’கண்ணாடி நகரம்’

(ஜெய தேவனின், ’கண்ணாடி நகரம்’ நூலினை முன் வைத்து)

ஜெயதேவன், வெகுகாலமாக கவிதையில் இயங்கி வருபவர். காலந்தோறும் மாறிவரும் கவிதைப் போக்கிலிருந்து விலகி நின்று விடாமல் உடன்  வருபவர். கவிதைகளின் திசைவழிப் பயணத்தில் உற்சாகமாய்ப் பயணிப்பவர். அவரின் அண்மைத் தொகுப்பு,’ கண்ணாடி நகரம்’.
கவிதைத் தொகுப்புக்கு முன்னுரை பெறுவது இயல்பானது. ஒன்றுக்கும் மேற்பட்டவர்களிடம் முன்னுரை எழுதச் சொல்வதும் உண்டு. இத்தொகுப்பிற்கு, யவனிகா ஸ்ரீராம், தேவேந்திர பூபதி, அமிர்தம் சூர்யா, சக்தி ஜோதி ஆகிய நான்கு பேர் முன்னுரை வழங்கியிருக்கிறார்கள். சிறப்பு என்னவெனில், கவிதைகளைப் பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொருவர் முன்னுரை எழுதியிருக்கிறார்கள். இது புது உத்தி. பயன் யாதெனில் ஒரே கவிதையை ஒன்றுக்கும் மேற்பட்டோர் பேசவோ மேற்கோள் காட்டவோ இயலாதவண்ணம் அமைவது.

ஜெயதேவன், சமகால அரசியலைத் தன் கவிதைகளின் பாடுபொருளாகக் கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது. உள்நாட்டு அரசியல் மட்டுல்லாது உலக வல்லாதிக்கத்தின் எதிர் குரலாக எழுதுகிறார்.
இன்றைக்கு, வளரும் நாடுகளின் பொருளாதாரத்தினை முடிவு செய்வது அமெரிக்க ஏகாதிபத்தியம். உலக வர்த்தகத்தினைத் தன் பார்லிமெண்டில் உருவாக்கும் தீர்மானத்தின் மூலமாக கட்டுக்குள் வைத்திருக்கிற சூழல். எல்லாவற்றுக்கும் அவர்களைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்தைக் கட்டமைக்கும் உலகமயம்.அதன் மீதான விமர்சனமாக, அந்த உலகச் சந்தையை, ‘கழுகுச் சந்தை’, என்கிறார் ஜெயதேவன்.

                பறக்கும் போது அதன் வயிற்றின் கீழ் பாருங்கள்
                உலகச் சந்தையில் விற்பதற்கான
                எந்திர முட்டைகள் கிடைக்கும்
என்று அங்கதமாய் நிறைவு செய்கிறார். அப்படியான சந்தை, நம் போன்ற வளரும் நாடுகளை, மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளையே குறி வைக்கின்றன. நம் மக்களுக்கு பொருட்களின் மீது ஒரு ஈர்ப்பை உருவாக்குவதே பிரதான விளம்பர உத்தியாகிறது. நுகர்வு கலாச்சாரத்தை ஒரு மீளவியலா மனத் தேவையாய் மாற்றுவது.
             ஒரு பொருளிலிருந்து கண்ணை எடுப்பதற்குள்
             என் கண்ணை எடுத்துக் கொள்கிறது
             இன்னொரு பொருள்
கண்களைப் பறிக்கிற வித்தை. அவ்விதம் கண்ணைப் பறிக்கிற சூழலில் வாழும் காலத்தில் நான் மனிதனா? பொருளா? என்னும் கேள்வி முக்கியமானது. வியாபாரப் போட்டியில் பொருள்களின் மீதான கவனம் குவிகிற போது மனிதர்களும் பொருள்களாகப் பார்க்கப் படுகிறார்கள் அல்லது மாறி விடுகிறார்கள். பன்னாட்டுச் சந்தையின் மூலமாக மூன்றாம் உலக நாடுகள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் குறித்த முக்கியமான வரிகள் யவனிகா ஸ்ரீராமின் கவிதைகளில் உண்டு.
                    
பல்முனை வணிகத்தின்
பிரதான பிச்சைக்காரனாகிய நான்
அழுகிய காய்கறிகள் விரயமாகும் சந்தைக்குள்
தெருவில் அலையும் மிருகத்தின் சாவதானத்தோடு
எல்லாவற்றிலும் வாய்வைத்து
முதுகுத்தண்டில் அடிவாங்குகிறேன்
என்னும் வரிகளைப் போல.


கண்ணாடி நகரம் என்னும் கவிதை. பொதுவாக வாழ்வியல் சார்ந்து எத்தனையோ கோடிப் பேர் கிராமத்திலிருந்து நகரங்களுக்குப் பெயர்ந்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக சென்னை போன்ற நகரங்களுக்கு மாநிலத்தின் பிற பாகுதிகளில் இருந்து பல லட்சம் பேர் வந்திருக்கிறார்கள். கெட்டும் பட்டணம் போ என்னும் சொலவடை உண்டு. பெரு நகரங்களுக்கு வந்தால் எப்படியேனும் பிழைத்துக்கொள்ளலாம் என்கிற நம்பிக்கை உண்டு. வாழ்தல் என்பது ஒரு புறம் இருந்தாலும் பிழைத்தல் என்னும் குறைந்தபட்ச உத்திரவாதத்தை நகரம் தருகிறது என்றே சொல்ல வேண்டும். ஆனால் ஊரிலிருந்து பதினைந்து வயதில் புறப்பட்டு வந்த வன் தனது ஐம்பத்தைந்தாவது வயதிலும் சென்னையை தன் ஊர் என்று சொல்வதில்லை. சொந்தஊர் என்றும் வாழ்வழியின்றி நகருக்கு வழியனுப்பிய கிராமத்தைத் தன் ஊர் என்று சொல்லும் மனம். வாழவைக்கும் நகரத்தின் மீது எப்போதுமே விமர்சனம்.இது இயல்பாக பேச்சிலும் பலரது படைப்புகளிலும் காணக் கிடைப்பது.ஜெயதேவன் அந்த இயல்பான கருத்தியலை உடைக்கிறார். கிராமம் சார்ந்த விஷயங்கள் தான் சிறப்பு மிக்கவையென்னும் வழக்கமான எண்ணத்தை மாற்றிப் பேசுகிறார். கிராமத்துக்குளத்தில் இருக்கும் மீன்கள் போலவே கண்ணாடித் தொட்டியின் பொன் மீன்களும் இனிப்பாய்த்தான் இருக்கின்றன அடுக்குமாடிக் குடியிருப்பில் எனத்தொடுங்கும் கவிதையில்,
                புழுதித்தரைகளும்
                கட்டைவண்டித் தடங்களும்
                என் பாட்டியின் சுருக்குப் பையை நினைவூட்டும்
அதே சமயம்
                தங்க நாற்கரச் சாலையில் தெரிகிறதே
                செர்ரி பழத்தின் வளவளப்பும்
                உலகைச் சுருட்டி வைத்த முட்டை ஓடும்
என்னும் வரிகளின் உச்சமாய் கவிதை நிறைவு பெறும் இறுதி வரிகள் மிகத்தெளிவாக
                கரிசல் காட்டின் பாதவெடிப்புகளை விட
                மோசமில்லை
                பிளீச் செய்யப்பட்ட நாகரீக மகங்களும்
                பவுடர் பூசிய நகரவீடுகளும்
என்கிறார்.இதில் இருக்கும் நுட்பமான அரசியல் நோக்கதக்கது.இதைப் போட்டு உடைத்து, யாழினி முனுசாமி எழுதிய கவிதை ஒப்பு நோக்கத்தக்கது.
                ஊருக்கு வெளியே எங்களை
                ஒதுக்கி வைத்திருக்கும்
                உங்கள் கிராமங்களை விடவும்
                அன்பானதாய்
                இருக்கிறது இந்நகரம்
என்னும் யாழினி முனுசாமி எழுதிய நகர் சார் நியாயமான ஆதரவு மனத்தை இதிலும் காணமுடிகிறது.
கனவு காணுங்கள் என்றார் அப்துல்கலாம். கனவு காணாமை குறித்த கவலை
இவருக்கும் எழுகிறது. கனவு காண்பதிலும் என்ன கனவு காணவியலாத சூழல் நிலவுகிறது?
                யாரும் கனவுகாண்பதில்லை
                ஆதாரமான பூமியில்
                ஒரு கொத்து நெல் நடுவது பற்றியும்
                காட்டில் விதை நடுவது பற்றியும்.
ஆனால் இந்த நாட்டில் கனவெல்லாம் டயோட்டொ கார்கள் பற்றியும் அரேபிய வாசம் பற்றியும் பெரிய பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்ப்பதுதான் பிரதானமாகிறது.
                குருவி முட்டைகளை உடைத்துச் சாப்பிட்டு விட்டு
                கூடுகளையும் சிதைத்த காலங்கள்
                வீடுகட்டிய காலங்களை விட சுகமானவை
பால்ய நாட்கள் மறக்கவியலாதவை.அதைப் பேசத்தொடங்குவது போலத்தெரியும் கவிதை பொருளாதார ஏற்றத்தாழ்வின் முகத்தைக் காட்டுகிறது,’முகங்கள்’, கவிதை.
                வாழைக்காய் தேனில் குழைத்துச் சாப்பிட்ட
                சின்னவயது ஞாபகங்களை ஜீரணித்துவிட்டு
                விலகிப் போகிறான் ட்யோட்டொ காரில்
                என் பால்ய நண்பன் பலராமன்
                அவன் மகள் எறிந்த ஃபைவ் ஸ்டார் உறைபொறுக்கி
                சேகரிக்கிறாள் பொறி உற்ண்டையுடன் என் மகள்.
அறிவியல் முன்னேற்றம் வாழ்க்கையில் ஏற்படுத்தியிருக்கும்மாற்றம் முக்கியமானது. அந்த மாற்றம் புறச்சூழலை மட்டுமல்ல; அகச்சூழலையும் மாற்றியிருக்கிறது.அத்தகைய மற்றத்தை மிகுந்த அங்கத உணர்வோடு பேசுகிறார்.
                கன்னிமார் கோயிலில் விளக்கேற்றிய
                கனகாம்பாள் இப்போது
                கணிப்பொறியின் எலிப்பொறியில்

                ஐயனார் சிலைக்கு வர்ணம் பூசிய
                மேற்குத் தெரு பாலன்
                கிராபிக்ஸில் வரைகிறான் பொங்குவினும் டால்பினும்
               
என்று பல் மாற்றங்களை ஒப்பிட்டுப் பேசும் கவிமனம்
                முளைப்பாரி, கரகம், குலவை
                என்று பொழுது கழித்தவர்கள்
                நாழிகைகள் நகர்கின்றன
அழைப்பு மையங்களில் (Call centers) அழகாய்
என்று சொல்லும் இடம் கவனிக்கத்தக்கது.காலமாற்றத்தைல் என்னவெல்லாம் மாறிப்போகிறது என்று சொல்லிக்கொண்டு வரும்போடு இதுவும் கூறப்படுகிறது. வாசிப்பில் இவ்விடம் சின்ன நிறுத்தம் நிகழ்கிறது. முளைப்பாரி, கரகம், குலவை இவற்றுக்குத் தொடர்புடையவர்கள் யார்? பெண்கள்.இவற்றின் மூலமாக என்னசெய்தார்கள்? சரி. இவற்றின் மூலமாக என்ன செய்தார்கள். பொழுதைக்கழித்தார்கள். வெட்டியாய்ப் பொழுதை மேற்சொன்ன காரியங்களில் பொழுதைக் கழித்தவர்களின் நேரம் இப்போது அழைப்பு மையங்களில் நகர்கின்றன. பெண்களின் இந்த மாற்றத்தை இயல்புவழி மகிழ்ந்து வரவேற்பது தான் பெண் வாழ்க்கை பற்றி கவிமனம் கொள்கிற உள்மன அக்கறை என்பதை புரிந்துகொள்ள முடியும்.

வெளிநாட்டில் சென்று பணம் சம்பாதிப்பது என்பது பல முகங்களைக் கொண்டது. குடும்பப் பொருளாதாரத்தை உயர்த்தக்கூடும். அதற்காக அந்த தனி நகர் இழப்பது தனிமைப்படுவது குடும்பத்தைப் பிரிவது என்பதெல்லாம் எந்த அளவுக்கு மன ரீதியாக கணக்கில் கொள்ளப் படுகின்றன.கண்காணா தூரத்துக்குப் பறக்கும் அவர்கள் பொன்முட்டையிடும் வாத்துகளுடன் திரும்புவார்கள். ஆனால் நிரப்ப வரும் நாளுக்காக காலிக்கோப்பைகளாக காத்திருக்கும் துன்பம் எத்தகையது.
அரேபிய தேசத்தில் எண்ணைக் கிணறுகளில் வேலைக்குப் போய் இருப்பவர்கள் பற்றி
                பெட்ரோல் வாசம் நுகரும்
                அவர்கள் மூக்கு மறந்திருக்கும்
                செம்பகப் பூக்களையும்
                மாலை மனோரஞ்சிதத்தையும்
அப்படியெல்லாம் இந்தமண்ணின் மணம் மறந்து அல்லது இழந்து பிழைப்புக்காக அல்லது வசதிக்காக செல்பவர்கள் தன் ஊரில் தன் சுற்றத்தாரோடு வாழ்கிற வாழ்க்கையைத் தவற விடுகிறார்கள்.அவர்களுக்கு நாம் என்னசெய்ய வேண்டுமாம்.தெரியுமா?
                வேண்டுமானால் நம் கிராமத்து மண்ணில்
                ஒரு கைப்பிடி எடுத்துவைப்போம்
                அவர்கள் வருகையின் போது முகர்ந்து பார்க்கவும்
                அரேபிய எண்ணெய் பிசுக்கைப் போக்கவும்
இவரின் கவிதைகள் நம் கண்முன்னேயே நிகழ்ந்து கொண்டிருக்கும் மாற்றங்கள் குறித்து கவலை கொள்கின்றன. கவலை  உலகமய மாதலின் மூலமாக நம் தேசம் எதிர்கொள்ளும் சவால்கள் கனத்தில் வருகின்றன.வாழ்க்கை ஏற்படுத்தும் சிக்கலகள் மனத்தில் நிரம்புகின்றன. அவைகுறித்த உரையாடலை சொற்களின் வாயிலாக நிகழ்த்திப் பார்க்கின்றன. சுற்றிலும் இருக்கிற அல்லது நடக்கிற விஷயங்களை கவிமனம் நுட்பமாகப் பார்க்கிறது. எழுதியும் பார்க்கிறது.
இவரின் பாடு பொருள்கள் சமூக அக்கறை கொண்ட யாரும் புறம் த்ள்ளிவிட முடியாத பொதுத் தளத்தில் இயங்குபவை. அதைப் பற்றிப் பேச விழையும் மனமாகவே சமூக ஆர்வலரின் மனமிருக்கும். அவற்றை வெளிப்படையாக அங்கதமாய் எழுதுகிறார்.
சமகால வாழ்க்கை குறித்தும் சமகால மனிதர்கலீன் நெருக்கடிகள் குறித்தும் நிகழும் பெரு மாற்றங்கள் குறித்தும் கொண்ட கவிதைகளின் தொகுப்பாக கண்ணாடி நகரம் இருக்கிறது.

தொடரும் அவரின் இலக்கிய கவிதைப் பயணத்தை மகிழ்ந்து வாழ்த்துகிறேன்.

Comments

Popular posts from this blog

இன்குலாப் என்னும் பொதுவுடைமைக் கவிஞன்

ஏற்புரை--தமிழ்மணவாளன்

தை முதல்நாளே தமிழர் புத்தாண்டு