஒரு பணியாக செய்து வருபவன் என்னும் வகையில், பல்வேறு பட்ட வகைமைகளை எதிர் கொள்வதும் அவற்றினூடாக பயணிப்பதும் அவை உருவாக்கும் மனச்சலனங்களை கிரகிப்பதும் சுகமான கவிதானுபவம், ஆய்வுக்காக, சில நூறு சம காலக் கவிதைத் தொகுப்புகளை வாசித்தேன். மேற்கோள்களுக்கு எடுத்ததன்றி அவற்றில் இருந்த கவிதைகள் குறித்து பதிவேதும் செய்ய வில்லை. பின்னர் ,கவிநுகர் பொழுது தொடருக்காக வாசித்து, எழுதி வருகையில், விஜேந்திராவின்,’அசரீரி சொன்ன பொய்’, தொகுப்பு குறித்து வெகு முன்னரே எழுதியிருக்க வேண்டும். ஏனோ, ’கவிநுகர் பொழுது’, நூலாக வெளிவரும் இத்தருணத்தில் தான் எழுத வாய்த்திருக்கிறது. இதுவே ’கவிநுகர் பொழுது’,தொகுப்பின் நிறைவுக்கட்டுரையாகவும் அமைகிறது.
காலத்தின் வெளிகளில் கைவீசி நடக்கும் வாழ்வின் இயக்கம் 360 டிகிரிக்குமாக  அமையும் வட்டத்தில், பயணத்தின் திசையைத் தீர்மானிப்பது காலமா? வெளியா? வெறுமனே இயக்கமாய் அறியப்படும் பௌதீக நகர்தலா? ஏதேனும் அணுகுமுறைச் சாத்தியத்தை உறுதிப்படுத்தும் கட்டளைகள் உண்டா?
குரல்கள் கேட்பது செவிகளினாலெனில் பிறிதொன்றின் தன்மை யாது? பிறிதொன்று என்பதே யாது? அந்தக் குரல் எங்கிருந்து கேட்கிறது? யாரின் குரல்? அந்தக் குரல் மெய்யானதா? கற்பிதமா? அசரீ என்பதே உண்மைக்கு மாறான அறிவழிக்கும் இருளா? அதை விடுத்து அசரீரி என்பதன் தன்மையேற்கும் படியாகிடினும் அது சொல்வது நன்றா? தீதா?
நன்றெனில் மகிழ்ச்சி. தீதெனில் ஏற்போமா? உடன் தோன்றும், அசரீரி சொன்ன பொய்யென.
இப்படியான, செவிப்புலன் மீறிய குரல்வழி கேட்கும் உண்மைகளும் பொய்களும் வாழ்வியக்கத்தைப் பாதிக்கும் கூறாக மாறிவிடுவது பிரத்யேகமான மனத்தின் பாற்பட்டதுதான். விஜேந்திராவின் கவிதைத் தொகுப்பின் தலைப்பைப் பார்த்ததும் மின்னலும் இடியுமாய் வானம் சிலிர்க்கும் பொழுதுகளை அறிந்த மொழியின் வார்த்தைகளாய் மாற்றி பொருள் கொள்ளத் தொடங்கும் வாசக மனம். இடுக்குகளில் தொன்மங்களை மறைத்து காலத்தை இருள்போர்வையாக்கி மூடியிருக்கிறது. மரணம், வலி, தொலைதல், மயானம் என்னும் பிரயோகங்கள் அவற்றிற்கான மன வெளியைக் கட்ட்டமைக்கத் தொடங்குகின்றன. வார்த்தைகளின் குணம் தானே அது?
காணா தேசத்தின் வரைபடத்தை வரையத் தொடங்குகிறார். இவர் வரைகிற காணா தேசம் எது? அதைச் சொல்ல வருபவர் , தான் வரையும் காணா தேசம் என்பது இவையில்லை என்று சிலவற்றைக் கூறுகிறார்.
           காதலின் மயக்கத்தில் புணர்ந்து களைக்க
           யாருமற்ற பிரதேசத்தை யாசகம் கேட்கும்
           காதலர்கள் தேடும் காணாதேசத்தை
           நான் வரைய வில்லை
           இமை மூடி
           சப்பணமிட்டு உச்சரிக்கும் மந்திரத்தின்
           இடையே தோன்றி-மறையும்
           காலயின்மைக்குள் நிரந்தரமாய்க் கூடிக் கொள்ள
           தவசிகளின் பேராசையில் முளைத்த
           சொர்க்க பூமியெனும் காணா தேசத்தையும்
           நான் வரையவில்லை
என்கிறார். அவர் வரைந்து கொண்டிருக்கிற காணா தேசம் வேறு. இந்த சமூகம் தொலைத்து விட்ட காணா தேசம் அது. கண்டு பிடிக்க வேண்டிய காணா தேசம் அது. மானுடத்தின் மீதான விசாரணையை முன் வைத்துப் பயணப்படுகிறர் அந்தக் காணா தேசத்தை நோக்கி. இந்தச் சமூகத்தில் உறவுகளுக்கு என்ன மதிப்பு இருக்கிறது. அந்த மதிப்பீடுகளும் எதனைப் பிரதானமாகக் கொண்டிருக்கின்றன. முதியவர்களை மதிக்காத சமூகம் என்ன சமூகம்? முதியவர்களைச் சுமையாக என்னும் தலைமுறையின் மனநோய்மைக்கூறு எத்தகையது? அப்படி மறுதலிக்கப்பட்ட பாட்டி கடத்தப்பட்ட தேசம் தான் இவர் தேடும் தேசம்.
           உறவுகள் துரத்த
           மானுடம் மதிப்பற்றதாக மாறிவிட்டதாய்
           கண்ணீர் மல்க கடைசி வார்த்தையாய்
           போகும் போது சொன்னாள் பாட்டி
           ” காணா தேசத்தைத் தேடிப் போகிறேன்”
           அந்தப் பாட்டியைத் தேடி
           அக்காணா தேசத்தின்
           வரைபடத்தை வரைந்து கொண்டிருக்கிறேன்
ஒதுக்கிவைத்த சமூகத்தின் கண்களில் பட்டுவிடாமல் வெகுதூரம் சென்றுவிட நினைக்கிற பாட்டி, இறுதியாய் ,காணா தேசத்திற்குப் போவதாகப் புறப்பட்டுப் போகிறாள். அந்தப் பாட்டி இருக்கும் காணா தேசத்தைத் தான், கவிதையில் வரைகிறார்,விஜேந்திரா. இப்படியானதொரு காணா தேசத்தைக் கண்டுபிடிக்கிற வரைபடத்தை வார்த்தைகளால் வரைவதன்றி ஒரு கவிஞனின் சொற்களுக்கு என்ன கௌரவம் வாய்த்துவிடக்கூடும்.

‘தொலைந்த நாம்’,என்னும் கவிதையில், கூடவே இருந்த காதலியைக் காணாமல் எல்லாபுறமும் தேடுகிறார். அவளை அறிந்தவர்களிடம் எல்லாம் விசாரிக்கிறார். அவர்கள் இவரின் வீட்டிற்குள்ளேயே இருப்பதாக உறுதிப்படுத்துகிறார்கள். இவருக்கு, தன் வீட்டில் இரூபது அவளில்லை, வேறு யாரோவெனத் தோன்றுகிறது.
           வெகு நாட்களுக்குப்
           பின்
           என்வீட்டின் கத்வைத் திறக்கிறேன் உள்ளே
           எனது அதே காதலி
தினமும் அவளைத் தேடுவதென்பது தொடர் வாடிக்கையாய் மாறிப்போன நாளொன்றில் வீட்டைத்திறக்க ,இவரின் காதலி இருப்பதைப் பார்த்து ஆச்சர்யமாகிறார். ‘அதே காதலி’, என்னும் சொல் வேறு காதலி குறித்த ஐயத்தை உருவாக்ககூடும். இது, காதலி வீட்டில் இருப்பது குறித்த கவிதையில்லையென்றும் பௌதீக இருப்பு பற்றியது இல்லையென்றும் எந்த எளிய வாசகனும் புரிந்து கொள்வான். சரி. தேடித் தேடி சலித்த நாளில் கதவைத் திறந்தாள் அதே காதலி நிற்கிறாள். உச்சம் என்ன தெரியுமா?

           புன்னகையுடன் அவள்முன் நிற்க
           கேட்கிறாள்- “நீங்கள் யார்?”
நாம் ஒரு பிரச்சனையை ஒருவாறாக அணுகும் போது, அது மட்டுமே முடிந்த முடிவான பார்வையல்ல. வேறு நபர்களுக்கு வேறு பார்வைகள் இருக்கக்கூடும். இதுவே யதார்த்தம்.

பல்வேறு ஆட்டங்களின் தன்மைகளோடு பயணித்து, கிடைத்தஏணிகள் ஒன்று விடாமல் பரமன் முன் நிற்கும் ஒருவனிடம்,’இது தோற்றவர்களின் இடம்” என்று அறிவிக்கும், ’ஆட்டவிதி’’, கவிதை சுவாரஸ்யமானது.

’பாட்டியின் புனைவிலிருந்து விடுபட்ட மாமுனி தரிசனம்’, என்னும் கவிதையில், வான் வெளியில் மூன்றாம் கண் விழிக்கும் தருணத்தை, புனைவுவழி, பூவின் வாசம் சூழ்ந்து எங்கும் படர ஆதிபுணர்வு உடலெங்கும் பரவும் கணமாகிறது.

மீளமுடியாத ஒரு இடம் நோக்கிய பயணமாய் அமையும் மரணம். மயானத்தில் நிறைவுறும் காட்சி, ’முடிவுறா கபால ஆட்டம்’ கவிதையில் இழந்து மீளும் ஏனையோரின் சித்திரமாய் விரிகிறது. மயானத்தில் மரணமுற்றவர்களை புதைத்துவிட்டோ எரித்து விட்டோ வந்தாலும் வீட்டில் தீபமாய் வாழ்கிறார்கள் என்பது ஐதீகம்.
           அரிச்சந்திரனின் ஆட்ட விதிப்படி
           இறந்தவர்கள் விளக்கில் தீபமாக
           சுடர்கின்றனர் தத்தமது வீட்டில்.
யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும்.
            மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
           பிறத்தல் அதனான் வரும்.
என்பது குறள். கோபம் தான் பல்வேறு தீமைகளுக்கும் காரணமாகிறது. ‘சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி’, என்பது அதனாலே தான்.
கோபத்திற்கு கதம் என்று ஒரு சொல் தமிழில் உண்டு. கதம் உடலில் கதகதப்பை உருவக்கக் கூடியது. கோபம் உடம்பில் வெப்பத்தை உருவாக்கக்கூடியது.
           உச்ச கோபத்தில் உதிர்த்த
           வார்த்தைகள் துர்மந்திரமாய்
           வெட்டவெளியில்…..
           சுடும் மணலை வாரி வாரி
           காற்றில் இறைத்து
கோபத்திற்கும் வெப்பத்திற்குமான தொடர்பு வெளிப்படும சூடு இச்சொற்களில் இணக்கமாகும் விதத்தைப் பார்ப்போம்.சுடு மணலை வாரி இறைப்பதெனில் சூரியன் தகிக்கும் மதியப் பகல் வேளை.
           வீசிய சூடு மணலின் வெப்பம்
           வெடித்த கொப்புளமாய் ஆறாத புண்ணாய்
சுடு மணலின் வெப்பத்தின் தன்மை விளங்குகிறதல்லவா? இவ்விதமாக கோபம் தகிக்கும் வெப்பச் சொற்களாய் மாறி வருவது ஏனெனில்
           பற்றியெரியும் வயிற்றோடு சொல்வேன்
சொல் கிளம்புமிடம் அது. ஒரு உணர்வு கவிதையின் ஸ்தூலத் தன்மையில் முனை மழுங்காமல், வாசிப்பில் அப்படியே தகிக்க அதற்கான தன்மைத்தான பிரயோகங்களே உறுதிப்படுத்தும். அதற்கான மேற்கோளாக இதனை பாவிக்கலாம். இவரின் கவிதைகளில் உணர்வுகளைக் கடத்துவதற்கான சொற்தேர்வு இயல்பாகவே தீவிரத் தன்மையைக் கொண்டுள்ளனவெனலாம்.

’தன் பிரசவம்’,என்னும் கவிதை.
பிரசவம் என்பது உயிர்ப்பின் அடையாளமல்லவா? தொடக்கமல்லவா? இவரின் கவிதை, ’பிரேத குவியலில் அவள்….’, என்றல்லவா தொடங்குகிறது.
இராமாயணத்திலே, ராமனின் அம்பு தைத்துக் கிடக்கும் இராவணன் குறித்த பாடலில் மரணத்திற்குத் தொடர்பான சொற்களாலேயே எழுதுவான் கம்பன்.
வெள்ளெருக்கஞ் சடைமுடியான்
வெற்பெடுத்த "திருமேனி" - மேலும் கீழும்
எள்ளிருக்க இடமின்றி உயிர் இருக்கும்
இடம்தேடி - இழைத்த வாறோ?
சொற்கள் செய்திகளை மட்டுமல்ல உணர்வுகளைக் கடத்துவது.
விஜேந்திராவின் கவிதைக்கு வருவோம்.
           இறப்பின் விளிம்பில் தன்
           கடைசி பலம் கொண்டு
           கருவறை வாசல் கிழிய காத்திருக்கிறாள்
          
           தொப்புள் கொடியைத் தானே அறுத்துக் கொண்டு
           இறந்த
           தன் தாயின் கடைசி உதிரம் பொங்கும்
முலைக்காம்பை உறிஞ்சி
           இறப்பின் எல்லையில்
           துவக்கமாய்
           வன்மத்தின் வழியே ஜனிக்கிறது
இறப்பு, வன்மம், ,கடைசி உதிரம், கருவறை வாசல் கிழிதல் என்று பிறத்தலுக்கு எதிர்மறையான சொற்கள்.

பிறப்பு X இறப்பு ஒன்றுக்கொன்று எதிரானதல்ல. ஒன்றுக்கொன்று தொடர்பானது. சங்கிலி போன்றது. தாயின் மரணமும் பிள்ளையின் மரணமும் ஒரு சேர நேர்கிறது. பிரசவத்தை விட பிரசவத்தில் மரணமுற்ற தாயே பிரதானமாகிறார். இந்த உணர்வு கவிமனத்தின் ஆழத்தில் ஊறிக்கிடக்கும் உணர்வு. படிமமாகிப் போன துக்கம்.

எவ்வாறெனில், இன்னொரு கவிதை, ’மனித வாழ்வில் பூனைகளின் நகர்வு’, என்று. அக்கவிதை இப்படித்தொடங்குகிறது
பிரசவ வலி தாளாத பூனை…..
கதவில் தொங்கும் இரு பூட்டைப் பற்றி
கவனியாது மேல் துவாரத்தின் வழி
உள் நுழைந்தது.
இந்தக்கவிதையின் பிற காட்சிகளுக்குச் செல்லாமல் இப்பகுதிக்கு நகரலாம்.
                அவளின் பனிக்குடம் உடைந்து கதறி அழ
                அவசரமாய் எல்லோரும் பூனை வீட்டைக்கடக்க
                உச்ச பசியில் குட்டிகளின்
                மரண அழுகைக்கு வெளியே
இதன் தொடர்ச்சியாகவே ’தன் பிரசவம்’, கவிதையின் ,’பிரேத குவியலில் அவள்..’, எனத்தொடங்கும் வரியைப் பார்க்கிறேன்.
                அவள் கவிதை ஒன்றில் பறந்த
                வண்ணத்துப் பூச்சி
போன்ற வரிகள் ஆசுவாசப்படுத்துகின்றன.

பொய்களா புனைவுகளா என்னும் விசாரிப்பில் உண்மையின் நம்பகம் தொலைவதைக் கணக்கில் கொள்வது முக்கியமாகிறது. அதன் மீதான விசாரிப்பு கவனம் கவிதைகளாகிறது. அவ்விதமான ஆழ்ந்த விசாரணை கடுமை போர்த்திக்கொள்வதும் மறைபொருளின் பிம்பங்களாவதும் தவிர்க்க வியலாததாகிறது.

                வற்றாத உன் அன்பின்
                வார்த்தைகள் இரு கரையெங்கும்
                ஒலிக்க….
                விட்டுச்சென்ற தடங்களின்
                மீதேறி பயணிக்கிறேன்
என்னும் வரிகளோடு கூடிய கவிதை தொகுப்பின் கடைசிக் கவிதையாக அமைந்திருக்கிறது. அக்கவிதையின் கடைசி வரி,
          
                வாழ்வு கவிதையாய் காட்சியளிக்கிறது

விஜேந்திரா தன் கவிதைகள் மூலமாக வாசகனை முற்றும் உள்ளிழுத்து அவற்றின் உணர்வுப்பரப்பில் உலாவ விடுகிறார். மனத்துக்கு நிறைவான கவிதைகளை வாசித்த திருப்தி.

விஜேந்திராவை வாழ்த்துவதினும் மகிழ்ச்சி வேறன்ன.

வாழ்த்துகள் விஜி.

Comments

Popular posts from this blog

இன்குலாப் என்னும் பொதுவுடைமைக் கவிஞன்

ஏற்புரை--தமிழ்மணவாளன்

தை முதல்நாளே தமிழர் புத்தாண்டு