பைசாசம் ----------------------------


                  
நூற்றுக்கணக்கானோர் பணியாற்றும்
அலுவலகத்தில்,
மதிய உணவை அவர்கள் இருவரும்
சேர்ந்து உண்பது தினப்படி வாடிக்கையாய்
இருக்கிறது.
சிரித்து மகிழ்ந்த வார்த்தகளினூடாக
பிரியாணியின் மணமோ
எலுமிச்சை சாதத்தின் சுவையோ …?

வழக்கமாய்க் கல்லூரிக்கு அல்லது வேலைக்குச்
செல்லுமவள்
ஒன்பதரை மணிப்பேருந்தைத்தான்
தவறாமல் பிடிக்கிறாள்.
நடத்துனர் இருக்கை அருகே அவளுக்கென
ஒதுக்கி வைக்கிறான் ஒன்றை.

எப்போது சந்தித்தாலும் வழியென்றும் பார்க்காமல்
அரைமணிநேரம் பேசிச்செல்கிறாள்
அவனிடம்.
சிரிக்கச் சிரிக்கப் பேசுமவனிடம்
உரையாடுவதில் குடும்பக் கவலைகூட
மறந்து போகிறதாம் அவளுக்கு.

ஏதோ ரு பிரியத்தில்
’ஒருவிஷயம் பேசவேண்டும்’, என
பூங்காவிற்கோ கடற்கரைக்கோ வரச்சொன்னவள்
அவன் மூன்று சிகரெட் பிடிக்கும்வரை
உற்றுப்பார்த்தபடி இருந்துவிட்டு,
‘மகன் டியூஷனில் இருந்து வந்துவிடுவான்’,என
அவசரமாய் ஆட்டோவில் ஏறிப்போகிறாள்.

ஐஸ்கிரீம் பார்லரில் வேலை செய்யும் அச்சிறுவன்
வாடிக்கையாளர் இல்லாத
பொழுதெல்லாம்
பக்கத்தில் இருக்கும் பெட்டிக்கடைப்
பெண்ணிடம் ஒரே அரட்டை தான்.
‘அக்கா உங்ககிட்டபேசறதே ஜாலி’

மாநகரப் பேருந்தின் கூட்ட நெரிசலின்
மூச்சுத் திணறலுக்கஞ்சி
இளவயது பிஸிக்ஸ் மாஸ்டரின் பைக்கில் தான்
பள்ளிக்குச் செல்கிறாள் அந்த
மூத்த ஆசிரியை.

ஆண்டவன் கட்டளை சிவாஜி போல
தவறாத நேரம் கணித்துத்
தினந்தோறும்
அலைபேசியில் பேசிக் கொள்கிறார்கள்
அவன் அவளிடமோ
அவள் அவனிடமோ.

பரஸ்பர இணக்கத்துடன்
பிரியத்தின் பேரில் பேசிக்கொண்டும்
சிரித்துக் கொண்டும்
கபடமற்றிருக்கும் இவர்களைப்பற்றி
எங்கோ
யாரோ சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்
கள்ளக்காதல் என.

                தமிழ்மணவாளன்

Comments

Popular posts from this blog

இன்குலாப் என்னும் பொதுவுடைமைக் கவிஞன்

ஏற்புரை--தமிழ்மணவாளன்

தை முதல்நாளே தமிழர் புத்தாண்டு